கைக்குழந்தைக்கு பாதுகாப்பு கவசமாகத் திகழும் தாய்ப்பாலின் மகத்துவம்!

Child in mother's embrace
Child in mother's embracehttps://www.giftster.com

தாய்ப்பால் என்பது எவ்வளவு சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் ஆதி உணவு தாய்ப்பால்தான். அதற்கு ஈடான உணவு எதுவும் இல்லை. நம் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது பிறந்த சில நொடிகளில் குழந்தை பருகும் தாய்ப்பால்தான். தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் குழந்தையின் உணவுக் குழாயில் பாதுகாப்பு கவசமாக படிந்து விடும்.

குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஒரு வயது வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் குழந்தை பருவ உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்படும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்கள் தாய்ப்பால் மஞ்சளாகவே காணப்படும். இதற்கு கொலஸ்டிரம் (சீம்பால்) என்று பெயர். இதை குடிக்கும் குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் அணுகுவதில்லை. எனவே குழந்தைகளுக்கு எந்த நோயும் வராமல் இருக்க வேண்டுமானால் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அறிவு வளர்ச்சி மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். குழந்தை தாய்ப்பால் குடிப்பதால் தாயின் கர்ப்பப்பையும் விரைவில் சுருங்கும். எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதம், சர்க்கரை, கொழுப்பு சத்து பொருட்கள் இதில் உள்ளன. தாய்ப்பால் குழந்தையின் உடல் உறுப்புகளை சரியான முறையில் வளர்ச்சியடைய வைக்க உதவும்‌ புரதச்சத்து நிறைந்தது. சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்து அரை மணி நேரத்திற்குள்ளும், சிசேரியன் மூலம் பிறந்தால் குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

சீம்பால் தொடங்கி மூன்று வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக எந்த நோய் கிருமிகளிடமிருந்தும் பாதுகாப்பு பெற்றுவிடும். தாய்ப்பால் என்பது எளிதில் ஜீரணமாகக்கூடிய இயற்கை உணவாகும். இவை குழந்தையின் புத்தி கூர்மை, மூளை செயல் திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக செயல்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். அத்துடன் சத்தான உணவையும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

குழந்தையின் அழுகை, சிரிப்பு, ஸ்பரிசம் என்ற தொடுதல் இவையெல்லாம் தாய்க்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தக்கூடியது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது ஒரே மார்பிலிருந்து கொடுக்காமல் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் பால் கொடுக்காத பகுதியில் பால் கட்டிக்கொண்டு மிகுந்த வலியையும் வேதனையும் கொடுக்கும். ஒவ்வொரு மார்பிலும் 10 நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வாழை இலையிலிருக்கும் வளமான 5 ஆரோக்கிய நன்மைகள்!
Child in mother's embrace

பால் கொடுத்ததும் குழந்தையை உடனே கீழே கிடத்தாமல் சிறிது நேரம் தோள் மீது சாத்திக் கொண்டு தட்டிக் கொடுக்கவும். சிறு ஏப்பம் வந்ததும் கீழே கிடத்தலாம். இப்படிச் செய்வதால் பால் எதிர்த்து கொண்டு கக்காமல் இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் பல நன்மைகள் உண்டு. பாலூட்டுவதன் மூலம் பிரசவத்திற்கு பிறகான உடல் எடை குறைப்பு இயற்கையாகவே நிகழ்ந்து விடும். அடுத்த கருத்தரித்தல் தவிர்க்கப்படும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு, கோபம் ஆகியவை தடுக்கப்படும். மிகவும் முக்கியமான ஒன்று பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெரிதும் தவிர்க்கப்படும்.

தாய்மார்களுக்கு ஜுரம் இருந்தால் கூட குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம். இதனால் ஒன்றும் ஆகாது. ஆஸ்துமா, காசநோய் போன்ற சில  நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த நோய் குழந்தைகளுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். அதேசமயம் சில நோய்கள் இருந்தால் அதற்கான சிறப்பு மருத்துவரை கலந்தாலோசித்து மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com