ஒருவர் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், பல சாதனைகள் புரிந்திருந்தாலும், அதை இந்த உலகமே கொண்டாடினாலும் அந்த நபரால் அந்த வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நபர்களுக்கு தான் என்ன சாதித்திருந்தாலும் மனத்திருப்தி என்பதே இருக்காது. தன்னிடம் போதிய அளவு திறமையில்லை என்றே நினைத்துக்கொள்வார்கள். இந்த உளவியல் பிரச்னையைத்தான் Imposter syndrome என்று கூறுவார்கள். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு Art galleryயில் பலவிதமான ஓவியங்கள் இருக்கின்றன. எல்லா ஓவியங்களும் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், அதில் ஒரே ஒரு ஓவியம் மட்டும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது. அங்கு வந்த மக்கள் பலரும் அந்த ஒரு ஓவியத்தின் அழகையும், சிறப்பையும் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். ‘யார் இந்த ஓவியத்தை வரைந்தது? இத்தகைய சிறப்பான ஓவியத்தை வரைந்தவரை பாராட்ட வேண்டும்’ என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.
அந்த ஓவியரை சந்தித்து மக்கள் அவரின் ஓவியத்திறனை புகழ்ந்து பேசும்போது அந்த ஓவியர் கூறுகிறார். ‘அந்த ஓவியத்தை நான் வரையும்போது சில இடங்களில் கோணல்களாக போய்விட்டன, அந்த ஓவியத்திற்கு வேறு நிறத்தைப் பயன்படுத்தி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று குறைகளாகக் கூறத் தொடங்குகிறார். அவருடைய சாதனையை மக்கள் பாராட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அந்தத் திறமை, தகுதியில்லை என்று நினைக்கிறார்.
இன்னொரு உதாரணம் பார்த்தால், நம் அன்றாட வாழ்விலேயே நடக்கும். நம்முடைய அம்மா அன்றைக்கு என்று பார்த்து உணவை சுவையாக சமைத்திருப்பார். நாம் அதை பாராட்டுவோம். ‘இன்றைக்கு உணவு வேற லெவலில் சமைத்திருக்கிறீர்கள். சமைத்த கைகளுக்கு தங்க வளையல் போட வேண்டும்’ என்று பெருமிதமாக சொல்லும்போது அம்மா சொல்வார், ‘இன்று உணவில் உப்பு சரியில்லை, காரம் அதிகமாகிவிட்டது’ என்று ஏதாவது குறையை சொல்வார். இதுபோன்ற மனநிலையைத்தான் Imposter Syndrome என்று கூறுகிறோம்.
சிறு வயது முதலே குழந்தைகளை பெஸ்டாக இருக்க வேண்டும், பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்கள் ஆழ்மனதில் பதிய வைப்பதும் இதுபோன்று தன்னுடைய திறமையைப் பற்றியே தனக்கு சந்தேக எண்ணம் வருவதற்கு ஒரு காரணமாகும்.
இதை சரிசெய்வதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம். முதலில் நம்முடைய திறமைகளையும், சாதனைகளையும் பற்றி மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். உங்களுக்கே நீங்கள் செய்த செயல்களின் மீதான ஒரு தெளிவு கிடைக்கும். அப்படி மனம் விட்டுப் பேசும்போது மற்றவர்கள் பாராட்டுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அந்த பாராட்டுகளுக்கு தகுதியானவர்தான் என்பதை நம்ப வேண்டும். இவ்வாறு செய்யும்போது இந்த உளவியல் பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர முடியும்.