‘கிருஷ்ணாயில்’ என்றால் என்னவென்று தெரியுமா?

Kerosene Oil
Kerosene Oilhttps://www.business-standard.com
Published on

‘நமக்கு பாமாயில் தெரியும்,  சன்பிளவர் ஆயில் தெரியும். அதென்ன கிருஷ்ணாயில்?’ என்று மனதுள் யோசிக்கும் உங்களுக்காகத்தான் இந்த பதிவு. தற்காலத்தில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சமையலுக்குப் பயன்பட்டது கெரோசின் (Kerosene Oil) ஆயில்தான். அதாவது மண்ணெண்ணெய்.

கெரோசின் அக்கால மக்களின் வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒரு விஷயமாகத் திகழ்ந்தது. கெரோசினை அக்கால மக்கள், ‘கிருஷ்ணாயில்’ என்று அழைத்தார்கள். ‘கெரோசின் ஆயில்’ என்பது பேச்சுவழக்கில் மருவி, ‘கிருஷ்ணாயில்’ என்று ஆகிவிட்டது. பின்னர் இதுவும் மருவி பேச்சுவழக்கில், ‘கிஷ்ணாயில்’ என்று ஆனது.

ஒவ்வொருவரின் வீட்டிலும் ஐந்து லிட்டர் கெரோசின் கொள்ளும் முக்கால் அடி அகலமும் ஒன்றரை அடி உயரமும் கொண்ட ஒரு தகர டின் இருக்கும். மேற்புறத்தின் ஒரு ஓரத்தில் இதற்கான திருகு மூடி இருக்கும்.  மறுபுறத்தில் டின்னைத் தூக்கிச் செல்ல ஒரு பட்டைக் கைப்பிடி அமைந்திருக்கும்.

அக்காலக் கடைகளில் கெரோசின் விற்பனைக்குக் கிடைக்கும். ரேஷன் கடைகளிலும் மாதத்திற்கு ஐந்து லிட்டர் கெரோசினை சலுகை விலையில் தருவார்கள். இதை ஊற்றும் அன்று ரேஷன் கடைகளில் பெருங்கூட்டம் காணப்படும். காலை முதலே வந்து வரிசையில் கையில் டின்னை வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள்.

அடுப்பை முதலில் எரியூட்டுவதற்கு விராட்டியில் சிறிதளவு கெரோசினை ஊற்றிக் கொளுத்துவார்கள். சற்று நேரம் கழித்து விறகினை நுழைப்பார்கள். பத்து நிமிடத்தில் விறகு பற்றி எரியத் தொடங்கும்.

திரி வைத்த கெரோசின் ஸ்டவ் அக்காலத்தில் உபயோகத்தில் இருந்தது. ஒரு ஸ்டவ்வில் ஒரு அங்குல அளவிற்கு ஆறு பட்டைத்திரிகள் காணப்படும். கீழே உள்ள டேங்க்கில் கெரோசினை ஊற்றி திரிகளைக் கொளுத்தினால் ஸ்டவ் எரியத் தொடங்கும். இதில்தான் சமைப்பார்கள்.

திரி ஸ்டவ்களுக்குப் பின்னர் பம்ப் ஸ்டவ் உபயோகத்திற்கு வந்தது. பித்தளையால் ஆன இந்த பம்ப் ஸ்டவின் கீழ்பாகத்தில் கெரோசின் டேங்க் இருக்கும். டேங்க்கின் மேற்பகுதியில் பர்னர் இருக்கும். டேங்கில் பம்ப் செய்ய ஒரு பிஸ்டன் இருக்கும். முதலில் பிஸ்டனால் பம்ப் செய்ய வேண்டும். அதனால் பர்னர் பகுதியில் கெரோசின் கசியும். பின்னர் அதை தீக்குச்சியால் கொளுத்தினால் மெல்ல எரியத் தொடங்கும்.  இப்போது வேகமாக பம்ப் செய்ய வேண்டும். அக்காலத்தில் இத்தகைய பித்தளை பம்ப் ஸ்டவ்கள் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டுமே உபயோகத்தில் இருந்தன.

பித்தளை பம்ப் ஸ்டவ்விற்குப் பின்னர் இரும்பாலான பம்ப் ஸ்டவ்கள் பயன்பாட்டிற்கு வந்தன.  இதில் டேங்க பக்கவாட்டில் இருக்கும்.  இரும்பால் ஆனதாக இருந்ததால் விலையும் அனைவரும் வாங்கும்படியாக இருந்தது. இந்த ஸ்டவ் பல வருடங்களுக்கு வெற்றிகரமாக அனைத்துத் தரப்பினராலும் உபயோகிக்கப்பட்டது. பம்ப் ஸ்டவ்களை சர்வீஸ் செய்வதற்கென்றே அப்போது ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் கொண்டு சென்று கொடுத்தால் ஸ்டவ்வை சுத்தம் செய்து தருவார்கள்.

இதையும் படியுங்கள்:
மைக்ரோவேவ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட கதை!
Kerosene Oil

அக்காலத்தில் குக்கர் போன்ற சமையல் சாதனங்கள் கிடையாது.  ஸ்டவ்வில் சமைப்பதால் எல்லாமே மெதுவாகத்தான் முடியும். தற்போது உள்ளது போல ஒரே சமயத்தில் பலவற்றை வேகவைத்து எளிதில் சமைக்க முடியாது. ஒன்று முடிந்த பின்னர்தான் மற்றொன்றை சமைக்கத் தொடங்க வேண்டும். இதனால் பெண்களுக்கு காலையில் எழுந்தது முதல் இரவு வரை அடுப்பங்கரையிலே வேலை இருந்தது.

இக்காலத்தில் ஆண்கள், பெண்களுக்கு சமையலில் உதவிகள் செய்கிறார்கள். ஏன் சமைக்கக்கூடச் செய்கிறார்கள். ஆனால், அக்காலத்தில் இதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆண்கள் சமையல்கட்டுப் பக்கம் செல்வதை கௌரவக் குறைவாக நினைத்தார்கள். தற்காத்தில் இந்த நிலை மாறி விட்டது. வரவேற்கத்தக்க நல்ல மாற்றம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com