மைக்ரோவேவ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட கதை!

 Microwave oven
Microwave oven

உலகில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு அறிவியல் விஷயங்கள் எதேச்சையாகவே கண்டுபிடிக்கப்பட்டவை.  நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு விஷயத்தின் பின்பும் ஒரு அறிவியல் உண்மை மறைந்திருக்கிறது. இதைக் கூர்ந்து கவனித்து சிந்திப்பவர் அறிவியல் அறிஞர் ஆகிறார். அந்த வகையில் மைக்ரோவேவ் அடுப்பும் எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி என்று பார்ப்போம். 

தற்காலத்தில் பலருடைய சமையலறைகளில் மைக்ரோவேவ் அடுப்பு இடம் பிடித்திருக்கிறது. இதை எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச் செல்லலாம் என்பதும் இதன் சிறப்பு. இந்த கண்டுபிடிப்பு கூட ஒருவரால் எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது.  

ரேடாரில் மேக்னட்ரான் எனும் மின்னணுக் குழாயைப் பொருத்துவது தொடர்பான ஒரு ஆராய்ச்சி 1946 ஆம் ஆண்டில் நடைபெற்றது.  ஒருவகை மின்காந்தக் கதிர்வீச்சை [Electromagnetic Radiation] உருவாக்கக் கூடிய ஒரு வெற்றிடக்குழாயே மேக்னட்ரான் [Magnetrons] ஆகும். ராய்தியான் கார்பொரேஷன் [Raytheon Corporation]  என்ற நிறுவனத்தில் பணியாற்றிய  டாக்டர் பெர்சி லேபாரான் ஸ்பென்சர் [Dr. Percy LeBaron Spencer] எனும் பொறியாளர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.    

ஒருநாள் பெர்சி மேக்னட்ரான் குழாயை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்.   அப்போது எதேச்சையாக அவர் அந்த குழாயை தன் சட்டைப் பாக்கெட்டிற்கு அருகில் கொண்டு சென்றார். அவருடைய பாக்கெட்டிற்குள் இருந்த சாக்லெட் உருகத் தொடங்கியதை கவனித்தார். சாக்லெட் ஏன் உருகியது என்று ஆராய்ந்தார்.  அப்போதுதான் அவருக்கு ஒரு புதிய விஷயம் தெரிந்தது. தன் கையிலிருந்து மேக்னட்ரான் குழாயிலிருந்து வெளியான கதிர்வீச்சே சாக்லெட் உருகக் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார். சாக்லெட்டை மேலும் ஆராய்ந்த போது அந்த சாக்லெட்டானது எந்தவித தீமையும் அடையவில்லை என்றும் புரிந்து கொண்டார்.    

இதையும் படியுங்கள்:
அருங்காட்சியகத்தில் ஐன்ஸ்டீன் மூளையின் 46 சிறிய பகுதிகள்! மூளையைப் பாதுகாத்த மருத்துவர்!
 Microwave oven

பெர்சியின் அறிவியல் மூளை மேலும் யோசிக்கத் தொடங்கியது. இந்த கதிர்வீச்சைப் பயன்படுத்தி உணவைச் சமைக்க ஒரு கருவியை உருவாக்கினால் என்ன என்று யோசித்துப் பார்த்தார். உடனே மக்காச்சோளத்தைக் கொண்டு வந்து அந்த குழாயின் அருகில் கொண்டு சென்றார். சோளம் பொரிய ஆரம்பித்தது. தொடர்ந்து மேலும் பல சோதனைகளை செய்து பார்த்தார். அவர் நினைத்தபடி அனைத்தும் வெற்றிகரமாகவே முடிந்தன.     

தொடர்ந்து பணியாற்றி மேக்னட்ரான் குழாயை பயன்படுத்தி ஒரு சமையல் அடுப்பை உருவாக்கினார். இவர் உருவாக்கிய அந்த அடுப்புதான் முதல் மைக்ரோவேவ் ஒவனாகும். இதற்கு ரேடார் ரேஞ்ச் என்று பெயர் சூட்டப்பட்டது.

ராய்தியான் கார்பரேஷன் முதல் மைக்ரோவேவ் அடுப்பை 1954 ஆம் ஆண்டில் உருவாக்கியது. இதைத் தொடர்ந்து ராய்தியான் கார்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த அமானா எனும் நிறுவனம் 1967 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மைக்ரோவேவ் அடுப்பை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னரே வீடுகளில் பரவலாக இந்த அடுப்பு பயன்படுத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com