முழு திருப்தியுடன் வாழ எவையெல்லாம் அவசியம் தெரியுமா?

Fully satisfied life
Fully satisfied life

னிதன் என்றும் எதிலுமே முழு திருப்தி அடைவதில்லை. பசிக்கு உணவு, உடுத்த உடை, இருக்க ஒரு வீடு இருந்தால் போதும் என்றுதான் அவன் ஆரம்பத்தில் நினைப்பான். இவை எல்லாம் கிடைத்து விட்டாலோ, அவன் மனம் மேலும் மேலும் வேறு ஒன்றின் மீது ஆசைப்படுகின்றது. பெரிய வீடு வேண்டும், சொகுசு கார் வேண்டும், கையில் ரொக்கப் பணம் அதிகம் வேண்டும் என்று அவன் மனம் முடிவில்லா ஆசைகளுக்கு வித்திட ஆரம்பித்து விடுகின்றது. ஒருவன் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும், அவனால் முழு திருப்தியுடன் வாழ முடியுமா?

மனிதனால் ஏன் முழு திருப்தியுடன் வாழ முடியவில்லை? அவனது ஆசைகள் முழுமையாக நிறைவேறாததால்தானே அவனால் முழு திருப்தியுடன் வாழ முடியவில்லை? மனிதன் பணம், பதவி, புகழ் மற்றும் காதல் வாழ்க்கையில் அதிகம் எதிர்பார்க்கின்றான். அவனது குழந்தைகளும் இவை எல்லாவற்றையும் பெற வேண்டும் என்று விரும்புகின்றான். இவைதான் அவனுக்கு நிரந்தர இன்பத்தைக் கொடுக்கும் என்று தப்புக் கணக்கு போடுகின்றான். மனித மனம் இன்பத்தை வெளி உலகில் தேடுகின்ற வரை, பொருள் உலகில் இன்பத்தை தேடுகின்ற வரை அவனது மனம் திருப்தி அடையவே அடையாது என உறுதியாகச் சொல்லலாம். அம்பானி இன்னும் சம்பாதிக்க ஆசைப்படுவதேன்? அவராலும், மூன்று வேளைக்கு மேல் சாப்பிட முடியாதுதானே? பின் எதற்கு இந்த முடிவில்லாத பணத் தேடல்? பணம் தனக்கு முழுமையான சந்தோஷம் தரும் என்று அவர் நம்புவதினால்தானே அவர் இன்றும் பணத்தின் பின் ஓடுகின்றார்.

ஆனால், உண்மை என்னவென்றால், உண்மையான சந்தோஷம் நம்முள் இருக்கின்றது. அதாவது, சந்தோஷம் என்பது ஒருவிதமான மனநிலை. கோடியில் புரளுபவர் இரவில் தூக்கம் இல்லாமல் பட்டு மெத்தையில் புரள்வதைப் பார்க்கின்றோம். அதேசமயம், ஒரு கூலித் தொழிலாளி வெறும் தரையில் சுகமாகத் தூங்குவதையும் பார்க்கின்றோம்.

ஆக, நம்மிடம் பணம், பதவி, அந்தஸ்து, உறவுகள் எதுவுமே இல்லாமல் போனாலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும், நமக்கு அத்தகையான மனப் பக்குவம் இருந்தால். பணம் சம்பாதிப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. வாழ்க்கையில், மேலும் மேலும் உயரப் பறக்க நினைப்பவர்களை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. பணம் கொஞ்சமாக இருந்தாலும், நிறைய இருந்தாலும், என்றுமே மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. மேலும் உயர முயற்சி செய்வது ஒருபுறம் இருந்தாலும், இன்று நம்மிடம் என்ன உள்ளதோ அவற்றில் முழு திருப்தி அடைந்து சந்தோஷமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது நம்மிடம் இருக்கின்ற வீடு, துணை, குடும்பம், அந்தஸ்து எல்லாவற்றிலும் திருப்தியும் சந்தோஷமும் அடையப் பழக வேண்டும். இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. எதை இழந்தாலும், மனது பக்குவமடைந்து இருந்தால், பெரிய துன்பங்களாய் தோன்றாது.

இதையும் படியுங்கள்:
உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடும் நபரா நீங்கள்? அச்சச்சோ! 
Fully satisfied life

மனம்தான் ஒருவனின் சுக, துக்கங்களை நிர்ணயிக்கின்றது. மனதை பக்குவப்படுத்தி பழகி விட்டால், எப்பொழுதுமே நம்மால் இன்பமாய் முழு திருப்தியுடன் வாழ முடியும். இது சொல்லுவதற்கு எளிது. ஆனால், கடைப்பிடிப்பது மிகவும் கடினம். ஆகையினால் தான், மனிதன் இறக்கும்போது, ஏதோ ஒரு குறையுடன்தான் இறக்கின்றான். செல்வம் சேர்க்க முடியவில்லையே என்ற குறை, புகழ், அந்தஸ்து கிடைக்கவில்லையே என்ற குறை, நினைத்தபடி காதல் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லையே என்ற குறை, குழந்தைகளை சரியாக வளர்க்கவில்லையே என்ற குறை என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றபடி. அதனால்தான் அவன் மீண்டும், மீண்டும் பிறக்கின்றான் இவ்வுலகில்.

சந்தோஷம் என்பது நம் மனதில்தான் இருக்கின்றது. அதை வெளியில் தேடக் கூடாது. நியாயமான ஆசைகள் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதைப் பெறுவதற்காக எவ்வளவு முயற்சிகள் வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால், எந்நிலையிலும், சந்தோஷமாக வாழும் மனப் பக்குவம் அவசியம் பெற வேண்டும். அத்தகையான மன முதிர்ச்சியை மட்டும் நாம் பெற்று விட்டால், பின் நம் வாழ்வில் என்றுமே சந்தோஷம்தான்.

முழு திருப்தியுடன் வாழும் முறை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அப்படியே அந்த முறைகள் தெரிந்தாலும், அவற்றைக் கடைபிடிப்பது என்பது மிக மிக சிலருக்கே முடிகின்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இவ்வுலகில் முழு திருப்தியுடன் வாழ்பவர் எவருமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். யோகப் பயிற்சி, தியானம் போன்றவை நம் மனம் ஓரளவு பக்குவப்பட பெரிதும் உதவும் என்பது நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com