உப்பில்லா பண்டம் குப்பையைச் சேரும் என்பார்கள். அந்த அளவுக்கு உப்பு என்பது பல்வேறு உணவுகளில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும். நமது உடல் சரியாக இயங்குவதற்கு குறிப்பிட்ட அளவு உப்பு தேவைப்பட்டாலும் அதிக உப்பை உட்கொள்வதால் கடுமையான உடல் நல அபாயங்கள் ஏற்படலாம். இந்த பதிவில் அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பார்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்: அதிக அளவு உப்பு உட்கொள்வதால் ஏற்படும் முதன்மை ஆபத்துகளில், உயர் ரத்த அழுத்த அபாயம் மிக முக்கியமானதாகும். சோடியம் தண்ணீரை ஈர்ப்பதால், அதிகப்படியான சோடியம் உடலில் திரவத்தை தக்க வைக்கும். இதன் விளைவாக ரத்த அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சிறுநீரக பாதிப்பு: உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதிலும் கழிவுப்பொருட்களை வடிகட்டுவதிலும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக உப்பை உட்கொள்வதால் சிறுநீரகங்களின் சுமை அதிகரிக்கும். இது சிறுநீரக செயல்பாடு குறைவதற்கும், நீண்ட கால சிறுநீரக பாதிப்புக்கும் வழிவகுக்கும். ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக உப்பு உட்கொண்டால், அதன் பாதிப்பு மேலும் அதிகமாகலாம்.
வயிற்றுப் புற்றுநோய்: அதிக உப்பு உட்கொள்வதற்கும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிக உப்பு உட்கொள்வது வயிற்றின் உட்புறத்தை சேதப்படுத்தி, நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதே நேரம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கும் இது பங்களிக்கும்.
நீர்ப்பிடிப்பு: அதிக உப்பை உட்கொள்வது உடலில் தண்ணீரை தக்க வைத்து, வீக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதய செயலிழப்பு அல்லது கல்லீரல் நோய் போன்ற சில மருத்துவ நிலைமைகள் உள்ள நபர்களுக்கு இது குறிப்பிடத்தக்க சிக்கலை ஏற்படுத்தலாம்.
எலும்பு ஆரோக்கியம் பாதிப்பு: அதிக உப்பு உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பின் அடர்த்தி இழப்புடன் தொடர்புடையது. அதிகப்படியான உப்பு கால்சியத்தை வெளியேற்றுவதால், எலும்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க கால்சியம் மிக முக்கியமானதாகும். எனவே அதிக உப்பு சாப்பிடுவதால் எலும்பின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.
நமது உணவில் உப்பு முக்கிய அங்கமாக இருந்தாலும் அதை மிகமாக உட்கொள்வது அவசியம். உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் ஏராளம் என்பதால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உப்பை குறைவாகவே பயன்படுத்துங்கள்.