
இந்த பாரென்டிங் முறையில் பெற்றோர்கள் அளவிற்கு மீறிய வகையில் பெற்றோர் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த உலகில் தங்கள் பிள்ளைகள் எந்த தவறையும் செய்யாது நன்கு செயல்பட வேண்டும் என்று நினைப்பர்.
இந்த பெற்றோர்கள் எப்படி இருப்பர் தெரியுமா? இதை தடுப்பது எப்படி?
தங்கள் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து அவனுடைய வீட்டுப்பாடங்கள் சரியாக செய்கிறானா என்பதையும் மேற்பார்வை பார்த்து பிள்ளைகள் சலிக்கும் அளவிற்கு அவர்களை விரட்டிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த அளவு கடந்த கட்டுப்பாடுகளால் பிள்ளைகளுடன் சரியான தொடர்பு இல்லாமல் போகும். அதற்கு பதிலாக அவர்களாகவே அவர்கள் வேலையைச் செய்ய விடுவதில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களை தொடர்ந்து ஆராயக் கூடாது.
உங்கள் பிள்ளைகளின் பொழுது போக்குகள், அவர்களின் நண்பர்கள், மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு போன்றவற்றில் பிள்ளைகளின் விருப்பம் இல்லாமலேயே தாங்களே எல்லா முடிவுகளையும் ஹெலிகாப்டர் பெற்றோர்கள் எடுப்பார்கள். மேலும் சிலர் அவர்கள் என்ன உடை அணியவேண்டும் என்பதில் கூட கட்டாயப்படுத்துவார்கள். இப்படி இருப்பதைவிட அவர்களுக்கு சிறு விஷயங்களிலும் சுதந்திரமாகத் செயல்படவிட்டால் அவர்கள் வருங்காலத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் படைத்தவர்களாக ஆவார்கள்.
இந்த வகை பெற்றோர்கள் பிள்ளைகள் தவறு செய்யுமுன்பே தடுப்பார்கள். இது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக கஷ்டமாகும். தவறுகளிலிருந்துதான் வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் தவற்றை சுட்டிக் காட்டி திருத்துவதுதான் ஆரோக்கியமானது. அவர்கள் வீழ்ந்தாலும் திரும்ப எழும் அளவிற்கு தன்னம்பிக்கை பெற ஊக்குவிக்க வேண்டும்.
இந்த பெற்றோர்கள் பிள்ளைகளின் நட்பு மற்றும் விளையாட்டு போன்ற விஷயங்களில் தங்கள் கட்டுப்பாட்டை அனாவசியமாகத் திணிப்பார்கள். எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக இவர்களே செய்தால் அவர்களால் பிரச்னையான சமயங்களை கையாள முடியாமல் போகும். பிள்ளைகளின் சமூகத் தொடர்பில் அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடுடன் இருக்கக்கூடாது.
ஹெலிகாப்டர் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நேரமே இல்லாமல் பலவித பயிற்சிகளில் சேர்த்து அவர்களுக்கென்று நேரமே இல்லாமல் செய்து விடுவார்கள். இது அவர்களை சோர்வு படுத்தி அவர்களின் க்ரியேடிவிடியைக் குறைக்கும். குழந்தைகளை குழந்தைகளாக நினைத்து அவர்களுக்கென்று நேரம் தரப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆரோக்கிய சிந்தனையுடன் வளர முடியும்.