நீங்கள் ஒரு பீப்பிள் பிளீசராக இருந்தால் என்னென்ன இழப்புகள் ஏற்படும் தெரியுமா?

The Losses of Being a People Pleaser
The Losses of Being a People Pleaser
Published on

சிலர் எப்போதும் பிறரை மகிழ்விக்க வேண்டும்; திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார்கள். ஒரு மனிதனால் எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்தவே முடியாது. ஆனால், சிலர் எப்போதும் பிறரை மகிழ்விக்க வேண்டும், திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவார்கள். தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளை தள்ளிவைத்து பிறரை மகிழ்விக்க வேண்டும் என்று செயல்படும்போது அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தனிப்பட்ட அடையாளம்: ஒரு மனிதன் தன்னுடைய சொந்த ஆசை, விருப்பங்கள் போன்றவற்றை விட பிறருடைய எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது தன்னுடைய சுயத்தையும் அடையாளத்தையும் இழந்து விடுவார். ஒவ்வொரு முறையும் பிறர் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளும்போது தனக்கு என்ன பிடிக்கும், தன்னுடைய விருப்பங்கள் ஆசைகள் என்ன என்பதே மறந்து அல்லது உணர்ந்துகொள்ளத் தவறி விடுவார். தான் யார் என்று தன்னைப் பற்றி ஒரு தெளிவான வரையறை இல்லாமல் போய்விடும்.

சுயமரியாதை: பிறரை திருப்திப்படுத்துகிறேன் என்று ஒரு காரியத்தில் இறங்கும்போது தன்னுடைய சுயமரியாதை சரிவதைக் கூட அவரால் கவனத்தில் கொள்ள முடியாமல் போகும். பிறருக்குப் பிடித்தமான செயல்களை செய்யும்போது, தனக்குப் பிரியம் இல்லாத, விருப்பம் இல்லாத செயல்களை செய்ய நேரிடும். அது ஒருவருடைய சுயமரியாதையைக் குறைக்கும் உணர்வுகளுக்கு வழிவகுக்கும். பின்னாட்களில் அது குற்ற உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.

நேரம் + சக்தி இழப்பு: பிறரை மகிழ்விப்பவர்கள் பெரும்பாலும் தங்களது தனிப்பட்ட நேரத்தையும் சக்தியையும் இழக்கிறார்கள். தனக்கான நேரத்தையும் பெரும்பான்மையான ஆற்றலையும் பிறருக்காக செலவிடும்போது தனக்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளாமல் தன்னுடைய சுய முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்த நேரம் இல்லாமல் போகும்.

சரியும் மரியாதையும் குறையும் மதிப்பும்: எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு எல்லைக்கோடு மிகவும் அவசியம். அதைத் தாண்டி பிறரை திருப்திப்படுத்த நினைக்கும்போது அது எல்லா நேரங்களிலும் சாத்தியமாக முடிவதில்லை. அப்போது அவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதையும் மதிப்பும் குறையக்கூடும்.

வளர்ச்சியில் தடை: தன்னுடைய இலக்குகள், தேவைகளை கவனிக்காமல் பிறரை திருப்திப்படுத்துவதிலேயே காலம் கழிக்கும்போது அங்கே தனி மனித வளர்ச்சிக்கு வழியே இல்லாமல் போகும். தன்னைப் பற்றிய ஒரு தெளிவான தீர்மானம் அல்லது வரையறை இல்லாமல் போக நேரிடும்.

இதையும் படியுங்கள்:
நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்தும் சில யோசனைகள்!
The Losses of Being a People Pleaser

மன, உடல் ஆரோக்கியம் கெடுதல்: தொடர்ந்து பிறரை திருப்திப்படுத்த நினைத்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்போது, அது எக்கச்சக்கமான மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் முடியும். மேலும், உடல்நலப் பிரச்னையும் அதிகரித்து ஒட்டுமொத்த நல்வாழ்வையும் சீர்குலைக்கும்.

முடிவெடுக்கும் திறன் இல்லாமை: எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் திறன் அவசியம் தேவை. பலரிடம் கருத்து கேட்பதில் தவறில்லை. ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான். முடிவெடுக்கும் திறன் இல்லாமல் பிறருடைய கருத்துக்களை அதிகமாக நம்புவது மனதைக் குழப்பி, சுதந்திரமான மற்றும் நம்பிக்கையான தீர்வுகளை தேர்வு செய்யும் திறனை குறைக்கும். பொதுவாக, பிறரை திருப்திப்படுத்த நினைக்கும் ஆசாமிகள் பெரும்பாலும் தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.

இதை சமாளிப்பது எப்படி?

ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர். அவரது விருப்பம், ஆசை, லட்சியம் போன்றவை இன்னொரு மனிதரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இதைப் புரிந்து கொண்டால் பிறரை திருப்தி செய்யும் எண்ணம் தோன்றாது. பிறருக்குத் தர வேண்டிய மதிப்பு, மரியாதையில் எந்த குறையும் வைக்காமல் அதேசமயத்தில் அவர்களுடைய விருப்பங்களுக்கெல்லாம் தலையாட்டி அதன்படி நடக்காமல் தனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதன்படி நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com