வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதும் எளிமையாக அமைத்துக் கொள்ளுவதும் நம் கையில்தான் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சில முக்கியமான யோசனைகளை இந்தப் பதிவில் தெரிந்துகொண்டு அவற்றை செயலாக்கிப் பயன் பெறுவோம்.
உங்கள் குடும்பத்தினரின் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் முதலானவை எல்லாவற்றிலும் இரு பிரதிகள் ஜெராக்ஸ் எடுத்து அதை ஒரு பாலித்தீன் ஃபைல் கவரில் போட்டு வையுங்கள். தேவைப்படும்போது சுலபமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஜெராக்ஸ் எடுக்க கடைக்குப் படையெடுக்கத் தேவையில்லை.
தற்காலத்தில் எல்லாவற்றிற்கும் பாஸ்போர்ட் புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை ஒரே சமயத்தில் இருபது அல்லது முப்பது பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஸ்டூடியோக்களுக்கு அடிக்கடி சென்று அதை பிரிண்ட் போடுவதைத் தவிர்க்கலாம்.
நீங்கள் உங்கள் வீட்டிற்கு டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் முதலான எந்த ஒரு உபகரணத்தை வாங்கினாலும் அதற்கான வாரண்ட்டி கார்டையும் பில்லையும் மொத்தமாக ஒரு இடத்தில் வைப்பதோடு, அதை நினைவிலும் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அந்த உபகரணம் பழுதானால் அது வாரண்ட்டியில் இருக்கிறதா அல்லது முடிந்து விட்டதா என்பதை சுலபமாக நீங்கள் கண்டுபிடிக்க உதவும்.
செப்டிக் டேங்கை சுத்தம் செய்த தேதியை அதன் மூடியின் மீது பெயிண்ட்டால் எழுதி விடுங்கள். அடுத்ததாக எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்பதை சுலபமாக அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
வங்கி அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்லும்போது உரிய பாரங்களை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். பணம் போடவோ அல்லது எடுக்கவோ நினைத்தால் வீட்டிலேயே அமர்ந்து அனைத்துத் தகவல்களையும் தவறின்றி நிதானமாகப் பூர்த்தி செய்து பாஸ் புத்தகத்தோடு செல்லலாம். இதனால் உங்கள் நேரம் கணிசமாக மிச்சமாகும்.
கூடுமானவரை வெளியாட்களைத் தொடர்ந்து உங்கள் வீட்டிற்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தராதீர்கள். உதாரணமாக, பால், நியூஸ் பேப்பர் முதலானவற்றை காலையில் நீங்களே அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்குங்கள். வீட்டு வேலைகளை அதற்கென ஆட்களை நியமிக்காமல் கூடுமானவரை நீங்களே செய்து கொள்ளுவது நல்லது. உங்கள் துணிகளை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக துவைக்க முடியாது. நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக சுத்தம் செய்ய முடியாது. உங்கள் வீட்டை வேறு யாராலும் உங்களை விட சிறப்பாக பெருக்க முடியாது.
பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும்போதோ அல்லது கோயில் போன்ற பொது இடங்களிலோ முன்பின் தெரியாதவர் எவரேனும் உங்கள் கைப்பேசியை உபயோகிக்கக் கேட்டால் தரவே தராதீர்கள். மீறி வற்புறுத்தினால் பேலன்ஸ் இல்லை என்று ஒரு பொய்யைச் சொல்லி விடுங்கள். அவர்கள் தங்கள் சிக்கலான விஷயங்களுக்கு உங்கள் கைப்பேசியை உபயோகிக்கும் பட்சத்தில் ஏதேனும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரலாம்.
ஏடிஎம் சென்று பணம் எடுக்கத் தெரியாதவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணத்தை எடுக்கவே சொல்லக்கூடாது. தற்காலத்தில் பிறரின் உதவியை நாடும்போது அவர் தவறானவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பணம் களவாடப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதிக அளவில் பணம் இருக்கும் சம்பளக் கணக்கு உள்ள ஏடிஎம் அட்டையை பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்காக தனியாக ஒரு வங்கிக்கணக்கைத் தொடங்கி அதற்கான ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துங்கள். இந்தக் கணக்கில் மாதத்தின் முதல் நாளில் ஐயாயிரம் ரூபாயையும் பதினைந்தாம் தேதி ஒரு ஐயாயிரம் ரூபாயையும் வரவு வைத்து மாதம் முழுவதும் அதைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை பணம் களவாடப்பட்டாலும் ஐயாயிரம் ரூபாயோடு போய்விடும்.