அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது செல்போன். அவரவர் வசதிக்கேற்ற விலைகளில் கிடைப்பதால் அனைவர் கைகளிலும் தவழும் குழந்தையாக மாறிவிட்டது இந்த செல்போன். நோக்கியா, சாம்சங், விவோ, ரியல் மீ, ஆப்பிள் என இந்தப் பெயர்களில் வரும் ஸ்மார்ட் போன்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ‘சம்பவ்’ என்றொரு போன் இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராணுவக் கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது. ராணுவத்தில் நடக்கும் விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியாத ஒன்று. நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்து விஷயங்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில சமயங்களில் சில விஷயங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பாதுகாப்பு குறைபாட்டை உண்டாக்கி விடுகின்றன.
அந்த வகையில் இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியே கசியாத அளவிற்கு, இந்திய ராணுவத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் தனியாக செல்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனுக்கு ‘சம்பவ்’ (Secure Army Mobile Bharat Version) என்று பெயரிடப்பட்டுள்ளது. நாம் வாட்ஸப் பயன்படுத்துவது போல, சம்பவ் செல்போனில் ‘எம்.சிக்மா’ என்கிற ஆப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வழியாக முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஜியோ, ஏர்டெல் ஆகிய சிம் கார்டுகளை 5ஜி தொழில்நுட்பத்தில் இந்த செல்போனில் பயன்படுத்த முடியும். ராணுவ அதிகாரிகளுக்கு தற்போது 30 ஆயிரம் சம்பவ் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய அதிகாரிகளின் எண்கள் இந்த போனில் ஏற்கெனவே பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஆவணங்கள் வெளியே கசிந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவ் செல்போன்களால் அத்தகைய தவறு நடைபெறுவதற்கு தற்போது வாய்ப்பில்லை. சம்பவ் செல்போன்கள் குறிப்பாக சீன எல்லை பகுதியில் பணியிலுள்ள முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல், ராணுவ ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பில்லை என்று ராணுவம் நம்புகிறது.
‘பெரிய ராணுவ ரகசியமா? சொன்னாத்தான் என்ன’ என்பது அடிக்கடி சாதாரண மக்களிடையே நடைபெறும் உரையாடல். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ராணுவ ரகசியங்கள் இனிமேல் அண்டை நாடுகளுக்கு கசியாமல் இருப்பதற்கு இந்த சம்பவ் செல்போன்கள் உதவிகரமாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.