
சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டும், மீம்களில் வலம் வரும் சிக்மா ஆண்களின் குணாதிசயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிக்மா ஆண்கள் தனிமை விரும்பிகள். இவர்கள் சமூக தொடர்புகளை விரும்புவதில்லை. தங்களை மகிழ்விக்க பிறர் தேவையில்லை என்று கருதுபவர்கள். ஆனால், தாங்கள் மனம் விரும்பியவர்களுடன் தனியாக இருப்பது பிடிக்கும். தங்களைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்று அதிகம் கவலைப்பட மாட்டார்கள். பிற ஆண்களைப் போல சமூகத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள். பிறர் பேசுவதை பொறுமையாக, மௌனமாக காது கொடுத்து கேட்பார்கள். ஆனால், இவர்கள் குறைவாகவே, தேவைப்படும்போது மட்டுமே பேசுவார்கள்.
இவர்கள் சிக்கலான சூழ்நிலைகளிலும் மற்றவர் தவறுகளைப் பார்க்கும் இயல்புடையவர்கள். பிறரை குற்றம் சொல்லும் முன் அவர் மீது இருக்கும் நியாயத்தைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து அதன் பின்பே ஒரு முடிவுக்கு வருவார்கள். குறைந்த இலக்குகளை மட்டுமே கொண்டிருந்தாலும், தாம் விரும்பிய முடிவு வரும் வரை தமது முயற்சியில் தீவிரமாக இருப்பார்கள். ரிஸ்க் எடுக்கும் குணத்தினர். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் என்று வரும்போது வெற்றிப் பாதையை மட்டும் தீர்மானிப்பதில்லை. கலாசார விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெறுப்பார்கள். அவற்றிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த நலன்களை விரும்புவார்கள். ஆக்கபூர்வமான சிந்தனையாளர்கள். தங்களுடைய உணர்வுகளை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
இவர்கள் மினிமலிஸ்டுகள். பிற ஆண்கள் போல ஆடம்பரங்களுக்கு முன்னுரிமை தருவதில்லை. ஒரு சிறிய வீட்டில் கூட பெரிய மாளிகையில் இருப்பதைப் போன்ற திருப்தியுடன் இவர்களால் வாழ முடியும். பொருட்கள் மீதும் அவ்வளவாக நாட்டம் இருக்காது. இவர்கள் அடிக்கடி விதிகளை மீறுவார்கள். தங்கள் சொந்த வழியில் பிரச்னைகளை கையாளவும், எதிர்கொள்ளவும் விரும்புவார்கள். தொழில் முனைவோராக இருப்பவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.
இவர்கள் பிறரை ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டவோ விரும்புவதில்லை. பிறர் தங்களை விடவும் அல்லது தான் பிறரை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுடைய நடவடிக்கையைப் பார்த்து பிறர் அவர்களை பின்பற்ற விரும்புவார்கள். ஆனால், இவர்கள் தலைமைப் பதவியை அவ்வளவாக விரும்புவதில்லை. தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற பிறருக்கு அதிகாரம் இல்லை என்று நினைப்பார்கள். அதேபோல, இவரும் யாருடைய வாழ்க்கையும் மாற்ற முயற்சி செய்ய மாட்டார்கள்.
சிக்மா ஆணாக இருப்பதின் நன்மைகள்:
இவர்கள் பெரும்பாலும் தனியாக வாழ்வதனால் தங்களை கவனித்துக் கொள்வதில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறார்கள். அதனால் தங்கள் பணிகளை விரைவாக முடிக்கிறார்கள். எப்போது எங்கிருந்தாலும் தங்கள் பாதையை மட்டுமே பின்பற்றுவார்கள். எந்த சூழ்நிலையிலும் நேரடியான அணுகுமுறையை கொண்டிருப்பார்கள்.
போதுமான சுதந்திரத்துடன் இருப்பதால் அவர்களுடைய வாழ்வு செழிப்பாக இருக்கும். எப்போதும் தனது சுற்றுப்புறத்தை பற்றிய சுய விழிப்புணர்வுடன் இருப்பதால், தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கவனத்தில் வைத்திருப்பார்கள்.