
தலைமைத்துவம் (leadership) என்பது தனி நபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்களை இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வழி காட்டும் ஒரு தனிநபர் அல்லது அமைப்பின் திறனை குறிக்கும். பொதுவான ஒரு விஷயத்தை செய்து முடிப்பதில் மற்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி மற்றும் ஆதரவை பயன்படுத்தி ஒருவர் சமூக தாக்கத்திற்கு ஆளாகின்ற நிகழ்வு முறை.
1) தாக்கத்தை உருவாக்கும் ஆற்றல்:
தலைமைப் பண்பு இருந்தால்தான் புதுமையான சிந்தனைகளை வெளிக்கொணர முடியும். தலைமை பண்பு உள்ளவர்கள் பிறரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி திறமையாக செயல்பட வைக்கும் ஆற்றில் உள்ளவர்களாக இருப்பார்கள். இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்த திறமைகளையும் குழு உறுப்பினர்களிடம் இருந்து வெளிக்கொணரும் வகையில் இவர்களுடைய செயல்பாடு அமையும்.
2) தன்னைத் தாண்டி சிந்திப்பது:
தங்களைப் பற்றி மட்டுமே நினைக்காமல் இருப்பது தான் தலைமைத்துவத்தின் அடிப்படை குணம். தலைமை பண்பு நிறைந்தவர்கள் மற்றவர்களின் நலனைப் பற்றி சிந்திப்பார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் தனக்கு கிடைப்பது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். இப்படி சிந்திப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன், மற்றவர்கள் எடுக்க தயங்குகிற விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
3) சிறந்த வழிகாட்டியாக இருப்பது:
வாழ்க்கை பிரச்சனையில் சிக்கித் தவித்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டுவது தலைமைத்துவத்தின் முக்கியமான பண்பாகும். பிரச்னையை அடையாளம் காண்பதும், அதை நல்ல வண்ணம் தீர்க்க வழி செய்வதும் முக்கியமான பண்புகள்.
4) தொலைநோக்கு:
நடைமுறையில் வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு வழி காட்டுவதுடன் தொலைநோக்குப் பார்வை இருப்பவர்களும் தலைமை பண்புகள் நிறைந்தவர்கள். தொலைநோக்குப் பார்வையில் வரும் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காணமுற்படுபவர்கள் சிறந்த தலைமை பண்புகள் நிறைந்தவர்கள்.
5) உறுதியுடன் செயல்படுதல்:
மற்றவர்கள் பாராட்டும் வகையில் திறமையுடன் செயல்படும் திறனையும், அதிகாரம் செலுத்தி பிறரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். செய்யும் செயல்களில் தயக்கம் காட்டாமல், அதிலிருந்து பின் வாங்காமல் உறுதியுடன் செயல்படுவதும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடந்து கொள்வதும், வெற்றி தோல்வி என எது வந்தாலும் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் மற்றவர்கள் மத்தியில் மதிப்பையும் மரியாதையும் பெற்று தரும்.
6) தலைமைப் பண்பு:
தலைமை தாங்குவது எளிதான விஷயம் அல்ல. ஒரு பெரும் சுமையை லாவகமாக தூக்கி சுமக்கும் திறன் அது. தலைமை பண்புகளைப் பெற ஒருவர் தன்னை முழுவதுமாக புரிந்தவராகவும், தன் மனதை அடக்க தெரிந்தவராகவும், தன் மீது முழு கட்டுப்பாடு உள்ளவராகவும் இருப்பது அவசியம். இப்படிப்பட்ட தலைமை பண்புகள் இருந்தால்தான் புதுமையான சிந்தனைகளை வெளிக்கொணர முடியும்.