

சுகமான வாழ்க்கைக்கு கடின உழைப்பு மிகவும் அவசியம். ஏனெனில், அது வெற்றி, தன்னிறைவு, மன வலிமை மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உழைப்பின்றி உயர்வில்லை. சோம்பலைத் தவிர்த்து, சுறுசுறுப்பாக இலக்கை நோக்கி கவனமாக உழைத்தால் மட்டுமே நிம்மதியான மற்றும் வளமான வாழ்க்கையை அடைய முடியும். கடின உழைப்பு திறமையையும், ஒழுக்கத்தையும் வளர்த்து வெற்றியைத் தேடித் தரும். அதிர்ஷ்டத்தையும் வரவழைக்கும்.
பிறரோடு ஒப்பிடாமல் இருப்பது: நம் வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நம் தனிப்பட்ட பயணத்தில் கவனம் செலுத்தி முன்னேறுவது நல்லது. சுகமான வாழ்க்கைக்கு பிறரோடு நம்மை ஒப்பிடாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது நம் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மன நிம்மதிக்கும் உதவும். நம்முடைய பலம், பலவீனம், இலக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி முன்னேற உதவும். மற்றவர்களின் வெற்றிகளைக் கண்டு பொறாமை கொள்ளாமல், அவர்களின் நிறைவுகளைப் பாராட்டி, நம் சொந்தப் பாதையில் முன்னேறிச் செல்வது அவசியம். இதன் மூலம் தேவையற்ற கவலைகள் நீங்கி, நம் தனித்துவத்தை உணர்ந்து, நம்பிக்கையுடன் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
தேவைகளை சுருக்குவது: எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு கிடைத்ததைக் கொண்டு வாழப் பழகினால் சுகமான வாழ்க்கை அமையும். தேவைகளைக் குறைப்பது என்பது ஆடம்பரங்களைத் தவிர்த்து, அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துவதாகும். ஆடம்பரங்கள் குறையும்போது அவற்றை அடைய வேண்டிய அழுத்தமும் குறைகிறது. இதனால் மன அமைதி கிடைக்கும். இயற்கையான பொருட்களையும், எளிமையான வாழ்வியலையும் நாடுவது ஆரோக்கியமான மற்றும் சுகமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து, குறைந்தபட்ச பொருட்களுடன் வாழப் பழகுவது வாழ்க்கையின் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் தேடுவதற்கான ஒரு வழியாகும்.
தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருப்பது: நமது வெற்றியும் தோல்வியும் நமக்கான அடையாளங்கள் அல்ல. அவை நமது கனவுகளையும், லட்சியங்களையும் அடைவதற்கான மார்க்கம் மட்டுமே. எனவே, நம்மை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்ள வெற்றி ஒரு தடையாக இருக்க அனுமதிக்கக் கூடாது. அதேபோல், தோல்வியை வாழ்க்கையின் இறுதி முடிவாக கருதி விடவும் கூடாது. தோல்வி என்பது முடிவல்ல, அது வளர்ச்சிக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு தூண்டுகோல் என்பதை உணர்ந்தாலே போதும். தோல்விகளைக் கண்டு துவளாமல் இருப்பதே வெற்றியை சுவைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
விட்டுக்கொடுக்கும் சுபாவம்: சுகமான வாழ்க்கைக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவம் மிகவும் அவசியம். ஏனெனில் இது உறவுகளை மேம்படுத்துகிறது. அனைவரிடமும் இணக்கமாக வாழ உதவுகிறது. விட்டுக் கொடுக்கும் பொழுது ஏற்படும் மனநிறைவு மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான வாழ்வைத் தருகிறது. சண்டைகள், மனக்கசப்புகளைத் தவிர்த்து சுமூகமாக பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. விட்டுக் கொடுக்கும் பொழுது, அது நம்மை வலிமையாகவும், பரந்த மனப்பான்மையுடனும் உணர வைக்கிறது. நம்மைச் சுற்றி நேர்மறையான சூழலை உருவாக்கும் இந்த விலைமதிப்பற்ற பண்பு.
வரவுக்குள் வாழ்வது: வருமானத்திற்கு ஏற்ற செலவுகளைச் செய்து சிக்கனமாக இருப்பது நம்மை மனநிம்மதி கொள்ளச் செய்கிறது. நமக்கு வரும் வருமானத்திற்குள் பட்ஜெட் போட்டு வாழ்வது, தேவைகளை சுருக்கிக் கொள்வது பணம் பற்றிய கவலைகள் குறைந்து நிம்மதியாக வாழ வைக்கும். பணத்தின் அருமை தெரிந்து, வரவுக்கு மீறி கடன் வாங்குவதைத் தவிர்த்து, கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும். 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்றில்லாமல் வரவு அறிந்து செலவு செய்தால் சந்தோஷம் நம் வசமாகும்.