

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் தேடுவது ஒரு அன்பான பெண்ணைத்தான். ‘எனக்கு வரப்போகும் மனைவி பெரிய மனது உள்ளவளாக இருக்க வேண்டும், என்னை குழந்தையைப் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும், நான் தப்பு செய்தாலும் மன்னிச்சு ஏத்துக்கணும்’ என்று பெரும்பாலான ஆண்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அத்தகைய பெண்ணின் அன்பைப் பெறத் துடிக்கும் ஆண்கள், அந்தப் பேரன்பின் பின்னால் இருக்கும் உணர்ச்சிகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்கிறார்களா என்பது இன்றும் ஒரு கேள்விக்குறிதான்.
பெண்ணின் பேரன்பும் ஆணின் அரைகுறை புரிதலும்: பெண்ணின் அன்பு மகா சமுத்திரம் போன்றது. அதில் அதீத அக்கறையும், ஆழமும் அதிகம். அவளுக்குப் பாதி அன்பு, பெயருக்குக் காதல் என்பதெல்லாம் தெரியாது. அவளது அகராதியில் 'சுமாரான அன்பு' என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவள் நேசிப்பில் முழுமைத்தன்மை இருக்கும். அவள் சந்தோஷமாக இருக்கும்போது அந்த வீடே அவளது சிரிப்பால் களைகட்டும். தனது கணவனை இந்த உலகிலேயே சிறந்த மனிதனாக உணர வைப்பாள். ஆனால், எதையுமே ஆழமாக நேசிக்கும் ஒரு பெண்ணால், காயப்படும்போது மட்டும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
பல ஆண்கள் மனைவியின் அரவணைப்பை, அன்பை விரும்புகிறார்கள். ஆனால், அவளது கண்ணீரையும் கோபத்தையும் கையாளத் தெரியாமல் ஓடுகிறார்கள். ‘சிறிய விஷயத்தைப் பெரிதாக்குகிறாய், ஓவராக ரியாக்ட் செய்கிறாய்’ என்று அவளைக் காயப்படுத்துகிறார்கள்.
உடல் நலமும் மனநலமும்: மனைவிக்கு உடல்நலம் சரியில்லாதபோது, எத்தனை ஆண்கள் அன்போடு மனைவியை கவனிக்கிறார்கள்? உடல் ரீதியான வலியைத் தாண்டி, அந்தச் சமயங்களில் அவளுக்கு ஏற்படும் மனரீதியான எரிச்சல் மற்றும் சிடுசிடுப்பிற்குப் பின்னால் ஒரு நீண்ட நாள் உழைப்பும் களைப்பும் இருக்கும். அப்போது ஆதரவாகப் பேசும் ஆண்கள் மிகவும் குறைவு. அவளது ஆதங்கத்தையும் கோபத்தையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் ஆண்களிடம் குறைவாகவே உள்ளது. அவளைக் குறை கூறுவதிலும், அவளது உணர்ச்சிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதிலுமே பல ஆண்கள் குறியாக இருக்கிறார்கள்.
பெண்ணிற்குத் தேவையான ‘புரிதல்’: ஒரு பெண்ணிற்குப் பட்டுப்புடைவைகளும் நகைகளும் தரும் மகிழ்ச்சியை விட, ‘நான் இருக்கிறேன்’ என்று கணவன் சொல்லும் ஒற்றை வார்த்தையும், அவளது மௌனத்தைப் புரிந்து கொள்ளும் மனமும்தான் அதிக நிம்மதியைத் தரும். அவள் கேட்பது உங்கள் நேரத்தையும், சிறு அங்கீகாரத்தையும் மட்டும்தான்.
பேரன்பு கொண்ட பெண் ஒரு பொக்கிஷம். அவளது உணர்ச்சிகளின் வேகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். அவளது கோபத்திலும் கண்ணீரிலும் உங்கள் மீதுள்ள அக்கறையே ஒளிந்திருக்கிறது. அவளது ஆழமான அன்பையும், அதன் தீவிரத்தையும் ஒரு ஆண் எப்போது பக்குவமாகப் புரிந்து கொள்கிறானோ, அப்போதுதான் அந்த இல்லறம் ஒரு நந்தவனமாக மாறும். பெண்ணின் பேரன்பை அங்கீகரிப்பதே ஓர் ஆணின் உண்மையான வெற்றி!
இல்லறத்தை இனிமையாக்க ஆண்கள் செய்ய வேண்டியது: வீட்டு வேலைகளில் உதவுங்கள். அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ‘மாத்திரை சாப்பிட்டியா?’ என்று கேட்பதோடு நிற்காமல், ஒரு கப் சூடாக காபி தயாரித்துக் கொடுத்து அவளை ஓய்வெடுக்கச் செய்யுங்கள். மனைவி பேசும்போது குறுக்கிடாமல் அல்லது உடனே தீர்வு சொல்ல முயலாமல், முழுமையாகக் காது கொடுத்துக் கேளுங்கள். பல நேரங்களில் அவளுக்குத் தேவை ஒரு தீர்வு அல்ல, தனது உணர்வுகளைக் கொட்ட ஒரு வடிகால்தான்.
‘உணவு நன்றாக இருக்கிறது. இந்த உடையில் நீ அழகாக இருக்கிறாய்’ என ஒரு வார்த்தை மனதாரப் பாராட்டுங்கள். அந்தச் சிறு அங்கீகாரம் அவளது நாள் முழுவதுமான களைப்பைப் போக்கிவிடும். அவள் சோர்வாகவோ அல்லது கவலையுடனோ இருக்கும்போது, தர்க்கரீதியாக விவாதிக்காமல் அவளை மென்மையாக அணைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொடுதல் ஆயிரம் வார்த்தைகளை விட அதிக ஆறுதலைத் தரும்.