இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பகல் நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு அதிகமாக இருந்தாலும் நாம் செய்யும் வேலைகளால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இரவு நேரங்களில் அப்படி அல்ல. எனவே, நாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1.அசைவ உணவுகள்: இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டீனும் கொழுப்பு சத்தும் உள்ளன. இறைச்சி உணவுகள் ஜீரணமாக மூன்று, நான்கு மணி நேரம் ஆகும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இதனால் செரிமான கோளாறு ஏற்பட்டு தூக்கம் கெடும். வாய்வுத் தொல்லை உண்டாகும்.
2. பால்: இதனை இரவு 9 மணிக்குள் பருகிவிட வேண்டும். பாலில் அதிக அளவு கால்சியம், புரோட்டின் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானது என்றாலும் பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்க நேரம் எடுக்கும்.
3. நீர் சத்துள்ள காய்கறிகள்: பூசணி, சுரைக்காய், சௌசௌ, கோவைக்காய், தர்பூசணி போன்றவை அதிக நீர் சத்துள்ளவை. இவற்றை இரவில் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தூக்கம் கெடும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவற்றை இரவில் எடுத்துக் கொள்ளுதல் கூடாது.
4. காபி மற்றும் டீ: வயிற்றில் இவை அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை அளித்து தூக்கம் வருவதை தடை செய்யும். எனவே, இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது.
5. ஸ்பைசி உணவுகள்: இவை அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்தவை. செரிமான கோளாறை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இவற்றில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் ஆகியவை உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.
6. சோடா கார்பனேட்டட் பானங்கள்: இவை அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரி நிறைந்தவை. சோடாவில் அதிக அளவு அமிலச்சத்து இருப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்று கோளாறு ஏற்பட்டு தூக்கம் கெடும்.
7. கீரை மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்: கீரையை இரவில் எடுத்துக் கொள்ளுதல் அஜீரணக் கோளாறை உண்டாக்கும். இரவில் கீரையை தவிர்ப்பது நல்லது.
8. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்: பாஸ்தா, பீசா போன்றவை அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்தவை. இவை உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தூண்டக்கூடியது. அதிக கலோரி கொண்ட இவை உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
9. தயிர், ஐஸ்கிரீம்: இவற்றையும் இரவு நேரங்களில் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. ஐஸ்கிரீமில் அதிக அளவு கலோரிகள் கொழுப்பு சர்க்கரை உள்ளது. இவற்றை இரவில் உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன் மந்தமான உணர்வு, உடல் பருமன் போன்றவை ஏற்படும்.
இவை தவிர, இரவில் அதிக கலோரிகள் நிறைந்த நெய், வெண்ணெய், எண்ணையில் பொரித்த பண்டங்கள் ஆகியவற்றை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக அளவோடு எதையும் உண்ணுதல் மிகவும் சிறப்பு.