இல்லாதவர்களுக்கு தானம் அளிப்பது நல்ல செயல். அதன் மூலம் நமது கர்ம வினைகள் தீருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தானம் அளிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கேற்ற பலன்கள் உண்டு. தானம் செய்வதன் மூலம் நமது தீய வினைகள் அகலும். சுபிட்சமான வாழ்வு கிட்டும். அதேசமயம் சில பொருட்களை யாருக்கும் தானமாகத் தரக்கூடாது.
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிப்பது புண்ணியச் செயல். தானத்தில் சிறந்தது அன்னதானம். பசி தீர்ந்து அவர்கள் மனம் நிறையும்போது, அன்னமிட்டவரின் மனமும் நிறையும். ஆனால், உண்ண முடியாத, பழைய, கெட்டுப்போன உணவை பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாது. அப்படித் தந்தால் பாவம் வந்து சேரும்.
நமக்குப் பயன்படாத பழைய பொருட்களை பிறருக்கு தானமாகத் தருவோம். அதில் சில நியதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். கிழிந்துபோன, அழுக்கான உடைகளை தானமாகத் தரக்கூடாது. அழுக்கு உடைகளை கல் உப்பு கலந்த தண்ணீரில் துவைத்து உலர்த்தி, மடித்து சுத்தமாகத்தான் தானம் தர வேண்டும்.
பழைய செருப்புகளை தானமாக வழங்கக் கூடாது. செருப்பு தானம் தர விரும்பினால் புதிது வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் பயன்படுத்திய விளக்கையும், பூஜை செய்த சுவாமி படத்தையும் தானமாகவோ, தம் பிள்ளைகளுக்கோ கொடுக்கக் கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
வீட்டில் பயன்படுத்திய பாத்திரங்கள், உடைந்த நாற்காலி, பயன்படுத்த முடியாத பொருட்களை பிறருக்கு தானமாக அளிக்கக் கூடாது. இதனால் தரித்திரம் வந்து சேரும்.
வீடு கூட்டும் துடைப்பத்தை தானமாக அளித்தல் கூடாது. துடைப்பம் மஹாலட்சுமியின் அம்சம். எனவே, லட்சுமி கடாட்சம் கிட்டாது. பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்கக் கூடாது. இதனால் வளர்ச்சி தடைபடும். கூர்மையான பொருட்களான கத்தி, ஊசி, கடப்பாரை, கத்தரிக்கோல் போன்றவற்றை தானம் அளித்தால் பகை வந்து சேரும்.