தற்காலத்தில் அனைவரிடத்திலும் கைப்பேசி உள்ளது. எவர் ஒருவரையும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால். எழுபது, எண்பதுகளில் தொலைபேசி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. ஒரு ஊரில் ஐந்து அல்லது பத்து வீடுகளில் தொலைபேசி வசதி இருந்தால் அது அதிசயம். அரசு அலுவலகங்களில் மட்டுமே நாம் தொலைபேசி கருவியை கண்ணால் பார்க்க முடியும். தொலைபேசி வசதி தேவைப்படுவோர் தபால் அலுவலகத்தில் முன்வைப்புத் தொகையினைக் கட்டி பதிவு செய்து வைக்க வேண்டும். இணைப்பு கிடைக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.
தொலைபேசியில் இப்போது போல அக்காலத்தில் நொடிப்பொழுதில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. அது ஒரு பெரிய சாகசமாக இருக்கும். முதலில் 0 என்ற எண்ணை டயல் செய்தால் மறுமுனையில் தொலைபேசி இணைப்பகத்தில் அமர்ந்துள்ள டெலிபோன் ஆபரேட்டர் எடுத்துப் பேசுவார். முதலில் நாம் நம்முடைய தொலைபேசி எண்ணை அவரிடம் தெரிவிக்க வேண்டும். பிறகு நாம் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டுமோ அந்த ஊரின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் அவரிடம் தெரிவிக்க வேண்டும். ‘காத்திருங்கள் கனெக்ட் செய்கிறேன்’ என்று சொல்லி ரிசீவரை வைத்துவிடுவார்.
இதற்கு, ‘டிரங்க் கால்’ என்று பெயர். நாம் டெலிபோன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். எப்போது ஆபரேடரிடமிருந்து அழைப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஐந்து நிமிடத்திலும் அழைப்பு வரலாம். அரைமணி நேரத்திலும் அழைப்பு வரலாம். சில சமயங்களில் ஒரு மணி நேரம் கூட ஆகும். தொலைபேசி மணி ஒலித்ததும் ஆபரேட்டர் பேசுவார். ‘லைன்லே இருக்காங்க. நீங்க இப்ப பேசுங்க’ என்று சொல்லிவிட்டு அவர் தன்னுடைய இணைப்பைத் துண்டித்துக் கொள்ளுவார். நாம் பேச வேண்டியவரிடத்தில் பேசலாம். பேசி முடித்ததும் இணைப்பைத் துண்டித்து மீண்டும் 0 டயல் செய்து டெலிபோன் ஆபரேட்டரை அழைத்து நம் தொலைபேசி எண்ணைச் சொல்லி, ‘கால் ஓவர்’ என்று சொன்னால் அவர் குறித்துக் கொண்டு எவ்வளவு தொகை ஆகியிருக்கிறது என்று சொல்லுவார். நாம் நம் வீட்டில் உள்ள ஒரு நோட்டில் இதை தேதி போட்டுக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
யாரிடமாவது மிக மிக அவசரமாக அடுத்த கணமே தொடர்பு கொண்டு பேசியாக வேண்டும் என்றால் அக்காலத்தில், ‘லைட்னிங் கால்’ என்ற ஒரு வசதி இருந்தது. நாம் டெலிபோன் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு நம் எண்ணைச் சொல்லி, ‘லைட்னிங் கால் பேச வேண்டும்’ என்று சொன்னால் அப்போது பேசிக் கொண்டிருப்பவர்களின் இணைப்புகளை உடனடியாகத் துண்டித்துவிட்டு நாம் பேச விரும்பும் எண்ணுக்கு அடுத்த நிமிடமே தொடர்பு ஏற்படுத்தித் தருவார். ஆனால், இதற்கு வழக்கத்தை விட பத்து மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அது அக்காலத்தில் மிகப்பெரிய தொகையாகும். எனவே, இந்த அழைப்பில் யாரும் பேச மாட்டார்கள். அக்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து தொலைபேசி ரிசீவரை சுத்தம் செய்து விட்டு பேசும் பகுதியில் ஒரு சிறிய வாசனை ஸ்ட்ரிப்பை வைத்து விட்டுச் செல்லுவார்கள்.
அக்காலத்தில் எஸ்.டி.டி. வசதி, ஐ.எஸ்.டி. வசதியெல்லாம் இல்லை. 1980களுக்குப் பின்னர் வீட்டிலிருந்தே பிற ஊர்களில் உள்ளவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் எஸ்.டி.டி. (Subscriber Trunk Dailing) வசதியும், வெளிநாடுகளுக்குப் பேசும் ஐ.எஸ்.டி (International Subscriber Dialing) வசதிகளும் அறிமுகமாயின. பிற்காலத்தில் 1990 வாக்கில் உள்ளுர் நபர்களைத் தொடர்பு கொள்ள கடைகளில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுப் பேசும் தொலைபேசிக் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தன.
வீட்டில் தொலைபேசி வசதி இல்லாதவர்கள் பயன்படுத்த தெருவிற்கு தெரு பிசிஓ (Public Call Office) கடைகள் அறிமுகமாயின. இத்தகைய கடைகளில் வரிசையில் நின்று தொலைபேசி வசதியைப் பயன்படுத்திய காலங்கள் உண்டு. தற்காலத்தில் கைப்பேசி வரவிற்குப் பின்னர் அனைத்தும் காணாமல் போய் விட்டன.