வளரும் குழந்தைகளிடம் நாம் அதிக கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு எவ்வப்போது என்னென்ன செய்துக்கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்துவைத்துக்கொள்ளுதல் மிகவும் முக்கியம். அந்தவகையில், குழந்தைகளுக்கு எப்போது இரண்டாவது மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆய்வு என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக சில பெற்றோர்கள், விரைவிலேயே தங்கள் குழந்தைகள் அனைத்தையும் செய்ய வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பள்ளியில் சேர்த்தவுடனே ஸ்போக்கன் இங்கிலிஷ், பாட்டு, நடனம் போன்ற அனைத்து வகுப்புகளிலும் சேர்த்து விடுவார்கள்.
அந்த குழந்தைகளுக்கு அவை பிடிக்குமா? என்று கூட அவர்கள் குழந்தைகளிடம் கேட்க மாட்டார்கள். பெற்றோர்கள் கூறிவிட்டார்களே என்பதற்காக அனைத்து வகுப்புகளுக்கும் குழந்தைகளும் செல்வார்கள். ஆனால், எத்தனை நாட்களானாலும் அந்த குழந்தைகள் அவற்றை சரியாகவும், முழுமையாகவும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் பிழை இல்லை. அவர்களை அந்த வயதிற்கான திறனுக்கும் அதிகமான செயல்களை செய்ய சொன்ன நம்முடைய பிழையாகும்.
குழந்தைகள் எந்தெந்த வயதில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு முறை உள்ளது. அதனை சரியாக செய்தால் மட்டுமே அந்தக் குழந்தையின் வாழ்க்கை, அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். குழந்தைகளை கவனிக்கும் நமக்கும் நிம்மதி கிடைக்கும். அப்படியிருக்க அவர்கள் எப்போது இரண்டாம் மொழியை கற்றுக்கொள்வது?
குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதிற்குள் 80 சதவிகிதம் முழுமைப் பெற்றுவிடும். எனவே அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்டமொழியைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். எப்படி அது சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்?
குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் அறிவானது இயற்கையின் வடிவாக இருக்கும். அதாவது எந்தக் கெட்ட எண்ணமும், எந்த லாஜிக்கும், முறைகளும், விதிகளும் இல்லாமல் இருக்கும். பின்னர் நாம்தான் அவர்கள் வளர வளர அனைத்தையும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மூளைக்கு சார்ஜ் செய்கிறோம். சரியாக 5 வயதாகும்போது ஒரளவு உலகின் சில வாழ்வியல் உண்மைகளைப் புரிந்துக்கொள்கிறார்கள்.
5 முதல் 7 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் குழைந்தகளுக்கு வாழ்க்கைப் பற்றிய புரிதல் மட்டுமே இருக்குமே தவிர, அதனைப் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டார்கள். ஆராய மாட்டார்கள். மன அழுத்தங்கள் என எதுவுமே இருக்காது. சிறிதளவு புரிதல், அழுத்தம் இல்லாத வாழ்க்கை, இவ்விரண்டினால், அவர்களின் கற்றல் திறன் அதிகம் இருக்கும். அப்போது நீங்கள் இரண்டாவது மொழியைக் கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், வேகமாகவும் முழுமையாகவும் கற்றுக்கொள்வார்கள்.
கற்றுக்கொடுப்பதற்கும் சில வழிமுறைகளை தெரிந்துக்கொள்ளுதல் வேண்டும்.
1. எந்த மொழிகளை எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ? அந்த மொழிகளை அன்றாடம் பேசும்போதே பயன்படுத்துங்கள். குழந்தைக்குப் பழக்கமாகும்.
2. அந்த மொழியில் சிறுபிள்ளைகளின் கதைப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.
3. முதலில் பேசக் கற்றுக்கொடுத்துவிட்டும், சில எளிய சொற்களை சொல்லிக்கொடுத்துவிட்டும் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடுங்கள்.
4. ஒரு விளையாட்டு முறையில் அந்த மொழியை பழக்குங்கள்.
5. அதேபோல் அவர்களுக்குப் பிடித்தமான கதைகளை மொழிப்பெயர்க்க கற்றுக்கொடுங்கள்.
6. முடிந்தளவு தாய் மொழியை நன்றாக பேசவும் எழுதவும் செய்யுங்கள். பின்னர் அதன்மூலம் மற்ற மொழிகளை சொல்லிக்கொடுங்கள்.
இந்த விதிகளைப் பின்பற்றி 5 முதல் 7 வயதிற்குள் சொல்லிக்கொடுத்தால், கற்றுக்கொடுப்பவருக்கும், கற்றுக்கொள்பவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.