பிள்ளைகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றும் விஷயம் எங்கிருந்து வருகிறது தெரியுமா?

பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தை
பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தை
Published on

பொதுவாக, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் அனைத்துமே அவர்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமே கற்றுக் கொள்ளப்படுகின்றன. எனவே, அவர்களை இந்த வயதுக்குள் செம்மைப்படுத்துவதுதான் சிறந்த வழி. இந்த வயதுக்குள் அவர்களிடம் நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்து விட வேண்டியது அவசியமும் கூட.

‘தற்கால குழந்தைகள் பெரியவர்களை மதிப்பதே இல்லை’ என்று அனைவரும் புலம்புகிறோம். இது எங்கிருந்து தொடங்குகிறது என்று கவனித்தால் குழந்தைகள் பெற்றோர்கள் பேசுவதை மட்டும் கவனிப்பதில்லை, பெற்றோர்கள் யாரிடமெல்லாம், எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். எனவே, நாம் வீட்டுப் பெரியவர்களிடம், பெற்றோர்களிடம் கோபமாகப் பேசுவது, கத்துவது, அலட்சியப்படுத்துவது, வேலையாட்களிடம் அதிகாரமாகவும், மரியாதை குறைவாகவும் நடந்துகொள்வது, பேசுவது என்று அனைத்தையும் கவனிக்கும் குழந்தைகள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டும். எனவே, நாம் குழந்தைகள் முன்பு பண்பான வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதையும் சொல்லிக்கொடுத்து அவர்கள் கற்றுக்கொள்வதை விட, பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால் அவர்கள் என்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவற்றை முதலில் நாம் பின்பற்ற வேண்டும். முற்காலத்தில் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்த குழந்தைகள் அவர்களிடம் நீதிக் கதைகள் கற்றும், வீட்டில் உள்ள அத்தை, சித்தப்பா, பெரியப்பா குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியதால் விட்டுக்கொடுக்கும் குணமும், காலையில் விளையாடும்போது சண்டையிட்டுக் கொண்டு, மாலையில் சமாதானம் ஆகும் குழந்தைகளுக்கு கோபமும், ஈகோவும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால், இப்போதைய நியூக்ளியர் குடும்பங்களில் நன்றாக சம்பாதித்து குழந்தைகளை நன்றாக வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் பெற்றோர்களால் அவர்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிட முடிவதில்லை.

குழந்தைகள் நன்றாக நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர வேண்டும் என்றால் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து நிறைய பேசவும், அவர்களுடன் நேரத்தை  செலவிடவும் தயங்கக் கூடாது. பெற்றோர்கள் வேலையிலிருந்து வந்ததும் எல்லோரும் ஹாலில் அமர்ந்து கொண்டு இன்றைய நாள் எப்படி இருந்தது, என்னவெல்லாம் நடந்தது என்று பேசிக்கொண்டால் இதைப் பார்த்து வளரும் குழந்தைகளும் நம்மிடம் எல்லா விஷயங்களை பகிர ஆரம்பிப்பார்கள்.

தினமும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுது டிவி பார்ப்பதோ, செல்போன் பார்ப்பதோ இல்லாமல் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசியபடி உண்பதுதான் நல்லது. குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து நம் கஷ்டம் அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு நம் வீட்டு நிதி நிலைமை நன்கு புரிய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் நம்முடைய எந்த செயலுக்கும் ஒத்து வருவார்கள். இல்லை என்றால் நம்முடைய வசதி தெரியாமல், ‘கார் வாங்கு, பைக் வாங்கு, ஸ்கூலுக்கு காரில் கொண்டு விடு’ என்று விவரம் தெரியாமல் பேசுவார்கள். எனவே, வீட்டின் நிதி நிலைமை, பொருளாதாரம் பற்றி குழந்தைகளுக்கு உணர்த்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
மூளையின் ஆரோக்கியம் காக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!
பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தை

அத்துடன், சுய ஒழுக்க பழக்கங்களையும் கற்றுத் தர வேண்டும். எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பதும், அவர்கள் சாப்பிட்ட தட்டுக்களை அவர்கள் அலம்பி அதனிடத்தில் வைப்பதும், பள்ளியிலிருந்து வந்ததும் உடைகளைக் களைந்து அதற்குரிய இடத்தில் போடுவதும், கை கால் அலம்புவதும் என சுய ஒழுக்கங்களை கற்றுத் தருவது நல்லது.

இப்படி குடும்ப சூழ்நிலை, சுய ஒழுக்க கட்டுப்பாடு இவற்றுடன் சோசியல் வேல்யூசும் கற்று வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பொறுப்புடன் திகழ்வார்கள். முக்கியமாக, பெற்றோர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் குழந்தைகள் முன்பு காட்டாமல் இருப்பது நல்லது.

இத்துடன் அம்மா ‘நோ’ சொல்லும் விஷயங்களுக்கு அப்பா ‘எஸ்’ சொன்னால் குழந்தைகள், அம்மா மறுத்தாலும் அப்பாவிடம் சென்று காரியங்களை சாதித்துக் கொள்ளும். இவை பின் நாட்களில் நமக்கு பெரும் பிரச்னையாக மாறிவிடும். எனவே, குழந்தைகளுக்கு அம்மாவோ, அப்பாவோ யார் எது சொன்னாலும் மற்றொருவர் அதற்கு உடன்பட வேண்டும். குழந்தைகளிடம் எதையுமே கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. சின்னச் சின்ன விஷயங்களை கவனம் செலுத்தி நாம் அவற்றை தவிர்த்தாலே நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகள் நன்கு வளருவார்கள் என்பது திண்ணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com