மூளையின் ஆரோக்கியம் காக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

ஜூலை 22, உலக மூளை தினம்
மூளையின் ஆரோக்கியம்
மூளையின் ஆரோக்கியம்https://tamil.boldsky.com
Published on

டலின் அனைத்து செயல்களுக்கும் மூளையே பிரதானமாக இருப்பது பலருக்கு தெரியும். மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும்போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும். நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

மூளையின் ஆற்றல் குறைந்தால், அது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும். இருப்பினும், சில மனித பழக்க வழக்கங்கள் மூளையின் ஆற்றலைக் குறைக்கின்றன. உங்கள் சில பழக்க வழக்கங்கள் சிறு வயதிலேயே உங்கள் மூளையை சேதப்படுத்தும். எனவே, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும் பழக்கங்கள் இருந்தால், அந்தப் பழக்கங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும். மேலும், இது நாள் முழுவதும் செயல்பட உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். அதோடு தலைவலி, சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ஆரோக்கியமான மூளையின் செயல்பாட்டிற்கு காலை உணவை தவிர்க்காதீர்கள்.

உங்கள் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள அது உங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீரைகள் மட்டுமல்ல, சிவப்பு நிற காய், கனிகள், ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வயதான காலத்தில் வரும் ஞாபக மறதி ஏற்படுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். மூளையை நல்ல நிலையில் வைத்திருப்பது சிறந்த உடல் நலனையும், அதிக மகிழ்ச்சியையும் வழங்கும்.

பாஸ்ட் புட் எனும் துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு தருவதுடன் மூளையின் செயல்பாட்டிற்கும் பங்கம் விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. துரித உணவுகள் மூளையின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துவதுடன், மூளையை சுருங்க வைக்கவும் செய்கிறது. இதனை தடுக்கும் ஆற்றல் வெள்ளைப் பூண்டு மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றுக்கு உண்டு என்கிறார்கள்.

கரையும் கொழுப்பு சத்துள்ள உணவுகள் நேரடியாக இரத்தத்தில் கலந்து அது மூளைக்கும் செல்கிறது. இதனால் மூளையில் அழுத்தத்தை உருவாக்கும். அது மூளையின் திறனை பாதிக்கிறது என்கிறார்கள் இங்கிலாந்து கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அன்றாட வாழ்வில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது உடலை கட்டுக்குள் வைக்க மட்டுமல்ல, உங்களின் மூளை நன்கு இயங்கவும் உதவுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் வேகம் குறைகிறது. அதனால் நினைவுத் திறன் பாதிக்கிறது என்பதை ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து 2 நிமிடங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள்!
மூளையின் ஆரோக்கியம்

நீண்ட நேரம் வாகனங்கள் ஒட்டுவது தவறு. தினமும் 2 முதல் 3 மணி நேரம் தொடர்ந்து வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு மூளையின் செயல்திறன் அவர்களின் நடு வயதில் குறைவதாகக் கண்டறிந்துள்ளனர் லாசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மூளையின் ஆற்றலை பாதுகாக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு நாளடைவில் அவர்களின் மூளை சுருங்கி விடுவதாகவும் அதனால் அவர்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எழுந்தவுடன் உடனடியாக உங்கள் மொபைலைப் பார்ப்பது மன அழுத்தத்தை அதிகரித்து, உங்களை சோர்வடையச் செய்யும். இது உங்கள் மூளையின் செயல்பாட்டை வலுவாக பாதிக்கின்றது.

மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை நினைவாற்றல் இழப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை ஊசலாட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க, குறைந்தது 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com