என்னேகிராம் என்பது மனிதர்களைப் பற்றிய ஒரு பழங்கால ஆளுமை சோதனையாகும். இதில் மொத்தம் ஒன்பது வகைகள் இருக்கின்றன. இதுபற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சீர்திருத்தவாதி (Reformer): இந்த வகையைச் சேர்ந்தவர்கள் பகுத்தறிவு மற்றும் லட்சியவாதியாக இருப்பார்கள். பரிபூரண பரிபூரணத்துவத்தை விரும்புவார்கள். கொள்கை கோட்பாடு உடையவர்கள். பரிபூரணத்துவத்தை விரும்புவதால் அதை பிறரிடமும் எதிர்பார்ப்பார்கள். இவர்கள் பிறரிடம் பச்சாதாப உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
2. உதவியாளர் (Helper): தாராள மனதுடையவர். பிறர் மீது அக்கறை உள்ளவர்கள். சில நேரங்களில் பிறர் மீது வைக்கும் அதீத அன்பும் அக்கறையும் இவரது சொந்த தேவைகளை தியாகம் செய்ய வைக்கும். தன்னையும் தன்னை கவனிக்கவும் இவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.
3. சாதனையாளர் (Achiever): தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த லட்சியம் உடையவர். ஆனால், தனது டைப் ஏ ஆளுமைத் தன்மையினால் எப்போதும் தன்னுடைய வேலையைப் பற்றி மட்டுமே நினைப்பார்கள். உறவு மேலாண்மை மற்றும் ஓய்வைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் வேலையையும் உறவுகளையும் சரிசமமாக பாவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
4. தனித்துவமிக்கவர் (Individualist): உள்முக சிந்தனையாளர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். தனது தனித்தன்மையினால் முன்னேறுவார்கள். ஆனால், ஒரு குழுவில் இவர்களுக்கு தொடர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்கும். பிறரை இவர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
5. புலனாய்வாளர் (Investigator): எப்போதும் தீவிரமான, ஆக்கப்பூர்வமான, புதுமையான சிந்தனைவாதிகள். குழுவில் வேலை செய்தால் அவரால் பிறர் பயனடைவார்கள். எப்போதும் புதுமையான சிந்தனையில் இருப்பார்கள். புதுமையான விஷயங்களை செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். அடிக்கடி பகல் கனவில் மூழ்கி விடுவார்கள்.
6. விசுவாசி (Loyalist): கடின உழைப்பாளி மற்றும் நம்பகத்தன்மை மிக்கவர். இவர்கள் விசுவாசமான மனிதராக இருப்பதால் எப்போதும் ஓவர் திங்கிங் மற்றும் கவலையில் இருப்பார்கள். இவர்கள் தங்களது கம்போர்ட் சோனை விட்டு வெளியே வர வேண்டும். புதியவர்களிடம் பேசிப் பழக வேண்டும்.
7. உற்சாகம் மிக்கவர் (The Enthusiast): இவர்கள் வேடிக்கையானவர்கள். புதியவர்களிடம் எளிதாகப் பழகுவார்கள். இவர்கள் இருக்கும் இடமே மிகவும் கலகலப்பாக இருக்கும். எப்போதும் புதிய புதிய விஷயங்களை செய்துகொண்டே இருப்பார்கள். புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையோடு மிக எளிதில் ஒன்றி விடுவார்கள். கேளிக்கை மனப்பான்மை மிக்கவர். இவர்கள் இலக்கு நிர்ணயித்தால் அதை கவனத்துடன் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
8. சவால் விரும்பி (Challenger): தன்னம்பிக்கை மற்றும் அசாதாரணமான உறுதிமிக்கவர். தலைமைப் பதவியில் இருப்பார்கள் அல்லது தலைமை பதவி அடைய முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். தன் கீழ் வேலை செய்பவர்களை கடுமையாக வேலை வாங்குவார்கள். இவர்கள் பிறர் மேல் பச்சாதாப உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
9. சமாதானவாதி (Peace maker): குழுவினரிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை மிக எளிதாக தீர்த்து வைப்பதில் வல்லவர். பகை உணர்ச்சி இவர்களுக்கு அறவே இருக்காது. ஆனால், அதீதமான பச்சாதாபத்தின் விளைவால் அடிக்கடி சோர்வு, பதற்றம், ஆர்வமின்மை போன்றவை ஏற்படும். மன ஆற்றலை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட 9 வகைகளில் நீங்கள் எந்த வகை என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களது குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளலாம்.