
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைப்போல உடனே பருவம் அடைவதில்லை. படிப்படியாகத்தான் மாற்றங்களை பெறுகின்றனர். ஆண்கள் பருவமடையும் பொழுது கை மற்றும் கால்களில் எடை கூடும். உயரம் மற்றும் தோள்கள் விரிவடைய ஆரம்பிக்கும். இடுப்பு தசைகள் வலிமைபெறும்.
தோள்பட்டை, இடுப்பு, முதுகுப்பகுதியில் தோல்கள் தடிமனாக ஆரம்பிக்கும். இவையெல்லாம் ஆண் பிள்ளைகள் பருவமடைதலுக்கு தயாராகின்றான் என்பதை குறிக்கும். பருவமடைய ஆரம்பிக்கும் பொழுது அதிக வியர்வை, முடி வளர்ச்சி மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கும். மீசை அரும்ப ஆரம்பிக்கும்.
பருவ வயதில் ஆண் பிள்ளைகளுக்கு குரல் உடைந்து போவதும், பருவமடைதலின் பொழுது உடலமைப்பு மற்றும் குரல்வளையில் ஏற்படும் மாற்றங்களின் ஒரு இயல்பான பகுதியாகும்.
குரலில் மாற்றம்:
பருவமடையும் பொழுது ஆண்களின் குரலிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அவர்களது குரல்வளையும், குரல் அறைகளும் கனக்க ஆரம்பிப்பதால் கனத்த குரலை பெறுவார்கள். இது பொதுவான விஷயம்தான் எனவே சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம். அதுவரை இருந்த மெல்லிய குரல் உடைந்து குரலில் ஒரு வலிமையும் கம்பீரமும் தோன்ற ஆரம்பிக்கும்.
குரல்வளை மாற்றம்:
உடலில் ஹார்மோன்கள் மற்றும் பிற உறுப்புகள் மாறுபடும்போது, குரல்வளை பெரிதாகி ஆழமான குரல் உருவாகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் குரல் உடைந்து கரகரப்பாக மாறும். பருவமடைதல் காலத்தில் ஆண்களின் குரல்வளை பெரிதாகவும் தடிமனாகவும் வளர்கிறது. இது குரலின் ஆழத்தை மாற்றுகிறது.
குரல் உடைதல்:
குரல்வளை பெரிதாகும்போது, அதன் தசை நார்கள் இயங்கும்போது ஏற்படும் உரசல் காரணமாக குரல் உடைந்துவிடும். இதனால் சில நேரங்களில் குரல் கரகரப்பாக மாறும். உடல் இந்த மாற்றங்களுக்கு பின்பு குரல்வளையின் புதிய அமைப்பிற்கு ஏற்ப தன்னை சரி செய்து கொள்ளும்பொழுது குரல் உடைவது போன்ற நிகழ்வுகள் குறைந்து விடும்.
இயல்பான நிகழ்வு:
பருவமடைதல் காலத்தில் குரல் உடைவது என்பது இயல்பான நிகழ்வாகும். பருவமடைவதற்கு முன் அவனது குரல்வளை மிகவும் சிறியதாகவும், குரல் நாண்கள் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் பருவமடைகையில் குரல்வளை பெரிதாகி, குரல் நாண்கள் நீளமாகவும் தடிமனாகவும் மாறும். இம்மாதிரி சமயங்களில் குரல் உடைந்து போகலாம். இவை சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும். குரல்வளை வளர்ச்சி அடைந்த பிறகு புதிய ஆழமான குரல் நிலையானதாக மாறிவிடும்.