
உங்களில் பலருக்கு உங்கள் குழந்தை நீங்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை என்றும், அப்படிக் கேட்டாலும் அதற்கு சரியானதொரு பதிலைக் கூறுவதில்லை என்றும் மனதிற்குள் ஓர் ஆதங்கம் இருக்கலாம். அதற்கான காரணம் பல நேரங்களில் நீங்கள் செய்யும் 5 விதமான தவறுகள்தான் என்று கூறலாம். அந்த தவறுகள் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
1. உரத்த குரலில் சத்தம் போட்டுப் பேசுதல்: உங்கள் குரலில் மென்மையின்றி, தேவையில்லாமல் அவர்களுடன் உரத்த குரலில் பேசும்போது ஆரம்பத்தில் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடும். தொடர்ந்து நீங்கள் அதே மாதிரி பேசும்போது அது அவர்களை எரிச்சலுறச் செய்யும். அப்போது நீங்கள் பேசுவதற்கு பதிலளிக்காமல் அவர்கள் மௌனம் சாதிக்கக் கூடும். நாளடைவில் அதுவே பழகி விடுவதால், நீங்கள் சொல்லும் எந்த விஷயத்திற்கும் அவர்கள் எதிர்வினையாற்றாமல் தன்னோட பிற செயல்களை செய்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அமைதியாக, ஒரே மாதிரியான குரலில் குழந்தைகளுடன் பேசுவது, நீங்கள் எதிர்பார்த்த பலனைத் தரும்.
2. அதிக அறிவுரைகளை அள்ளி வீசுதல்: குழந்தைகளின் கவனம், குறைவான பரப்பை சுற்றியே லயித்திருக்கும். அவர்களிடம் கல்லூரி பேராசிரியர் விரிவுரையாற்றுவதுபோல் அறிவுரைகளையும் வழிமுறைகளையும் வாரி வழங்கினால், ஒன்றிரண்டை காதில் வாங்கிக்கொண்டு, பிறகு கவனத்தை வேறுபுறம் செலுத்த ஆரம்பிப்பார்கள். அதற்கு பதில், எளிய முறையில் படிப்படியாக விஷயத்தை எடுத்துரைத்தால் அது அவர்களுக்கு சுலபமாக விளங்கிவிடும்.
3. போலியான பயமுறுத்தல்கள்: ‘இன்னிக்கி உன் அறையை நீ சுத்தம் பண்ணாவிட்டால், டிவி பார்க்க உனக்கு அனுமதி கிடையாது’ என்று மிரட்டுவது போல் குழந்தையிடம் கூறுவதால், வாக்குவாதம் தொடருமே தவிர, எந்த வேலையும் நடக்காது. அதற்குப் பதில் அறையை சுத்தமாக வைப்பதனால் கிடைக்கும் நன்மைகளை பொறுமையாக சொன்னால், குழந்தை புரிந்துகொண்டு, ‘அம்மா சொல்வது நியாயம்தான்’ என்றெண்ணியபடி செயலில் இறங்கும்.
4. வேறொரு செயலை செய்தபடி குழந்தைக்கு கட்டளையிடுதல்: வேறொரு இடத்திலிருந்து அல்லது போனில் கவனம் செலுத்தியபடி குழந்தையிடம் எதையாவது செய்யச் சொல்லுதல் குழந்தைக்கு அதன் மனதில், ‘நம் மீது முழு கவனம் செலுத்தாமல் எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க’ என்ற எண்ணம் வரும். பிறகு அதே பாணியில் உங்களிடம் நடந்துகொள்ள ஆரம்பிக்கும். நேருக்கு நேர் நின்று கண்களைப் பார்த்துப் பேசுவது நெருக்கத்தையும் மரியாதையையும் தரும்.
5. குழந்தை கூறுவதை உற்று கவனித்து உரையாடுதல்: குழந்தை உங்களிடம் ஏதாவது சொல்ல விரும்பும்போது அதை தவிர்க்க முயற்சிக்காமல் கவனமுடன் கேட்டு பதிலளிப்பது, உங்கள் மீது குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படவும் அடுத்த முறை நீங்கள் அதனிடம் எதையாவது சொல்லும்போது தகுந்த முறையில் பதிலளித்து நல்ல விதமாக நடந்துகொள்ள உதவும்.
நிலைத்த தன்மையுடன், தெளிவான, அமைதியான குரலில் குழந்தைகளிடம் நீங்கள் பேசினால், அவர்களும் மிக்க மரியாதையுடன் நீங்கள் பேசுவதை எப்பொழுதும் காது கொடுத்துக் கேட்கத் தயாராயிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.