நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பாதுகாப்பானதா?

Plastic products
Plastic products
Published on

செம்பு, பித்தளை என இருந்த உலோகங்களின் விலை அதிகமாகி அதன் பின் அலுமினியம், எவர்சில்வர் என்று வந்து காலப்போக்கில் விலை மலிவான பிளாஸ்டிக் (Plastic) எனும் நெகிழி வகையான பொருள்கள் நம்மிடையே அதிகம் பயன்பாட்டில் இருப்பது தெரிந்த விஷயம்.

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பெருகியதால் பிளாஸ்டிக் (Plastic) பயன்பாடு பலவித உடல் நலக் கேடுகள் தரும் பொருளாக ஆய்வுகள் தெரிவிக்க சாதாரண பிளாஸ்டிக் (Plastic) தடை செய்யப்பட்டு ஆரோக்கியம் கெடாதவகையில் தாவர அடிப்படையிலான மற்றும் மக்கும் பிளாஸ்டிக்குகள் (Bio Plastic) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் உள்ளது. தவிர்க்க முடியவில்லை எனினும் இன்னும் பிளாஸ்டிக் (Plastic) குறித்த சந்தேகம், அச்சம் விலகவில்லை.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (Plastic) எப்படி கடைகளில் விற்கிறார்கள்? எந்த வகை பிளாஸ்டிக் வாங்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறு விளக்கம் இங்கு.

பிளாஸ்டிக் என்றால் என்ன?

அழுத்தும் போதும், வளைக்கும் போதும் பல வடிவங்களில் மாற்ற உதவும் பொருள் எனும் அடிப்படையில் 'வார்க்கத் தக்க ஒரு பொருள்' என்ற பொருள் தரும் கிரேக்கச் சொல்லான 'பிளாஸ்டிகோஸ்' என்பதிலிருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. பாலிமர் எனப்படும் பெரிய மூலக்கூறுகளில் உள்ள பல சிறிய அலகுகளான மோனோமர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு வெப்பம் அல்லது அழுத்தத்தால் இளகி, பின்னர் குளிர்விக்கும்போது திடமாகி தேவைப்படும் வடிவங்களாக நம்மிடம் வருகிறது.

பிளாஸ்டிக்கின் முக்கிய தீமைகள்:

அவை எளிதில் மக்காத தன்மையுடன் சுற்றுச்சூழலை நீண்ட காலத்திற்கு மாசுபடுத்துகின்றன. நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்களை வெளியிட்டு காற்று, நீர் மற்றும் நிலத்தை நஞ்சாக மாற்றுகிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன, மேலும் பழைய பிளாஸ்டிக்கை எரிக்கும் போது வெளியாகும் வாயு கடுமையான ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துகிறது.

பிள்ளைகள் முதல் பெரியவர் வரை தண்ணீர் குடிக்கவும் மதிய உணவு எடுத்துச் செல்லவும் உதவும் பிளாஸ்டிக் தரமானதா என எப்படி அறிவது?

பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களை 1 - 7 வரை தரம் மற்றும் பயன்பாடு வகையில் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளின் பின்புறம் தரக்கட்டுப்பாடு தரும் சிம்பலுடன் ஒரு எண்ணும் இருக்கும். இவற்றில் நீங்கள் வாங்கும் குடிநீர் அல்லது உணவுக்கான பிளாஸ்டிக் பொருட்கள் பின் 1,2,4,5 என்று இருப்பதை தேர்வு செய்ய வேண்டும். புட் கிரேடு (Food Grade) எனும் உணவுத் தரத்தை குறிக்கும் வகைகள் இவை.

இதுமட்டுமின்றி கையினால் அழுத்தினால் நசுங்காமல் இருக்கும் கனமான (Thick) வகை பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவது நல்லது.

மீதமுள்ள 3,6,7 எண்கள் கொண்ட பிளாஸ்டிக்குகள் (UPVC பைப்) வேறுவிதமான பயன்பாட்டுக்கு உகந்தவை என அறியலாம். இதை வைத்தே தரமற்ற பிளாஸ்டிக் வாங்குவதை தவிர்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக்கை ஓரளவு குறைத்துள்ளோம்… ஆனால் மைக்ரோ பிளாஸ்டிக்?
Plastic products

பிளாஸ்டிக் பொருட்களை ஆரோக்கியமான முறையில் எப்படி பயன்படுத்துவது?

பிளாஸ்டிக் பொருட்களில் மிகவும் சூடான நீர் மற்றும் உணவுகளை கண்டிப்பாக வைக்கக்கூடாது. காரணம் குறிப்பிட்ட வெப்பநிலையை மட்டுமே பிளாஸ்டிக் தாங்கும். அதிக வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தை உணவில் கலந்து விடும் வாய்ப்பு உண்டு. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படலாம்.

இதே போல் அதிக வெயிலில் தண்ணீர் கேன் போன்றவைகளையும், அலுவலகம் செல்பவர்கள் பையின் சைடில் சூரிய வெப்பம் படும் வகையில் எடுத்துச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பராமரிப்பு குறித்து:

தினமும் உபயோகிக்கும் தண்ணீர் பாட்டில்களை தினம் இல்லை என்றாலும் 2 நாட்களுக்கு ஒரு முறை மிதமான நீரில் கல் உப்பு அல்லது மென்மையான சோப்பு கலந்து கழுவி மூடியை மூடாமல் அறை காற்றில் உலர விடுவது நல்லது. காரணம் எப்போதும் ஈரப்பதமான நிலையில் இருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. எந்தவொரு பொருளுக்கும் காலாவதி உண்டு. பிளாஸ்டிக் பொருட்களையும் பூஞ்சை பிடித்து தூக்கி எறியாமல் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைக்கிறீங்களா? இது உங்க உயிருக்கே ஆபத்து!
Plastic products

வெளியிடங்களுக்கு செல்லும் போது வாங்கும் மலிவு விலை 'யூஸ் அண்ட் த்ரோ' பாட்டில்களை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது ஆபத்தானது. அதிலிருக்கும் காலாவதி தேதி உள்ளிருக்கும் பொருளுக்கானது மட்டுமல்ல அந்த பாட்டிலுக்கும்தான் என்பதை புரிந்து விழிப்புணர்வு பெறுவது அவசியம்.

விலை மலிவுடன் உபயோகிக்கவும் எளிதாக இருக்கும் நன்மை கொண்ட பிளாஸ்டிக் வாங்குமுன் இதையெல்லாம் கவனத்தில் வைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com