கிரக தோஷங்களைப் போக்கும் தலையாட்டி விநாயகர்!

தலையாட்டி விநாயகர்
தலையாட்டி விநாயகர்

முற்காலத்தில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசிஷ்ட நதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. இதனால் இந்தப் பகுதி ஆற்றூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயரே காலப்போக்கில் மருவி ‘ஆத்தூர்’ என அழைக்கப்படலாயிற்று.

இந்த ஆத்தூரில்தான், ‘ஸ்ரீ தலையாட்டி விநாயகர் கோயில்" என்னும் சிறப்பு மிக்க கோயில் உள்ளது. இது ஆயிரம் வருடத்திற்கும் மேல் பழைமையான கோயிலாகும். நாம் செய்யும் எந்த ஒரு செயலிலுமே சிறப்பான வெற்றியைப் பெற்றிட வேண்டும் என்கிற விருப்பம் நம் அனைவருக்குமே இருக்கும். எப்போதுமே, எங்குமே பக்தர்கள் எளிதில் அணுகும் விதத்தில்தான் விநாயகப் பெருமான் இருப்பார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவரை வழிபட்டு தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியைப் பெறும் என்பது நிச்சயம். அந்த வகையில், ‘ஸ்ரீ தலையாட்டி விநாயகர்’ கோயில் பற்றிய சிறப்புகளை இனி தெரிந்து கொள்ளலாம்.

வசிஷ்ட முனிவர் நாடு முழுவதும் புனித யாத்திரை மேற்கொள்ளும்போது, தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்வது வழக்கம். அப்படி வசிஷ்ட முனிவர் இந்த ஆத்தூர் பகுதிக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவமிருந்து வழிபட ஆரம்பித்தார். அப்போது அவர் மனதில் திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோலத்தில் சிவனை தரிசிக்கும் அவா ஏற்பட்டது. அவரது விருப்பத்தை அறிந்த சிவன், அவருக்கு அதே கோலத்திலேயே தரிசனம் கொடுத்தார். வசிஷ்டரும் அளவிலா மகிழ்வோடு சிவனை அருணாசலேஸ்வரர் திருக்கோலத்தில் வழிபட்டு ஆனந்தமடைந்தார்.

தலையாட்டி விநாயகர் கோயில்
தலையாட்டி விநாயகர் கோயில்

பின்பு காலப்போக்கில் வசிஷ்டர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஆற்று மணலில் புதைந்துபோனது. பல வருடங்களுக்குப் பிறகு இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் 'கெட்டி முதலி' என்பவர் கனவில் சிவபெருமான் தோன்றி, தான் இருக்கும் லிங்க  திருமேனி ஆற்று மணலில் புதையுண்டு கிடப்பதாகக் கூறி, அங்கு தனக்கான ஒரு கோயில் கட்டுவதற்கான செல்வங்களைக் கொண்ட புதையலும் அருகிலேயே புதைந்திருப்பதாகக் கூறினார்.

கனவில் கண்ட தகவல்களைக் கொண்டு 'கெட்டி முதலி' சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் ஆட்களை விட்டுத் தோண்டச் செய்தார். அங்கே சிவபெருமான் கூறியபடியே ஒரு லிங்க திருமேனியும், அருகிலேயே ஒரு புதையலும் இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டுப் போனார். சிவனுக்காக அங்கேயே ஒரு கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். எந்த ஒரு காரியத்தையும் விநாயகரை வழிபட்ட பின்பே தொடங்குவது மரபு என்பதால் இங்கு கோயில் கொண்டிருந்த விநாயகரிடம் சிற்றரசர் அனுமதி கேட்டபோது, ஸ்ரீ விநாயகப் பெருமான் அனுமதியளித்ததோடு, அவரே அக்கோயில் கட்டுமானத்தின் மேற்பார்வையாளராக இருந்து கோயில் சிறப்பாகக் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்தார்.

இதையும் படியுங்கள்:
சங்கு ஒலிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?
தலையாட்டி விநாயகர்

கோயில் சிறப்பாகக் கட்டி முடித்த பிறகு சிற்றரசர், தான் கோயிலை சிறப்பாகக் கட்டியிருக்கிறேனா என்று ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் கேட்டபோது ஸ்ரீ விநாயகர் தனது தலையை அசைத்து, ‘ஆம்!’ என்று ஆமோதித்ததாகக் கூறுகிறது தல புராண வரலாறு. அன்று முதல் இந்த விநாயகர், ‘தலையாட்டி விநாயகர்’ என்னும் சிறப்புப் பெயருடன் குறிப்பிடப்பட்டார். ஆத்தூர் வாழ் மக்களும், சுற்று வட்டாரப் பகுதி மக்களும் தாங்கள் எந்தச் செயலையும் தொடங்கும் முன்பும் இந்த தலையாட்டி விநாயகர் கோயிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு அவரின் அனுமதி கேட்டு பின்பு தொடங்கினால் அந்தக் காரியம் சிறப்பாக வெற்றியடைவதாகக் கண்டனர். புது வீடு கட்டுதல், திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் இதர பாக்கியங்கள் கிடைக்க பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இந்தக் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிரக தோஷங்கள் விலக, இங்கே வந்து வழிபடுகிறார்கள்.  விநாயகருக்கு வேண்டிக் கொண்டு புத்தாடை சாத்தி,  பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

இன்று சங்கடஹர சதுர்த்தி. நாமும் நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஸ்ரீ தலையாட்டி விநாயகரை வேண்டி வழிபட்டு வாழ்வில் எல்லா நலங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com