
காதலில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஏனெனில், காதல் என்பது உணர்ச்சிகளின் கலவையாகும். அதனால் தான் என்னவோ புத்திசாலிகள் அதிகமாக காதலில் சொதப்புகிறார்கள். என்ன தான் அதிபுத்திசாலிகளாக இருந்தாலும், காதல் என்று வந்ததும் எப்படி கையாளுவது என்று தெரிவதில்லை.
புத்திசாலியாக இருப்பது சிறந்த குணமாக கருதப்பட்டாலும், காதல் என்று வரும் போது அது எதிர்ப்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். புத்திசாலிதனத்துடன் செயல்படுபவர்கள் காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
1. புத்திசாலிகள் சூழ்நிலையை ஆழமாக ஆராய்ந்து துணையின் மனநிலை, காதல் கைக்கூடுவதற்கான சாத்தியக் கூறுகள், காதலால் ஏற்படக்கூடும் சிக்கல்கள், இருதரப்பு குடும்பம் இப்படி பலதரப்பட்ட விஷயங்களை சிந்தித்த பிறகே காதலில் அடியெடுத்து வைக்க முடிவு செய்கிறார்கள். இப்படி சிந்தித்து செயல்பட்டாலும், தன்னுடைய துணையுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதில்லை. இதனால் காதலர்களுக்குள் வெளிப்படையாக இருக்கும் தன்மை குறைந்து சர்ச்சைகள், பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
2. புத்திசாலிகள் தன்னை சார்ந்து இருப்பவர்களும் எல்லா விஷயங்களிலும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். காதலில் முதிர்ச்சியை அவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். இதுபோன்ற பர்பெக்ஷனை எல்லா சமங்களிலும் எதிர்ப்பார்ப்பது பிரச்னையை எற்படுத்தக்கூடும்.
3. புத்திசாலியான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டக்கால தாக்கத்தை பற்றி சிந்திப்பதுண்டு. அவர்களின் நிதிநிலை, காதலில் ஏற்படும் வெற்றி தோல்விகள் போன்றவற்றை முன்பே அதிகமாக கணக்கிடுவதால் காதலில் அடியெடுத்து வைப்பதற்கே தயக்கமும், பயமும் காட்டுகிறார்கள்.
4. புத்திசாலிகளுக்கு தங்களுடைய புரிதல் மற்றும் புத்திசாலித்தனத்திற்கு இணையாக துணை தேடுவதே சவாலான விஷயமாக கருதுகிறார்கள். எல்லோரும் எல்லா விஷயங்களிலும் சிறந்தவர்களாக இருக்க முடியாது. சிலர் சில விஷயங்களில் ஆழ்ந்த ஞானம், புரிதல் இருக்கலாம். ஆனால், எல்லா விஷயத்திலும் அதை எதிர்ப்பார்க்க முடியாது. இங்கு தான் சிக்கல் தொடங்குகிறது. புத்திசாலிகள் தங்களைப் போலவே ஆழ்ந்த சிந்தனை, புரிதல் இருக்கும் நபரை தேடி ஏமாந்துப் போகிறார்கள்.
எனவே, காதலில் சொதப்பாமல் இருக்க, அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க கற்றுக் கொள்வது அவசியமாகும்.