உலக கணினி எழுத்தறிவு தினம் என்பது நவீன உலகில் கணினித் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு இன்றியமையாத நிகழ்வாகும். கணினியை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மற்றும் பெண்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்த நாள் வலியுறுத்துகிறது.
பெண்களுக்கும் கணினி கல்வியறிவின் அவசியம்:
தினசரி பணிகள்: கணினிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் தற்போது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் வரை, இந்தக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது தினசரி பணிகளைச் செய்வதற்கு முக்கியமானது.
பொருளாதார வலுவூட்டல்: கணினி அறிவு பல வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இது குடும்பப் பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் பெண்கள் தங்கள் சொந்தத் தொழில் அல்லது ஃப்ரீலான்ஸ் தொழில் தொடங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய அவர்களுக்கு உதவுகிறது. இன்று பெரும்பாலான வேலைகளுக்கு குறைந்தபட்சம் ஓரளவு கணினித் தேர்ச்சி தேவைப்படுகிறது. மின்னஞ்சல் தொடர்பு, ஆவண உருவாக்கம் மற்றும் தரவு மேலாண்மை போன்ற அடிப்படை விஷயங்களைச் செய்ய உதவுகிறது.
கல்வி மற்றும் திறன் மேம்பாடு: பெண்கள் தங்கள் திறன்கள் மற்றும் கல்வியை மேம்படுத்தவும், ஆன்லைன் படிப்புகள், பயிற்சிகள், கல்வி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் கணினி அறிவு அவசியம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தும் திறன், தொடர்ச்சியான கல்வி கற்றலை வளர்க்கிறது. இது எப்போதும் மாறிவரும் வேலைச்சந்தையில் பெண்களுக்கு பொருத்தமானதாக இருக்க உதவுகிறது.
சமூக அதிகாரம்: டிஜிட்டல் கல்வியறிவு, தொழில் வல்லுநர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூகங்களுடன் தொடர்புகொள்ள ஒரு சிறந்த நெட்வொர்க்கிங் ஆக உதவுகிறது. ஆன்லைன் தளங்கள் மூலம் பெண்கள் சமூகப் பிரச்னைகளை தெரிந்து கொள்ளலாம். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். மற்றும் பாலினம் தொடர்பான சவால்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு: பெண்கள் தங்களுடைய உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு தேவையான விஷயங்களை ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட உடல்நலக் கவலைகளை நிவர்த்தி செய்யும் ஆதரவு குழுக்கள் மற்றும் மன்றங்களுடன் பெண்கள் இணையலாம். உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்களை அனுபவிக்கும்போது அவற்றுக்கான தீர்வுகளை இணையதளத்தில் தேடி பயன்பெறலாம்.
டிஜிட்டல் பாதுகாப்பு: கணினி கல்வியறிவு ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும், டிஜிட்டல் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்கவும் பெண்களுக்கு உதவுகிறது. இதனால் அபாயகரமான ஆன்லைன் தொடர்புகள் மற்றும் மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.
குழந்தைகளுக்கு கணினி கல்வியின் முக்கியத்துவம்:
கற்றல் மேம்பாடு: குழந்தைகளுக்கான பல்வேறு கல்வித்தளங்கள், விளையாட்டுகள் மற்றும் ஊடாடும் கற்றல் கருவிகளை அணுகலாம். தங்கள் பாடங்களுக்கான சந்தேகங்களை இணையதளத்தில் தீர்த்துக் கொள்ளலாம். வெவ்வேறு கற்றல் பாணிகளுக்கேற்ற தொழில்நுட்ப அறிவையும் கணினி வழங்குகிறது. கணினி கல்வியறிவைப் பெறுவது குழந்தைகளின் எதிர்கால வேலை வாய்ப்புகளை உறுதி செய்யு உதவும் அடிப்படையான விஷயமாகும். ஆன்லைன் படிப்புகள், பயிற்சிகள் மற்றும் டிஜிட்டல் லைப்ரரிகள் உட்பட குறிப்பிடத்தக்க கல்வி வாய்ப்புகளைத் திறக்கிறது.
படைப்புத்திறன் மேம்பாடு: டிஜிட்டல் ஓவியம், வீடியோ தயாரிப்பு, எழுதுதல் அல்லது இசை உருவாக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்கான கருவிகளை குழந்தைகளுக்கு கணினி கல்வியறிவு வழங்குகிறது. குழந்தைகள் குறியீட்டு முறை மற்றும் ரோபோடிக்ஸ் மூலம் பரிசோதனை செய்யலாம். மேலும் புதுமை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
தகவல் தொடர்புத்திறன்: குழுத்திட்டங்கள் மற்றும் ஆன்லைன் விவாதங்கள் மூலம் குழுப்பணி மற்றும் தகவல் தொடர்பு திறனை வளர்க்க குழந்தைகளுக்கு கணினி உதவுகிறது. மேலும் வெவ்வேறு கலாசாரங்களை சேர்ந்த சகாக்களுடன் தொடர்பு கொள்ளலாம். உலகமயமாக்கப்பட்ட உலகில் புரிதல் மற்றும் அனுதாபத்தை வளர்க்கலாம்.