சமையலறையில் உணவிற்கு அலாதியான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்ற ஒரு பொருள்தான் பெருங்காயம். பெருங்காயம் (அசாஃபோடிடா) ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக இருப்பதோடு பல்வேறு உடல் உபாதைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளதோடு, பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது. அந்த வகையில் பெருங்காயத்தின் முக்கியமான 5 நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அஜீரணம் (Indigestion): வயிறு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கும், அஜீரணம் உள்ளவர்களுக்கும் அருமருந்துதான் இந்த பெருங்காயம். அஜீரணம் ஏற்பட்டால், முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், பெருங்காயத்தை கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். மேலும், பெருங்காயத்தை ஒரு பேஸ்டாக தயார் செய்து தொப்புளைச் சுற்றி வட்டமாகத் தேய்த்தால் இதன் மூலம் விரைவில் செரிமானம் மேம்படும்.
2. எடை இழப்பு (Weight Loss): பெருங்காய நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் கலோரி எரியும் விகிதத்தை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பெருங்காயம் பசியைக் குறைப்பதால், அடிக்கடி ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால் உடல் எடை குறைப்பிற்கு பெருங்காயம் மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது.
3. தலைவலி (Headache): பல நேரங்களில் பதற்றம், பசி, வாயுத்தொல்லை, உஷ்ணம் என பல காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறோம். ஆனால். இவை அனைத்தும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதற்கு பதிலாக இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட் போல செய்து நெற்றியில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
4. உப்புசம் (Bloating): பலருக்கு வயிறு உப்புச பிரச்னையால் பலவித உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னை இருந்தால், விளக்கெண்ணையை பெருங்காய பொடியுடன் சேர்த்து தொப்புளைச் சுற்றி தேய்ப்பதால், வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் ஆகியவற்றிலிருந்து விரைவான நிவாரணம் கிடைத்து செரிமானப் பிரச்னையை போக்குகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தி (Immunity): பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் பெருங்காயம் பெருமளவில் உதவி புரிகிறது.
பெருங்காயம் பெரும் நன்மை செய்யும் என்பதால் மேற்கூறிய முறைகளில் கையாண்டு அதிகப் பலன்களைப் பெறுங்கள்.