
வயதான ஒருவர் உயில் எழுதி வைத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது. இருப்பினும், ஒருவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதில் பின்னாளில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படுவதை இறந்தவர் எழுதிவைக்கும் ஓர் உயில்தான் தடுக்கும். வாரிசுகளுக்குள் மனச்சிக்கல்கள் வருவதன் விளைவாக அவர்களுக்கு இடையில் இருக்கும் சுமூகமான உறவுகள் பாதிப்புக்கு உள்ளாகலாம். இறந்தவரின் சொத்தை பிரித்துக்கொள்வதிலும் பல தகராறுகளும், வன்முறைகளும் எதிர்பாராமல் உருவாகலாம்.
இது தொடர்பாக பின்னர் நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக் கூட ஏற்படலாம். பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வினைக் காண வழக்குரைஞர்களைக் கொண்டு நீதிமன்றத்தில் வாரிசுகள் வாதாட நேரிடலாம். இதற்காக ஆகும் பணச்செலவு, மன உளைச்சல், கால விரயம் போன்றவற்றைத் தவிர்க்க சொத்துக்கு உரிமை படைத்தவர் எழுதி வைக்கும் ஓர் உயில் மிகவும் உதவியாக இருக்கும்.
சொத்து சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தையே நாடினாலும், இதில் உடனடியாக ஒரு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. முன்கூட்டியே உயில் எழுதினாலும் கூட, அவரது மரணத்துக்கு பிறகே அந்த உயில் ஒரு பத்திரமாக கருதப்படும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். சொத்துகளும் உயிலில் குறிப்பிட்டுள்ளபடித்தான் வாரிசுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும்.
ஒருவேளை அது இறந்தவரின் பெயரில் இருக்கும் அசையாச் சொத்தாக இருந்தால், உயில் மூலம் அதை அடைந்தவர் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உயில் நகல் முதலானவற்றை ஒப்படைத்து வருவாய்த்துறை ஆவணங்களைத் தம்முடைய பெயரில் மாற்றிக் கொண்டால் போதும். அதற்குப் பிறகு அவர் அதனை, தன்னுடைய தம் விருப்பம் போல் கையாளலாம், பிறருக்கு சொத்துரிமை மாற்றமும் செய்யலாம். ஒருவர் உயிரோடு இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமென்றாலும் உயிலை எழுதி வைக்கலாம்.ஆனால், இறுதியாக எழுதப்படும் உயிலே செல்லுபடியாகும்.
சட்டப்படி உயில் ஒன்றை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் நம்மில் சிலருக்கு வரலாம். பதிவு செய்வது கட்டாயம் கிடையாது. ஆனால், உயிலை பதிவு செய்து கொள்வது நல்லது. பதிவு செய்யப்படாத உயில், விட்டுச் செல்பவரின் மரணத்திற்குப் பிறகும் பதிவு செய்யப்படலாம். இப்படிப் பதிவு செய்வதால் தேவையற்ற பிரச்னைகளை நாம் பிற்காலத்தில் தவிர்க்க முடியும்.
அத்துடன், இப்படி பதிவு செய்வதன் மூலம், உயிலின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது உயிலில் கையெழுத்திட்டு, அதில் ஸ்டாம்ப் ஒட்டி இரண்டு பேர் சாட்சி கையெழுத்தும் போட்டு அதனை பதிவு அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்யலாம். செல்லாத உயில் என்பது சட்டப்படி சரியானதாக இல்லாத அல்லது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத உயில் ஆகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். குறிப்பாக, உயில் எழுதும் நபர் மனநிலை சரியில்லாமல் இருந்தாலோ, மனநோயாளியாக இருந்தாலோ அந்த உயில் செல்லாது.
அதேபோல, உயில் எழுதுபவர் கட்டாயப்படுத்தப்பட்டோ, மிரட்டப்பட்டோ எழுதப்பட்டிருந்தால் அந்த உயிலும் செல்லாது. உயில் எழுதுபவர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குக் குறைவாக இருந்தால் அல்லது அவர் சட்டப்படி உயில் எழுத தகுதியற்றவராக இருந்தால் அந்த உயிலும் செல்லாது. சாட்சிகள் இல்லாவிட்டாலோ, சாட்சிகள் குறைபாடு உடையவர்களாக இருந்தாலோ அந்த உயில் செல்லாது. நீதிமன்றத் தீர்ப்பினில் சொத்து பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லாமல், தவறுகளுடன் உயில்கள் எழுதப்பட்டிருந்தால், அதுவும் செல்லாது. சட்ட விதிமுறைகளை மீறினால், அந்த உயில் செல்லாது. இப்படி ஒரு உயில் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த உயிலின்படி சொத்து எக்காரணம் கொண்டும் பிரிக்கப்பட மாட்டாது. அந்த சொத்து பொதுவாக சட்டத்தின் அடிப்படையில் வாரிசுகளுக்கிடையே பிரிக்கப்படும்.
எனவே, ஒருவர் உயில் எழுதுவதற்கு முன்பு உயில் பற்றிய தகவல்களை ஒரு சட்ட நிபுணரை அணுகி தெரிந்து கொள்வது நல்லது. அவரிடம் உயில் சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.எ ப்படி இருப்பினும் முறையாக எழுதப்பட்ட ஓர் உயில் பிற்காலத்தில் இறந்தவரின் சொத்துரிமைச் சார்ந்து ஏற்படும் தேவையற்ற சிக்கல்களைத் தீர்க்க உதவும் என்பதே உண்மை.