இன்றைய பரபரப்பான, வேகமான உலகில் மல்டி டாஸ்கிங் என்பது பலருக்கும் வழக்கமாகி விட்டது. பலவித வேலைகளை தினமும் வேக வேகமாக செய்து கொண்டே இருக்கிறோம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. நிம்மதியும் மகிழ்ச்சியும் தொலைந்து போய் எப்போதும் ஒரு போதாமை உணர்வு இருக்கிறது. ஜீரோ டாஸ்கிங் என்கிற பூஜ்ய பணிக் கோட்பாட்டை கடைபிடிக்கும்போது அன்றாட பிரச்னைகளில் இருந்து விலகி ஒருவர் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கான வாய்ப்பை தருகிறது. இதற்கு விரிவான திட்டமிடல் அவசியமில்லை. மனதிற்குப் பிடித்த எளிமையான சில வேலைகளில் ஈடுபட்டால் அது மன மகிழ்ச்சியையும் நிதானத்தையும் தரும்.
ஜீரோ டாஸ்க்கிங் செய்வதன் அவசியம்: ஜீரோ டாஸ்கிங் என்பது வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து ஓய்வெடுக்கும் நேரத்தை குறிக்கிறது. வேகமாக ஓடிக்கொண்டே இருக்காமல் நிதானமாக நேரம் செலவழிப்பதை குறிக்கிறது. தனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தலாம். நிதானமாக நடப்பது, புத்தகம் படிப்பது, தியானம் செய்வது அல்லது சிறிது நேரம் தூங்குவது அல்லது ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பது போன்ற செயல்கள் கூட இதில் அடங்கும். இலக்குகளைப் பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் சற்றே இலகுவான மனதுடன் இருப்பது மனதிற்கும் உடல் நலத்திற்கும் நன்மைகளை பெற்றுத் தரும்.
அமெரிக்காவில் இருக்கும் மனநல விழிப்புணர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி லாப நோக்கமற்ற மனநல நிறுவனம் இந்த ஜீரோ டாஸ்கிங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்துகிறது. மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களில் ஈடுபடும்போது, மனம் அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது. மனதிற்கு தேவையான ஆற்றலும் சக்தியும் கிடைத்து விடுகிறது.
ஜீரோ டாஸ்கிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: வாரம் ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் ஜீரோ டாஸ்கிங்கிற்கு ஒதுக்க வேண்டும். ஒரே நேரத்தில் பலவித வேலைகளை செய்யும் மல்டி டாஸ்கிங் மனதிற்கு பலவிதமான அழுத்தத்தையும் அயர்ச்சியையும் தருகிறது. ஒரு நேரத்தில் பிடித்தமான ஒரு வேலையை செய்யும்போது கவனம் குவித்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மைண்ட் ஃபுல்னஸ்: பூஜ்ஜியப் பணியை நடைமுறைப்படுத்தும்போது அந்த நேரத்தில் முழுமையாக இருப்பதையும், ஒருவர் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருப்பதையும் உள்ளடக்கியது. ஒருவரின் கவனத்தை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
சிறந்த பணிச்சூழல்: சிறந்த நேர மேலாண்மை மற்றும் நிதானமாக வேலை செய்வதன் அவசியத்தை ஊக்குவிக்கிறது. அறிவிப்புகள், குறுக்கீடுகள் மற்றும் தேவையற்ற சந்திப்புகள் போன்ற கவனச் சிதறல்கள் இல்லாத பணி சூழலை உருவாக்குவது பூஜ்ஜிய பணியின் முக்கிய அங்கமாகும். இது உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது. மல்டி டாஸ்கிங் மற்றும் கவனச் சிதறல்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் ஒருவர் தன்னுடைய உற்பத்தித் திறன் நிலைகளை அடைய முடியும். குறைந்த நேரத்தில் நிறைவான வேலை செய்வதும் வேலையின் தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகிறது.
மனத் தெளிவு: குறைவான பணிகளில் கவனம் செலுத்தும்போது அது அறிவாற்றலை அதிகரிக்கிறது. மேம்பட்ட மனத் தெளிவிற்கும் சிறந்த முடிவு எடுப்பதற்கும் உதவுகிறது. ஜீரோ டாஸ்கிங் என்ற கருத்து உற்பத்தித்திறன் மற்றும் நேர நிர்வாகத்தில் வேரூன்றியுள்ளது. கவனச் சிதறல்கள் மற்றும் அறிவாற்றல் சுமைகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. எனவே, அன்றாட மன அழுத்தம் தரும் வேலைச் சுமைகளில் இருந்து விலகி, ஒருவர் தன்னைத்தானே மெருகேற்றிக் கொள்ள பூஜ்யப் பணிகள் மிகவும் உதவியாக இருக்கும்.