உங்கள் குழந்தைகள் தேர்வு அச்சத்தில் இருக்கிறார்களா? அப்படியானால் பெற்றோர்கள் இதை செய்யுங்கள்!

Do your kids have test anxiety?
Do your kids have test anxiety?

மாணவர்களின் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவர்கள் கடுமையாக தங்களை தயார் செய்து வருவார்கள். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கஷ்டப்பட்டு தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தி வருவார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பெற்றோர்கள் எந்தெந்த வகைகளில் உதவ வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

உங்கள் குழந்தையின் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்:

முதலில் உங்களுடைய குழந்தைக்கு படிக்கும்படியான அழுத்தத்தை மட்டுமே கொடுக்காதீர்கள். அவர்களுடைய படிக்கும் ஸ்டைலை புரிந்து கொள்ளுங்கள். எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி படித்து புரிந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு சில விஷயங்கள் எளிதாக இருக்கும் சிலருக்கு அது கடினமானதாக இருக்கும். புத்தகத்தைப் பார்த்து புரிந்து கொண்டு படிப்பவர்களுக்கு அனைத்துமே எளிதாக இருக்கும். 

ஆனால் சில மாணவர்களுக்கு பிறர் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே புரியும். அத்தகைய மாணவர்களுக்கு நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவிட்டு சொல்லித் தர வேண்டியது அவசியம். அதேபோல எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் அனைத்தையும் படிப்பதென்பது கடினம். சில குழந்தைகள் எவ்வளவு நேரம் ஆனாலும் படித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலரோ 15 நிமிடங்களுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே முதலில் உங்களது குழந்தையின் தன்மை என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

  உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்: 

இறுதித் தேர்வு நெருங்குவதால் மாணவர்களுக்கு இப்போது பல திருப்புதல் தேர்வுகள் வைக்கப்படும். எனவே அவர்களுக்கான நேரம் எதிலுமே இருக்காது. அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சரியாக சாப்பிடாமல் ஊட்டச்சத்து குறைவாக இருப்பார்கள். எனவே குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவது பெற்றோர்களின் கடமை. 

அவர்களின் உடலுக்குத் தேவையான ஆற்றல் இருந்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். இதுதான் ஒரு பெற்றோரின் முதல் கடமையாகும். அதேபோல அவர்கள் படிக்கும்போது நடுவில் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்ளும்படி சொல்லுங்கள். படிக்கும்போது அவர்களை திட்டாதீர்கள். குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் இந்த சமயத்தில் அவர்களுக்கு அதிகம் தேவை. 

எல்லா நேரமும் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபட விடுங்கள். வெளியே சென்று ஜாலியாக நண்பர்களுடன் விளையாடுவதால் அவர்களுடைய மன அழுத்தம் குறைந்து, படிப்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
ஆசை முதல் ஆழ்மனம் வரை அனுபவ டிப்ஸ்! - எழுத்தாளர் நெப்போலியன் ஹில்!
Do your kids have test anxiety?

உங்களுடைய ஆசைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்: 

பெரும்பாலான பெற்றோர் செய்யும் தவறு என்னவென்றால், தன் பிள்ளைதான் எல்லா பிள்ளைகளை விடவும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். என்னதான் சில பெற்றோர் அவர்களின் குழந்தைகள் எடுக்கும் ரேங்க் பற்றி கவலைப்படுவதில்லை எனக் கூறினாலும். ஒருவேளை அவர்களது குழந்தை நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அறிவுரை கூறுவது, சில விஷயங்களுக்கு தடை விதிப்பது, தண்டனை கொடுப்பது போன்ற நச்சரிப்பைத் தொடங்கி, குழந்தைகளை கஷ்டப்படுத்துவார்கள். இப்படி உங்கள் விருப்பத்திற்கு தான் அவர்கள் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைப்பது தவறு. 

எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளின் குணத்தை அறிந்து அவர்களுக்கான பக்கபலமாக இருப்பது நல்லது. வெறும் அழுத்தம், நச்சரிப்பு, கோபப்பட்டு பேசுவதால் மட்டுமே உங்களது பிள்ளைகள் மதிப்பெண்களை அதிகம் எடுத்து விடுவார்கள் என நினைக்க வேண்டாம். உங்களுடைய அன்பான வார்த்தைகளும் புரிந்து கொள்ளும் பக்குவமுமே அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து சிறப்பான நிலையை அடைய உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com