இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் மிக்கவர். ஒருவரை பிறரோடு ஒப்பிடுவது எந்த விதத்திலும் சரியல்ல. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது மன ஆரோக்கியம், சுயமரியாதை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும். பல குறைபாடுகளை ஏற்படுத்தும். ஒப்பீடு தரும் விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சுயமரியாதை பாதிப்பு: பிறருடன் ஒப்பீடு செய்துகொள்ளும்போது போதாமை மற்றும் குறைந்த சுயமரியாதையை ஏற்படுத்தும். 'நாம் அவர் போல அழகு இல்லையே. இவர் போல வசதியாக இல்லையே' என்று நினைத்து ஒப்பீடு செய்து கொள்ளும்போது தன் மேல் உள்ள மரியாதை குறையும். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற உணர்வைக் கூட தரும்.
2. மன அழுத்தம்: பிறருடைய சாதனைகளைப் பார்த்து மனம் வெம்பி கவலைப்படும்போது அது தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். இதனால் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தினசரி செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும். பிறருடன் ஒப்பீடு செய்து கொள்ளும்போது அது மனதிற்கு தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுத்து அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
3. பொறாமை: ஒருவருடன் ஒப்பீடு செய்துகொள்ளும்போது பொறாமை என்னும் உணர்வு மிகவும் அதிக அளவில் ஒருவரைத் தாக்கும். 'அவர்கிட்ட இருக்கிற மாதிரியான பெரிய கார் எங்கிட்ட இல்ல. அவர் போல நான் பிரபலமாக இல்லை' என்று நினைக்கும்போது, அது பொறாமை உணர்வை தூண்டி விடுகிறது. உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை உருவாக்கும். பொறாமை அதிகரிக்கும்போது ஒரு கட்டத்தில் வெறுப்பாக மாறி பிறரை தவிர்க்கவும் ஒதுக்கவும் வைத்து விடும். உறவுகளை சேதப்படுத்தும் மற்றும் சமூக தொடர்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.
4. கவனம் குறைதல்: பிறருடைய சாதனைகளில் கவனம் செலுத்துவதும், தன்னை அவர்களுடன் ஒப்பீடு செய்துகொண்டே இருப்பதும் தன்னுடைய தனிப்பட்ட இலக்குகளில் கவனம் வைப்பதை குறைக்கிறது. தனது சொந்த முன்னேற்றம் மற்றும் இலக்குகள் அடைய முடியாமல் போகலாம். கவனம் திசை திருப்பப்படுவதால் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பயனற்றவை என்று உணர வைக்கும். இதனால் முயற்சி செய்வதே குறைந்து போகும்.
5. எதிர்மறையான சுய பேச்சு: தன் மேல் மரியாதை குறையும்போது தன்னைப் பற்றி தாழ்வாக நினைக்கத் தோன்றும். தான் எதற்குமே லாயக்கில்லை, வீண் என்று தன்னைப் பற்றிய எதிர்மறையான சுய பேச்சுக்களில் மனம் ஈடுபட ஆரம்பிக்கும். எதிர்மறையான விமர்சனத்தை மனம் முன் வைக்கும்போது தன்னம்பிக்கை பாதிக்கப்படும்.
6. எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்: சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் சிறந்த தருணங்களை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். அதைப் பார்த்து தன்னுடைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வார்கள் சிலர். அது நம்பத்தகாத எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றத்தையும் உருவாக்கும். இந்த நிலை செயலற்ற நிலைக்குத் தள்ளிவிடும். மனச்சோர்வுக்கும் வழி வகுக்கும்.
7. வேண்டாம் ஒப்பீடு: எனவே, ஒருபோதும் யாரோடும் ஒப்பீடு செய்துகொள்ளவே கூடாது. தனக்கான வளர்ச்சியும் முன்னேற்றமும் தனது கைகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு தன்னுடைய பாணியில் முன்னேற வேண்டும். அதுவே ஒரு மனிதனுக்கு மிகுந்த நன்மையை தரும்.