
தமிழக பொது சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் 2024ம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ள நிலையில், 2023ம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர். பொதுவாக, நாய் ஒருவரைக் கடித்த உடன், அந்தக் காயத்தை ஓடும் நீரில் சில நிமிடங்கள் தொடர்ந்து கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பிறகு, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விரைவாக சிகிச்சையை தொடங்க வேண்டும்.
ஒருவரை நாய் கடித்த பிறகு, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து அவர் முழுமையாகத் தப்பித்துக் கொள்ளலாம். அதில் தவறுகள் நிகழும்பட்சத்தில் ரேபிஸ் நோய் தாக்கி இறப்புகள் நிகழ வாய்ப்புகள் அதிகமாகும்.
நாய்க்கடியின் வகையினை பொறுத்து சிகிச்சை முறையும் மாறுபடும். எனவே, இவற்றின் ஒவ்வொரு படியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, நாய்கள் கடிப்பதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில் நாய்கள் நம்மை வெறும் நக்குதல் ஆகும். நாய்களின் எச்சிலில்தான் ரேபிஸ் வைரஸ் இருக்கும் என்றாலும், உடலில் திறந்தவெளி காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், நாய்கள் நக்குவதால் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. நாய் நக்கிய இடத்தை ஓடும் நீரில் சிறிது நேரம் கழுவினால் போதும். எனவே, இதற்கு மருத்துவச் சிகிச்சை எதுவும் தேவையில்லை.
இரண்டாவதாக, நாய்கள் நம் உடலில் ஏற்படுத்தும் இரத்தம் இல்லாத கீறல்கள். இதற்குக் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக கடுமையான காயங்கள். இது ஒரு நாய் அல்லது பல நாய்களினால் ஏற்படும் கூட்டுத் தாக்குதலின்போது ஏற்படலாம். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதோடு, ‘இம்யூனோகுளோபுலின்’களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், ரேபிஸ் தடுப்பூசியை பொறுத்தவரை, சருமத்துக்கு உள்ளே போடுவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு ஊசிகளைச் செலுத்த வேண்டும். தசைக்குள் செலுத்துவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாள் என ஐந்து ஊசிகளைச் செலுத்த வேண்டும்.
மூன்றாவது வகை காயம், அதாவது மிகப்பெரிய காயமாக இருந்தால், கடிபட்ட இடத்தில் இம்யூனோகுளோபுலின்களைச் செலுத்த வேண்டும். இதை முதல் நாளே செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயை நம்மால் தடுக்க முடியும்.
ரேபிஸ் வைரஸை பொறுத்தவரை, மனித உடலில் ஒரு மணி நேரத்தில் மூன்று மில்லி மீட்டர் தூரத்திற்கு நகரும் தன்மையுடையது. அந்த வைரஸ் நமது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைச் சென்றடைவதற்குள் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும், எல்லா நாய்க்கடி சம்பவங்களையும் வெறி நாய்க்கடி சம்பவமாகவே நினைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
நாய்க்கடியில் இருந்து தப்பிக்க ஒரு நாயினை கடந்து செல்லும்போது அதை உற்றுப் பார்க்கக் கூடாது. அதன் தலையில் கையை வைக்கக் கூடாது. அதைப் பார்த்த உடனே வேகமாக ஓடவோ, விரைவாக நடக்கவோ கூடாது. எப்போதும் நடை பயிற்சிக்கு செல்லும்போது கையில் சிறு குச்சியையும், சில பிஸ்கட்களையும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
அவை நம்மைக் கடிக்க நெருங்குவதை நாம் உணரும்போது கையில் உள்ள தின்பண்டங்களை பரவலாக வீசி விட்டால் அவற்றின் கவனம் உணவை உண்பதில் மாறிவிடும். தொடர்ந்து நம்மை நோக்கி வருவதை தவிர்த்து விடும். மொத்தத்தில் நாய் நம்மைக் கடித்து விட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அலட்சியம் காட்டினால் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.