
சாதாரணமாக வீடுகளில் உள்ள மேஜை நாற்காலி கலைந்து கிடந்தால் அதைப்பார்த்தவுடன் பலருக்கும் மூட் அவுட் ஆகிவிடும். அதை சரிபடுத்து என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொன்றையும் ஏன் நேர்த்தியாக வைக்கவேண்டும். டைனிங் டேபிளை எப்படி வைத்துக்கொண்டு விருந்தோம்பல் செய்யவேண்டும். அதனால் என்ன நன்மை? என்று ஃபெங்சுயி கூறுவதை இப்பதிவில் காண்போம்.
சாப்பாட்டு மேஜயின் வடிவம் எளிமையாக இருக்கலாம். சதுரமாக, செவ்வகமாக அல்லது கோள வடிவமாக (Oval shape) இருக்கலாம். ஆனால் பெரிய மேஜையாக இருக்கவேண்டும். அது செல்வ வளத்துக்கு சங்கேத குறியாக இருக்கிறது என்கிறது ஃபெங்சுயி.
சிறிய மேஜை கொஞ்சம் நெரிசலாகத் தெரியும். உண்பவருக்கு ஒதுக்கிடம் பற்றிய அச்ச உணர்வைத் (Claustrophobia) தரும். அது மட்டும் அல்லாமல், அவர்களுடைய உடம்பில் உள்ள உயிர் சக்தியின் சமநிலையை பாதித்து அஜீரணக்கோளாறை உண்டு பண்ணும்.
கண்ணாடி அல்லது செயற்கைப் பொருளிலான மேஜையைவிட மரத்தில் செய்யப்பட்ட மேஜை நல்லது. நல்லவிதமாக உண்பதற்கு 'யின்'சக்தி உதவும். இயற்கையான மரமேஜை அந்த சக்தியைப் பரவச் செய்யும். ஒரே மரத்துண்டிலான மேஜையாக அமைவது சிறப்பு.
நீங்கள் ஒரு தொழில் நண்பரையோ, முக்கியமான மனிதரையோ விருந்துக்கு அழைப்பதாக இருந்தால், சாப்பாட்டு மேஜையை வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். தலைமை, பொறுப்பு, உத்தியோக உயர்வுகள், வலது திசையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.
உங்களுடன் உண்பவர்களில் பெரும்பாலானவர் மிகவும் பழகியவராக அல்லது குடும்ப நபர்களாக இருப்பின் மேற்கு திசையில் அமர்ந்து உண்ணலாம். மேற்கு குடும்ப உறவுகளை மேம்படுத்துவது.
தென்மேற்கு பகுதி உறவின் தரத்தை உயர்த்துவதோடு அதிக அளவு அமைதியையும் கொடுக்கும்.
மேசையின் தலைப்பகுதியில் முக்கிய விருந்தினரை அமர செய்யவும். அப்படி யாரும் இல்லை எனில் ,குடும்பத் தலைவர் அங்கே அமர்ந்துகொள்ள வேண்டும். அமர்கின்றவரின் மேற்பார்வையில் அறைக்கதவு இருக்க வேண்டும்.
அதிக சாய்வு அல்லது மூலைகளை உடைய நாற்காலிகளைத் (Angled Chairs) தவிர்க்கவும். அதிக மூலைகள் இருப்பின் 'யாங்' சக்தி உண்பவரை மிகவும் சுறுசுறுப்பாக்கி விடும். பொதுவாக விருந்தினர் 'ரிலாக்ஸ்'டாக அமர்ந்து உண்ண வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.
கவனம் மேற்கொள்வது:
தட்டுகளும், கிண்ணங்களும் எண் கோண வடிவில் இருக்கலாம். காந்த ஊசி காட்டும் எட்டு திசைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதை அது குறிக்கும்.
கத்தி முதலிய கருவிகள் (Cutlery) நன்கு பாலிஷ் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றிலும் உள்ள உயிர்ச்சக்தியை உலோகம் ஊக்குவிக்க அந்த பளபளப்பு அவசியம்.
கண்ணாடி கோப்பைகள் கட்- கிரிஸ்டலாக இருப்பது நல்லது. சுற்றுப்புற உயிர்ச்சக்தியை அது ஊக்குவிக்கும்.
மேஜை விரிப்பின் நிறமும் கருத்தில் கொள்ளத் தக்கதாகும். உதாரணமாக உங்கள் மேஜை மேற்கு பகுதியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு பச்சை நிற விரிப்பை பயன்படுத்தினால் அதிக அளவு உயிர்ச் சக்தியை ஊக்குவிக்க முடியும்.
மேஜை மீது ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளை எரிய விடுவது ஃபெங்சுயி நடைமுறைக்கு உரியதாகும். மெழுகுவர்த்தியின் ஜ்வாலை உண்பவரின் உயிர்ச் சக்தியை ஊக்குவிப்பதோடு, அவருக்கு அசௌகரிய உணவு ஏற்படாமல் செய்யும். அறையின் இதரப் பகுதிகளுக்கும் வெளிச்சம் வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. அதற்காக வழக்கமான விளக்குகளையும் எரிய விடலாம்.
உண்பவர்கள் தாங்கள் உரையாடும் ஒலியன்றி வேறு ஒலிகளை முக்கியமாகக் கருதுவது இல்லை. தங்களுடைய குரலோசையில் இருந்தே உயிர்ச் சக்தியை ஊக்குவிப்பார்கள். எனினும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து பின்னணியில் இசையைப் பயன்படுத்தலாம். அதிக பரிச்சயம் இல்லாத நபர்களுடன் உணவருந்தும் போது இசை ஒரு இணக்கமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
இசை மென்மையானதாக, குறிக்கீடு செய்யாதபடி இருக்க வேண்டும். பாடல் இல்லாமல் எல்லோருடைய ரசனைக்கும் பொருந்துவதாய் இருக்கலாம். இப்படிப்பட்ட சாப்பாட்டு மேஜை உடைய விருந்தோம்பல் ஒரு நல்ல பண்பை, எண்ணத்தை ஊக்குவித்து உயர்வளிக்கும் என்று ஃபெங்சுயி கூறுகிறது.