
வாஸ்து சாஸ்திரப்படி சமையலறை என்பது வீட்டின் இதயப் பகுதி போன்றது. இதை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பராமரித்து, சமையல் பொருட்களை சேமித்து வைத்திருக்கும் ஜார்களை அழகாக அடுக்கி வைத்திருப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருளைப் பெற்று வீட்டிற்குள் நேர்மறை சக்தியைப் பெருக்க முடியும் என்றும், அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் நல்லுறவு போன்றவை அதிகரிக்கும் எனவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
சுத்தமில்லாத, ஒழுங்கற்ற கிச்சனில் எதிர்மறை சக்திகள் அதிகரித்து வீட்டின் நிதி நிலைமையில் குறையேற்படவும், வீட்டிலுள்ளோர்களிடையே சண்டை சச்சரவு உண்டாகவும் வாய்ப்பேற்படும். வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவுப் பொருட்களை எங்கு, எப்படி சேமித்து வைப்பது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.
1. கிச்சனில் குடும்பத்தின் உயிர் சக்தியின் அளவை சமநிலையில் வைக்க உதவுவது உப்பு. உப்பை கண்ணாடி ஜாடிகளில் சேமித்து வைப்பது நேர்மறை சக்திகளை உண்டுபண்ணும். இரும்பு போன்ற மற்ற உலோகப் பாத்திரங்களில் உப்பை சேமிப்பது அதிர்ஷ்டமற்றதாகவும், நிதிப் பற்றாக்குறையை உண்டுபண்ணுமென்றும் கூறப்படுகிறது. எந்த சூழலிலும் உப்பு ஜாடி காலியாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். உப்பு ஜாடி காலியாவது ஏழ்மையின் அறிகுறி.
2. உப்பை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்கும்போது கையில் அள்ளிக் கொடுப்பதைத் தவிர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுப்பது நலம். பிறரிடமிருந்து உப்பை கடனாக வாங்குவது ஏழ்மையை வரவேற்பதற்கு சமம். உப்பு ஜாடியை வெள்ளிக்கிழமைகளில் நிரப்புவது எதிர்மறை சக்திகளை வீட்டைவிட்டு விரட்ட உதவும்.
3. உப்பு, சர்க்கரை மற்றும் மிளகாய்த் தூள் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரே பாத்திரத்தில் அல்லது ஒரே இடத்தில் வைத்திருப்பது குடும்பத்தினரிடையே மோதலையும் ஒற்றுமையின்மையையும் உருவாக்கும். குறிப்பாக, உப்பையும் சர்க்கரையையும் ஒரே இடத்தில் வைப்பது பொருளாதார சீரழிவை உண்டுபண்ணும். உப்பு, சர்க்கரை, மிளகாய்த் தூள் ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியான இடங்களில் வைப்பது சமையலறையில் அமைதியும் நல்லிணக்கமும் உருவாக உதவி புரியும்.
4. மஞ்சள் ஒரு சாதாரண சமையலறைப் பொருளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது வீட்டின் மங்கலகரம், வளர்ச்சி மற்றும் அமைதியின் அறிகுறியாக விளங்குகிறது. உப்பைப் போலவே மஞ்சள் தூள் நிரப்பப்பட்டிருக்கும் பாத்திரத்தையும் ஒருபோதும் காலியாக விடக் கூடாது. மஞ்சள் தூளுடன் மூன்று லவங்கம் மற்றும் ஏதாவதொரு மதிப்புடைய சில்லறை காசு ஒன்றையும் போட்டு வைப்பது வீட்டில் செல்வம் குறையாமல் பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்துப்படி, மஞ்சள் குருவின் ஆதிக்கத்தையும், காசு மகாலட்சுமியின் இருப்பையும், லவங்கம், வளங்கள் குறையாதிருப்பதின் அறிகுறியையும் உணர்த்துவதாக உள்ளன. இவை மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும்போது வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்றி, கிச்சனை சுத்தமாக வைத்துப் பராமரித்து வந்தால், வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளெல்லாம் மறைந்து, மன அமைதியும் செல்வச் செழிப்பும் நிறைந்தோங்கும் என்பதில் சந்தேகமில்லை.