
பேசும் பேச்சில் பல வகைகள் உள்ளன. அவை அதன் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. பேச்சின் சுவாரஸ்யம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
1. தகவல் தரும் பேச்சு (informative speech): பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய தகவல்களை வழங்குவது தகவல் தரும் பேச்சு எனப்படும். குறிப்பிட்ட தலைப்பு பற்றிய அறிவை பார்வையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பேச்சாகும். இது வற்புறுத்தும் பேச்சு போல பார்வையாளர்களை நம்ப வைப்பதை விட, கல்வி கற்பிக்கவும், யோசனைகளை தெளிவுபடுத்தவும் அல்லது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தவும் பயன்படுகிறது. ஒரு நல்ல தகவல் பேச்சு, தரவுகள், ஆராய்ச்சிகள் மற்றும் புள்ளி விவரங்களை ஒருங்கிணைத்து பார்வையாளர்களின் அறிவை வளர்க்கும்.
2. ஆர்ப்பாட்டப் பேச்சு (Demonstrative speech): ஒரு செயல்முறையை அல்லது செய்முறையை செய்து காட்டுவது. அதாவது சமைக்கும் முறையை செய்து காட்டுவது அல்லது ஒரு புதிய மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்குவது. விளக்கக் காட்சிகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்ட உரையும் ஒன்று. டெமோ உரைகள் எங்கும் காணப்படுகின்றன. இது பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரு நிறுவன பயிற்சி சூழல்களில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு பணியை அல்லது செயல்முறையை எவ்வாறு முடிப்பது என்பதை கற்பிப்பதாகும்.
3. வற்புறுத்தும் பேச்சு (Persuasive speech): வற்புறுத்தும் பேச்சு என்பது பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட யோசனையை நம்ப வைக்க அல்லது ஒரு செயலைச் செய்யத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேச்சாகும். இது ஒரு விவாதம், விற்பனை உரை அல்லது சட்ட ரீதியான வாதமாகக் கூட இருக்கலாம். இதன் முக்கிய நோக்கம் பார்வையாளர்களின் கருத்துக்கள், மதிப்புகள் அல்லது நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அதாவது, பார்வையாளர்களின் எண்ணங்களை அல்லது செயல்களை மாற்றுவதற்கு முயற்சிப்பது. பிறரின் எண்ணங்களை அல்லது நடத்தைகளை மாற்றுவதற்காக வாதங்களை முன் வைப்பது. இவை சில சமயம் காரசாரமான நிகழ்வாக இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஆதரிக்கும்படி பார்வையாளர்களை வலியுறுத்துவது.
4. பொழுதுபோக்கு பேச்சுகள் (Entertaining speeches): பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கும், மகிழ்விப்பதற்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துவதற்கும் பேசப்படும் பேச்சு இது. இது சுவாரஸ்யம் நிரம்பியதாக இருக்கும். கேட்போரை மகிழ்விக்கும் நோக்கில் பேசுபவரின் தனிப்பட்ட அனுபவங்கள், நகைச்சுவை மற்றும் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் உரைகளாகும். இவை வழக்கமாக வேடிக்கையானதாகவும், இலகுவாகவும், நல்லுணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஸ்டாண்ட்-அப் காமெடிகள் மற்றும் இரவு உணவு விருந்துகளில் வழங்கப்படும் உரைகள் போன்றவை பொழுதுபோக்கு பேச்சுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
5. சிறப்பு சந்தர்ப்பப் பேச்சு (special occasion speech): சிறந்த சந்தர்ப்பப் பேச்சு என்பது ஒரு திருமண விழா, பிறந்த நாள் கொண்டாட்டம், பட்டமளிப்பு விழா, பிரியாவிடை, விருது வழங்கும் விழா அல்லது ஒரு நினைவு நிகழ்ச்சியில் பேசுவது சிறப்பு சந்தர்ப்பப் பேச்சு எனப்படும். அதாவது ஒரு சிறப்பு நிகழ்வைக் கொண்டாட அல்லது அதற்கு பங்களிக்க பேசுவது. இந்த சிறப்பு சந்தர்ப்பப் பேச்சு பார்வையாளர்களை கவரும் வகையிலும், உணர்வு பூர்வமாகவும் இருக்க வேண்டும். ஒரு நபரின் பிறந்த நாளில் அவரைப் பாராட்டுதல், ஓய்வு பெறும் சக ஊழியருக்கு விடைபெறும் உரை, திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவது, பட்டமளிப்பு விழாவில் மாணவரை பாராட்டுதல் போன்ற ஒரு முக்கியமான நிகழ்வில் உணர்வுபூர்வமாகப் பேசுவதாகும்.