
மழைக்காலத்தில் ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான். ஆனால், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். மழை பெய்யும் பொழுது உட்புறத்தில் ஈரப்பத அளவு அதிகரிக்கும். அந்த சமயத்தில் ஏர் பில்டர்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியது முக்கியம்.
1. ட்ரை மோடை பயன்படுத்தவும்: மழைக்காலத்தில் ஏசியை பயன்படுத்துவதற்கு முதலில் ஏசியின் வெளி மற்றும் உட்புற பாகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் அல்லது அதிக ஈரப்பதம் உள்ள நிலையில் உலர் முறையை பயன்படுத்த வேண்டும். ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதற்கு 'உலர் பயன்முறை'ஐ (Dry Mode) பயன்படுத்தவும். கூல் மோடுக்கு (Cool Mode) பதிலாக டிரை மோடை பயன்படுத்துவது காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் அறை வெப்பநிலையை பராமரிக்கும். மழை குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் சூழலில் கூல் மோடை பயன்படுத்தலாம்.
2. பராமரிப்பு மற்றும் தூய்மை: மழைக்காலத்திற்கு முன்பும் மற்றும் வெயில் காலத்திற்கு முன்பும் ஏசியை சரி செய்து அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது காற்றின் தரத்தை அதிகரிப்பதுடன், ஏர் கண்டிஷனரின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. வடிகட்டியை (Filters) சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காரணம் ஈரப்பதம் காரணமாக வடிகட்டிகளில் தூசு படிந்து அடைப்பு ஏற்படலாம். ஏசியின் வெளி அலகு (Outdoor unit) தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏசியின் வெளிப்புற அலகில் துருப்பிடிக்காமல் இருக்க, துரு எதிர்ப்பு பூச்சு (anti rust coating) பயன்படுத்தலாம்.
3. பயன்படுத்தும் முறை: மழைக்காலத்தில் நாள் முழுவதும் ஏசியை ஆன் செய்து வைக்காமல் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தவும். ஏற்கெனவே வெளியில் உள்ள காற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் ஏசியின் வெப்பநிலையை மிகக் குறைவாக செட் செய்ய வேண்டாம். மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் குளிர்விக்கும் பயன்முறையை விட, 'உலர் பயன்முறை' (Dry Mode) சிறந்தது. இது அறையில் உள்ள ஈரப்பதத்தைக் குறைத்து, வசதியாக வைத்திருக்க உதவும். தெர்மோஸ்டாட்டை உகந்த வெப்பநிலைக்கு அமைப்பதன் மூலமும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்படுவதன் மூலமும் அதன் ஆற்றல் திறனை பராமரிக்கலாம்.
4. மின் பாதுகாப்பு: நாம் வசிக்கும் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றால் ஏசியை பாதுகாக்க ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது மிகவும் அவசியம். திடீர் மின் ஏற்ற இறக்கங்கள் (voltage fluctuations) ஏசியின் பாகங்களுக்கு சேதம் விளைவிக்கும். இதை தவிர்ப்பதற்கு ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது நல்லது.
5. மழை ஏர் கண்டிஷனரை சேதப்படுத்துமா? பெரும்பாலான ஏர்கண்டிஷனர்கள் மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் சேதம் ஏற்படாது. வெள்ளம் போன்ற அதிகப்படியான நீர் வெளிப்பாடு சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க, வெளிப்புற அலகு ஒரு உயர்ந்த மேடையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பராமரிப்பு மற்றும் கவனத்துடன் ஏசியை பயன்படுத்துவது வசதியான மற்றும் ஆரோக்கியமான உட்புற சூழலை வழங்கும். எனவே, மழையின் பொழுது ஏசியை அணைக்க வேண்டிய அவசியமில்லை.