

பொழுதுபோக்கிற்கு தற்போது எத்தனையோ சமூக ஊடகங்கள் இருக்கின்றன. திரைப்படம், வெப் சீரிஸ், டி.வி சீரியல், செல்போன், முகநூல் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ் என்று எக்கச்சக்கமான வழிகள் உண்டு. ஆனால். இவற்றை எல்லாம் அதிகளவில் பார்க்கும்போது கண் பார்வைக் கோளாறுகள் மட்டுமல்ல, மனரீதியான பிரச்னைகளும் வருகின்றன.
டி.வி. சீரியல்கள் பார்க்கும் பெண்கள் அதிகளவு மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஓ.டி.டியில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும், வெப் சீரீஸ்களும் ஆபாசம் நிறைந்து, வன்முறைக் காட்சிகளை அதிகம் கொண்டுள்ளதால் இவை இள வயதினரை மன ரீதியாக பாதிக்கிறது.
எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் புத்தகத்திற்கு தனித்துவமான இடம் உண்டு. அதற்கு வருடா வருடம் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அதிகரித்து வரும் புத்தக விற்பனையே சாட்சி. புத்தகம் அப்படி என்னதான் செய்கிறது ஒரு மனிதனுக்கு என்று பார்த்தால். அதனுடைய பயன்களும் நன்மைகளும் ஏராளம்.
புத்தகம் படிக்கும்போது அவை கண் முன் காட்சியாக விரிவதால் நமது கற்பனை சக்தி தூண்டப்படுகிறது. மேலும். படித்தவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள ஏதுவாக ஞாபக சக்தி அதிகரிக்கிறது. கவனமும் அதில் குவிகிறது. முழு கவனத்தையும் வைத்து படிப்பதால் கவனச்சிதறல்கள் இன்றி நல்ல ஒரு மன ஒருமைப்பாடு கிடைக்கிறது.
மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்து புத்தகம். கவலைகளை மறந்து விட்டு நம்மை அதன் உலகத்தில் கட்டிப்போட்டு விடும் சக்தி புத்தகத்திற்கு உண்டு. ஒரு மனிதன் தன்னைத்தானே சரியாக அறிந்து கொள்வதற்கும் தன்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கும் அவர்களுடனான உறவை சரியாக மேம்படுத்திக் கொள்வதற்கும் புத்தகங்கள் உதவுகின்றன.
லட்சிய நோக்கு கொண்டவர்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டுவது புத்தகங்கள்தான். தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும் மேம்படுதலுக்கும் மிகச் சிறந்த கருவியாக புத்தகம் விளங்குகிறது. புதிய புதிய பல விஷயங்களைக் கற்றுத் தருவதோடு, உறவுகள், வாழ்வில் எழும் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வைத் தருகின்றன புத்தகங்கள். இரவு தூங்கும் முன்பு செல்போனையே நோண்டாமல் புத்தகம் படிப்பதால் கண்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்து ஆழ்ந்த தூக்கம் வருவது உறுதி.