உள்ளத்தை குடோனாக்கி அழுக்கு மூட்டை சேர்க்காதீர்கள்!

உள்ளத்தை குடோனாக்கி அழுக்கு மூட்டை சேர்க்காதீர்கள்!
Published on

நாம் எல்லோருமே பழைய அழுக்கு மூட்டை ஒன்றை சேமித்து வைத்து இருக்கின்றோம். அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... என பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் நிறைய குவிந்து இருக்கின்றன. அவற்றை கண்ணும் கருத்தாக பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனம் இல்லை. நம் வீடுகளில் என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.

மன்னர் விருந்து அளிக்கப்போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததை பிச்சைக்காரன் ஒருவன் பார்த்தான். தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம். தைரியத்தை வர வழைத்துக் கொண்டு, அரண்மனைக்குள் வந்து அரசரிடம், ''நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கிவிட்டு, “இனி உனக்கு வேறு எந்த உடையும் தேவைப்படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப்படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தனது பழைய உடைகளை வாரிக் கொண்டான். வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை. எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது. அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அவனுக்கு பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகம் அடைவதைக் கண்டான். ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும், கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையை விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com