சோஷியல் மீடியாவில் உங்கள் தகவல்களைத் திறந்து வைக்காதீர்கள்!

சோஷியல் மீடியா
social media

ன்டர்நெட் வந்த பிறகு உலகமே செல்போனுக்குள் மாறிவிட்டது. போட்டோக்களை எடுத்து ஷேர் செய்துகொள்வது, இமெயில் பார்ப்பது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புகுந்து கருத்துச் சொல்வது என எல்லாவற்றுக்குமான கருவியாக செல்போன் மாறிவிட்டது. தொழில்நுட்பம் என்பது இரண்டு முனை கூர்மையான கத்தி. முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது பயன்படுத்துகிறவரையே பதம் பார்த்துவிடும். இதோ இந்த கற்பனைக் கதையைப் படித்து பாருங்கள். பிறகு சைபர் குற்றங்கள் விபரீதத்தை பற்றி உணர்வீர்கள்.

ஆஷா பிளஸ்டூ படிக்கும் மாணவி. நல்ல மதிப்பெண்கள் பெற்று, நகரிலேயே மிகச் சிறந்த பள்ளியில் படித்து வந்தாள். ஆனால், திடீரென அவளது கவனம் சிதற ஆரம்பித்தது. ஒரு நாள் ஆஷா தற்கொலைக்கு முயற்சித்தாள். கடைசி நிமிடத்தில் கவனித்துப் பெற்றோர் அவளைக் காப்பாற்றினர். முன்பின் தெரியாத பல்வேறு எண்களிலிருந்து தனது செல்போனுக்கு மிரட்டல் அழைப்பு வருகிறது என்றும், அதில் ஒருவன் அவளின் ஆபாசப் படத்தை வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் சொன்னாள்.

போலீஸில் புகார் செய்து விசாரித்தால், அதில் ஒரு எண் அவளுடன் பள்ளியில் படிக்கும் உயிர்த்தோழியின் செல்போன் எண் என்பது தெரிகிறது. “எப்போதும் எங்கள் வீட்டில் ஆஷாவை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். 'ஆஷாவைப் போலப் படிக்க வேண்டும்; அவளைப் போல நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஆஷாவைப் பழிவாங்கத் திட்டமிட்டேன்” என்றாள் அந்தத் தோழி. ஆஷாவைப் பற்றித் தெரிந்த தகவல்களையும், ஆஷாவின் புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவிலிருந்து எடுத்து தனது அண்ணன், நண்பர்கள் என்று பலருக்கும் கொடுத்து மிரட்டச் சொல்லியிருக்கிறாள்.

ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வினிதாவுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. 'இந்த இணையதளத்திற்கு சென்று பார்' என அந்த மின்னஞ்சல் கட்டளையிட்டது. குறிப்பிட்ட அந்த இணையதளம், பாலியல் தொழில் செய்து வரும் பெண்களின் விவரங்கள் உள்ள இணையதளம். அதைப் பார்த்த வினிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அந்த இணையதளத்தில் வினிதாவின் பெயரும், செல்போன் எண்ணும் போடப்பட்டு, அவளுடைய புகைப்படமும் பதிவேற்றப்பட்டிருந்தது.

தன்னுடைய மேலதிகாரி ஒருவரிடம் இந்தப் பிரச்னையை அவள் எடுத்துச் சொல்ல, அவர் உடனடியாக சைபர் க்ரைம் போலீஸில் சொன்னார். அந்த இணையத்திலிருந்து அவள் தொடர்பான விவரங்களை அகற்றியதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட ஆட்கள் அனைவருக்கும் தண்டனை வாங்கித் தரவும் செய்தார்.

இதையும் படியுங்கள்:
9 வகை என்னேகிராம் ஆளுமைத்தன்மைகளில் நீங்கள் எந்த வகை தெரியுமா?
சோஷியல் மீடியா

இப்படி தினம் தினம் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள். சமூக வலைதளங்களில் அறிமுகமாகி, அதன் மூலம் தகவல்களைத் திரட்டி இப்படி நிகழும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் சட்டமும் முழி பிதுங்குகிறது. நாகரிக வளர்ச்சியை தவிர்க்க முடியாது. அதேசமயம் விழிப்போடு இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

ஒவ்வொருவரின் புகைப்படமும் ரகசியமாகப் பாதுகாக்க வேண்டிய விஷயம். சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தினம் தினம் தங்கள் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார்கள். இப்படிப் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் அளவுக்கு பொதுச்சொத்து ஆக்கிவிடக் கூடாது. திறந்திருக்கும் வீட்டுக்குள்தான் திருடர்கள் எளிதாக நுழைகிறார்கள். உங்கள் தகவல்களைத் திறந்து வைக்காதீர்கள்.

சோஷியல் மீடியாக்களில் உங்கள் புகைப்படங்களை போடுவது, உங்கள் வீட்டு படங்களைப் போடுவது, உங்கள் வீட்டில் நடக்கும் விழாக்களின் படங்களை போடுவது எல்லாமே ஆபத்துகள்தான். ஏனென்றால், குற்றம் செய்பவர்கள் எங்கே துருப்புச்சீட்டு கிடைக்கிறது என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வழிவகை செய்து விட வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com