காலை உணவைத் தவிர்க்கக் கூடாது: ஏன் தெரியுமா?

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது: ஏன் தெரியுமா?

‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு... வேன் வந்திடும்... எனக்கு எதுவும் வேண்டாம்’ எனக் கூறிக்கொண்டு ஷூ லேஸைக் கட்டியபடி முதுகில் புத்தக சுமையுடன் ஓடும் சிறுவர், சிறுமியரை தினசரி காணலாம். கூடவே அவர்கள் பின்னாலேயே டிபன் பாக்ஸை தூக்கிக் கொண்டு ஓடி, ‘போற வழியில் இதை சாப்பிடு தங்கம்’ என்று சொல்லி டிபன் பாக்ஸை கொடுக்கும் அம்மாக்களையும் காணலாம்.

இது எல்கேஜி குழந்தைகள் முதல் கல்லூரி செல்வோர் வரை தொடரும் தினசரி காட்சிகள். இவர்கள் மட்டுமல்ல, பணிக்குச் செல்லும் பெண்களிடமும் இந்தக் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் இருப்பதைக் காணலாம். காரணம் அவசரம், நேரமின்மை, பரபரப்பு போன்றவைதான்.

காலை உணவு என்பது உடலில் புத்துணர்ச்சி தந்து புதிய செல்கள் துளிர்ப்பதற்கு சூரிய உதயத்திற்கு பிறகு எடுத்து கொள்ளும் முதல் உணவு. இது நமது ரத்த நாளங்களில் ஆற்றலை உண்டு பண்ணக்கூடியது. அதனால் காலை உணவை ரசித்து, ருசித்து, நிதானமாக உடலுக்குள் செலுத்த வேண்டும். இரவெல்லாம் வறண்ட வயிறு, காலை உணவில் உள்ள சத்துக்கள் ஏற்று, உடலில் உள்ள ரத்த நாளங்களுக்கு செலுத்துகின்றது. இதுதான் உடலுக்கு உண்மையான ஆற்றல்.

உணவு உட்கொள்ளும் நேரத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர்கள். பால போஜனம் (காலை உணவு 7  - 8 மணிக்குள்), குமார போஜனம் (முற்பகல் உணவு 10.30 - 11.00 மணிக்கு), போஜனம் (பிற்பகல் உணவு 3 மணி அளவில்) என்பதே அது. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் புறப்படும் நேரம் மாறுபட்டாலும், காலை ஒரு வேளையாவது நாம் குடும்பமாக உணவை அருந்த வேண்டும். அந்நேரம் யார் இடையே வந்தாலும், ‘சாரி எங்க குடும்பத்தோட பிரேக்பாஸ்ட் சாப்பிடற டைம். பிறகு பேசுவோம்’ என்று சொல்லப் பழக வேண்டும். காலை பத்து நிமிடங்களாவது குடும்பமாக இருந்து பிறகு, அவரவர் வேலையை பார்க்க வேண்டும். இது உணவு உண்ணும் நேரமாக இருப்பது சிறப்பு.

பறவைகள் கூட உணவு தேட கிளம்புவதற்கு முன் முதலில் மரங்களில் கூடி கூவிவிட்டு பிறகு வெவ்வேறு திசைகளில் பறக்கும். பின்பு மாலையில் ஒரு மீட்டிங் போட்டு விட்டு பிறகே தத்தம் கூடுகளுக்குச் செல்லும். ஆனால் நாம்? எல்லோரும் எவ்வளவு அவசரம் என்றாலும்  காலை உணவை மட்டுமாவது அவரவர் வீட்டு டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும் என்பதை கட்டாயம் கடைபிடியுங்கள். இதனால் ஆரோக்கியம் மட்டுமல்ல; குடும்பத்தில் பாசமும் வளரும்.

நாம் நம் குழந்தைகளுக்கு என்ன பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருகிறோமோ, அதையே அவர்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு தருவார்கள். மூன்று வேளை உணவை கட்டாயம் முறையுடன் எடுத்துக்கொள்ள கற்றுத் தருவோம். உணவின் அவசியத்தை எடுத்துச் சொல்லி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக உதவுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com