“என் கடைசி காலத்தில் நான் யாரையும் நம்பி இருக்க மாட்டேன். குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி படிக்க வைப்பது நமது கடமை. அந்தக் கடமையை நாம் சரியாகச் செஞ்சிடுவோம். அதுக்காக அவங்க நம்மை வைத்துக் காப்பாத்தணும்னு எதிர்பார்க்கறது முட்டாள் தனம்” என்றெல்லாம் சிலர் அடிக்கடி பேசுகிறார்கள்.
கடைசி கால வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அமைத்துக்கொள்ளும் திறன் மற்றும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் எதிர்பார்க்காத குணம் இருப்பவராக இருந்தாலும்கூட, இப்படி அடிக்கடி குழந்தைகள் காதில் விழும்படியாக, 'நான் யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்... எதிர்பார்க்க மாட்டேன்' என்று சொல்வது தவறு.
பல முறை ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அது சரியோ, தவறோ குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.
இப்படிச் சொல்லும்போது குழந்தைகள் படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும்போது, ‘நம் பெற்றோர்கள் நம்மிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை’ என்றே அவர்கள் மனதில் தோன்றும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொண்டால் மட்டும் போதும் என்றும் தோன்றும்.
குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்குவது எப்படி பெற்றோர்களின் கடமையோ, அதேபோல் பெற்றோரை அவர்களின் எந்த நிலையிலும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பொருளாதாரத்திலோ பலவீனமாக இருந்தாலும் அவர்களை நல்ல நிலையில் சந்தோஷமாக வைத்திருப்பது அவர்கள் குழந்தைகளின் கடமையாகும் என்பதை தெளிவுபடுத்தித்தான் ஒவ்வொருவம் தங்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பதுதான் பிற்காலத்தில் பெற்றோர்களை அவர்கள் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வதற்கான அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.