நோயாளியிடம் நலம் விசாரிக்கப் போகையில் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!

Health inquiry
Health inquiry
Published on

மது உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று நலம் விசாரிப்பது நமது வழக்கம். அத்தகைய சமயத்தில் நாம் செய்யக் கூடாதது மற்றும் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பொதுவாக, நோயாளிகள் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து தங்களை நலம் விசாரிக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அப்படிச் செய்யும்போது அவர்களது மனம் ஆறுதலடையும்.  ‘நமக்காக இத்தனை பேர் இருக்கிறார்களே’ என்ற எண்ணம் அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும். இது அவர்களுடைய நோய் விரையில் குணமாகவும் வழிவகை செய்யும்.

ஒரு நோயாளியை நேரில் சென்று பார்த்து அவருக்கு ஆறுதலாக நான்கு வார்த்தை கூறுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், அவரிடம் தேவையில்லாத விஷயங்களை வளவளவென பேசுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது டிப் டாப்பாக உடை அணிந்து மேக்கப் செய்து கொண்டு செல்லாதீர்கள். மிகவும் எளிமையான உடை அணிந்து இயல்பாகச் செல்லுங்கள்.

சிலர், நோயாளிகளிடம் அவருக்கு வந்திருக்கும் நோய் மிகவும் ஆபத்தானது. எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பயமுறுத்தும் வகையில் பேசுவார்கள். நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது அவர்களுடைய நோயைப் பற்றி ஏதும் பேசாதீர்கள்.

சிலர் நோயாளியின் எக்ஸ்ரே ரிப்போர்ட், சிடி ஸ்கேன் முதலானவற்றையும் மருந்துச் சீட்டையும்  வாங்கி எல்லாம் தெரிந்தது போலப் பார்ப்பார்கள். அதைப் பற்றிய கருத்தையும் கூறுவார்கள். இதைச் செய்யவே செய்யாதீர்கள். அப்படிச் செய்வதால் அது நோயாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்கும். இப்படிச் செய்வது தவறும் கூட.

நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது எதையும் வாங்கிக் கொண்டு செல்லாதீர்கள். இப்போதெல்லாம் மருத்துவமனையிலேயே நோயாளிகளின் உடல் நலன் பாதுகாப்பு கருதி அவர்களுக்குத் தேவையான உணவுகளை டயட்டீஷியனின் பரிந்துரையின் பேரில் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளைப் பற்றி குறை கூறுவார்கள். நீங்கள் அப்படிச் செய்யாதீர்கள். இது நோயாளிகளுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.

நோயாளிகளைச் சந்திக்கும்போது அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதீர்கள்.   ஆனால், புன்னகையோடும் மலர்ந்த முகத்தோடும் பேசுங்கள். உங்கள் பேச்சு அவர்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைய வேண்டும். “எதுக்கும் கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா எப்ப வேணும்னாலும் எந்த நேரத்திலும் என்னைக் கூப்பிடுங்க. உடனே ஓடி வந்துடறேன்” என்று அவரிடம் கூறுங்கள். இத்தகைய நம்பிக்கை வார்த்தைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நோயாளிகள் படிக்கும் சூழ்நிலையில் இருந்தால் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தரக்கூடிய நூல்களை வாங்கிக் கொடுங்கள். அதைப் படிப்பதன் மூலம் அவர்களின் மனதில் தெம்பும் நம்பிக்கையும் பிறக்கும்.

நோயாளியுடன் தங்கி அவர்களை கவனித்துக்கொள்ளுவது என்பது மிகவும் கடினமான செயலாகும். தூங்க முடியாது. தூங்காமலும் இருக்க முடியாது. கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.  நீங்கள் நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளுபவரிடம் (Attender) உங்களுக்கு சாப்பிட ஏதாவது தேவையா? என்று விசாரியுங்கள். தேவை என்றால் வாங்கிக் கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
குடல் இயக்கம் சரியாக நடைபெறாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா?
Health inquiry

உங்களுக்கு நேரமிருப்பின், “இவரை நான் சற்று நேரம் பார்த்துக் கொள்ளுகிறேன்.  நீங்கள் வெளியே சென்று காபி, டீ ஏதாவது அருந்தி விட்டு வாருங்கள்” என்று சொல்லுங்கள். இது அவர்களுக்கு சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

மருத்துவமனைக்குச் சென்று நோயாளியைப் பார்க்க வேண்டும் என்றால் உரிய பார்வையாளர்கள் நேரத்தில் மட்டுமே (Visiting Hours) செல்லுங்கள். இது உங்களுக்கும் நல்லது. நோயாளிக்கும் நல்லது. மற்ற நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை பணியாளர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com