
இந்தியாவில் டீ, காபி பிரியர்கள் மிக அதிகம். காலையில் எழுந்த உடனே தங்களது நாளை டீ அல்லது காபி போன்ற பானங்களில் தான் தொடங்குகின்றனர். பல பேருக்கு டீ, காபியின் மீது போதை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அதன் மீது அலாதி பிரியம்.
மன அழுத்தம் போன்ற பிரச்னைகளில் இருப்பவர்கள் கூட, அந்த நேரத்தில் டீ அல்லது காபியைதான் அதிகமாக விரும்புகின்றனர். சிலருக்கு டீ அல்லது காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வருவதாகக் கூறுகின்றனர். அதனால் இந்த பானங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
ஆனால், இதனால் நம் உடலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் டீ, காபி பானங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பலர் இதை பற்றி அறியாமல் ஒரு நாளைக்கு நான்கைந்து டீ அல்லது காபியை பருகுகின்றனர்.
மக்கள் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும் டீ, காபியை நிறுத்துவது கடினமான ஒன்றுதான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
டீ, காபி பிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?
டீ மற்றும் காபியில் டானின் என்ற கலவை இருக்கிறது. இதுதான் டீ, காபியில் கசப்பான சுவையை கொடுக்கிறது.
இந்த பொருளின் காரணமாகவே ஒரு மாதிரியான அடிக்ஷனும் அதன் மீது ஏற்படுகிறது.
ஆனால், இது குடல் திசுக்களை சேதப்படுத்தி, வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மேலும் குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.
அதனால் டீ, காபி பிரியர்கள், அவற்றை அருந்துவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், தண்ணீர் அருந்த வேண்டும்.
ஏனெனில், டீ, காபி அருந்துவதற்கு முன் தண்ணீர் அருந்துவது உடலின் PH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. எனவே டீ, காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்க முடியும்.
மேலும் இவ்வாறு தண்ணீர் அருந்தும்போது அது தேநீரில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும்.
முடிந்தளவு அளவோடு டீ, காபியை பருக வேண்டும். அதுவும் தண்ணீர் அருந்தி 15 நிமிடங்களுக்கு பின் டீ அல்லது காபியை அருந்தினால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அது சரி... நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை டீ அருந்துவீர்கள்? கமென்டில் பதிவிடலாமே!