
எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வேலையை செய்யவேண்டும் என்று பெரியோர்கள் வகுத்து வைத்திருப்பதிலும் ஒரு கணக்கு உண்டு. குறிப்பாக பெண்களுக்கு பிரசவ நேரத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை இப்பதிவில் காண்போம்.
என் தோழியின் மகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்து இருந்தது. குழந்தையை பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது, அப்பொழுதுதான் வீட்டின் முன்பகுதி வாசலை இடித்து மராமத்து பணிகளை செய்து கொண்டிருந்தார்கள். இது வீட்டை சுற்றிய மூன்று புறங்களிலும் நடந்து கொண்டிருந்தது. கடப்பாரையால் அந்த நிலத்தை தோண்டி கற்களை பதித்து சிமெண்ட் பூசி என்று வேலைகள் முடிவதற்கு ஒரு வாரம் அதற்கு மேலேயும் ஆகிவிட்டது.
தோழியின் மகளோ அப்பொழுதுதான் டெலிவரி ஆகி 7, 8 நாட்கள் தான் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் இந்த சப்தங்கள் குழந்தையையும், அவளையும் வெகுவாக பாதித்தது. தூங்க முடியவில்லை. சிறிது நேரம் வெளியில் வரவேண்டும், தலையை காயவைக்க வேண்டும் என்றாலும் எல்லா பக்கமும் ஆண்கள் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் மிகவும் தர்ம சங்கடமாகி போய்விட்டது அவளுக்கு.
அவளின் அப்பாவிற்கோ வேலை முடிந்தால் போதும். பிறகு மகளும், குழந்தையும் வெளியில் தாராளமாக வந்து அமர்வார்கள் என்பது எண்ணம். இதில் மற்றவர்கள் இந்த நேரத்தில் இது போன்ற வேலைகளை எல்லாம் செய்யக்கூடாது, என்று கூறினாலும் அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆட்களை வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்.
மேலும் வீட்டை ஒட்டிய ரோட்டு பக்கத்தில் குழந்தைகள் தினசரி விளையாடுவது உண்டு. அப்படி சத்தம் போட்டு விளையாடும்போது இவர் சென்று வீட்டில் குழந்தை பிறந்து இருக்கிறது. சத்தம் போடாதீர்கள். அந்த பக்கம் போய் விளையாடுங்கள் என்று கூற வீட்டினர் பிடித்துக் கொண்டார்கள். குழந்தைகள் விளையாடுவது ரோட்டில். நம் வீட்டில் இல்லை. நாம்தான் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது. நம் வீட்டில் விழும் கடப்பாறை சத்தம் நம்மை பாதிக்காதா? இதை விட்டுவிட்டு குழந்தைகள் விளையாடுவதை ஏன் நிறுத்தினீர்கள்? என்று பேச அவருக்கும் தர்ம சங்கடமாகி போய்விட்டது.
ஆதலால், வீட்டில் பெண்மணிகள் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பேறு காலத்தில் இதுபோன்ற மராமத்து வேலைகளை அதற்கு முன்பாகவோ அல்லது குழந்தை பிறந்த சில மாதங்கள் கழித்தோ செய்வதுதான் எல்லோருக்கும் நல்லது.
அதேபோல் வீட்டை ஒட்டிய தோட்டத்தில் இருக்கும் மரம், செடி, கொடிகளை வெட்டுவது, அதற்கு பந்தல் அமைப்பது ,மரங்களில் இருந்து தேங்காய் பறித்து போடுவது இது போன்ற செயல்களையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.
என் தோழிக்கும் இந்த சமயத்தில் வீட்டிற்கும் வரும் நட்பு, விருந்தினர்களை உபசரிக்கவே நேரம் போதவில்லை. இதனுடன் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பவர் களையும் கவனிக்க வேண்டி இருந்ததால், வேலை அதிகமாகி செய்ய முடியாமல் அலுப்பும் சலிப்பும் அதிகமாகிவிட்டது. வீட்டிற்கு வந்து போகின்றவர்கள் அனைவரும் எதுக்கு இந்த வேலையை இப்பொழுது ஆரம்பித்தீர்கள். பிறகு பார்த்துக் கொண்டிருக்கிறலாமே என்பதாகவே பேசினார்கள்.
ஆதலால் வீட்டில் வளைகாப்பு நடக்கவிருக்கிறது என்றால் அப்போதிலிருந்து வீட்டில் பெயிண்ட் அடிப்பது, வாசலை உயர்த்தி கட்டுவது, தோட்ட வேலைகளை செய்வதற்கு ஆட்களை நியமிப்பது போன்ற வேலைகளை தடுத்து நிறுத்திவிட்டு, தாயையும், சேயையும் அவர்களைப் பார்க்க வருபவர்களையும், கனிவுடன் நலமுடன் கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
அப்படி செய்தால்தான் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கும் சிறிதளவு ஓய்வும், நிம்மதியும் கிடைக்கும் தாயும், சேயும் அமைதியாக அவரவர் வேலைகளை செய்யமுடியும். இரவில் கண் விழித்து அழும் குழந்தையை பார்த்துக்கொள்ளும் கடமையையும் சரிவர செய்ய முடியும். இதனால் பகலிலும் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும். இதை அவரவர் வீட்டு ஆண்கள் உணர்வது மிக மிக அவசியம்.