
நவரத்தினங்களை மோதிரத்தில் பதித்து அணிந்துகொள்வதே சிறப்பான முறை. ரத்தினத்தின் அடிப்பகுதியில் மோதிரத்தில் சிறு துவாரம் இருக்க வேண்டும். ரத்தினத்தின் வழியாகப் பாயும் கிரகத்தின் ஆற்றல் நம் உடலில் பாய்வதற்கு இந்த துவாரம் பயன்படும்.
மோதிரத்தை தங்கத்தில் செய்யவே பெரும்பாலோர் விரும்புகின்றனர். தங்கம், செம்பு, வெள்ளி, பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட மோதிரத்தில் ரத்தினத்தை பதிக்கலாம். எனினும், ஒவ்வொரு ராசிக்குரிய கிரகம் எதுவோ அது எந்த உலோகத்தின் தன்மை கொண்டது என்பதை அறிய வேண்டும். இப்படி அறிந்து அந்த கிரகத்திற்கு பொருத்தமான உலோகத்தில்தான் மோதிரம் செய்ய வேண்டும். ரத்தினங்களைப் பதித்து மோதிரம் செய்யும்போது கிரகங்களின் திசையையும் கோணத்தையும் அறிந்து அவற்றை முறைப்படி பதிக்க வேண்டும்.
சூரிய கிரகத்திற்கு தாமிரம் என்னும் செம்பு ஏற்றது. சந்திரனுக்கு ஈயம் என்னும் வெள்ளீயம் ஏற்றது. செவ்வாய் கிரகத்திற்கு செம்பு ஏற்றது. புதன் கிரகத்திற்கு பித்தளை உலோகம் ஏற்றது. குரு கிரகத்திற்கு பொன் மிகச் சிறந்தது. சுக்கிரனுக்கு கலப்படம் இல்லாத வெள்ளி சிறந்தது. சனிக்கு பொருத்தமான உலோகம் இரும்புதான். ராகுக்கு ஏற்ற உலோகம் எதுவும் இல்லை. கருங்கல் என்கிறது ஒரு ஜோதிடக் குறிப்பு. கேதுவுக்கும் ஏற்ற உலோகம் இல்லை. துருக்கல் என்னும் கல்தான் ஏற்றது. அதனால் ராகுவுக்கும் கேதுவிற்கும் ஒருவித கல்லின் களிமண்ணினால் தயாரிக்கப்படும் மோதிரங்களில் ரத்தினத்தை அமைக்கலாம்.
ராகுவிற்குரிய மோதிரம் தயாரிக்கும்போது மந்தார மலரின் நிறத்தை பீங்கான் மோதிரத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். கேதுவுக்குரிய மோதிரத்தை தயாரிக்கும்போது மோதிரம் தயாரிக்கும் பீங்கானில் செவ்வல்லி மலரின் நிறத்தை அமைக்க வேண்டும். சூரிய கிரகத்துக்குரிய மாணிக்கத்தை மோதிரத்தின் நடுப்பகுதியில் வட்டமான வளையத்தினுள் அமைக்க வேண்டும். சந்திர கிரகத்திற்குரிய முத்தை தென்கிழக்கு பகுதியில் சதுரமாக அமைத்து அதன் நடுவே பொருத்த வேண்டும். செவ்வாய் கிரகத்துக்குரிய பவளத்தை தெற்கு பகுதியில் முக்கோண வடிவம் அமைத்து அதன் நடுவே பொருத்த வேண்டும்.
புதன் கிரகத்திற்குரிய மரகத பச்சையை அம்பு போன்ற வடிவம் அமைத்து அதில் மரகத பச்சையை வைத்து வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும். குரு கிரகத்துக்குரிய புஷ்பராகத்தை வடக்கு பகுதியில் நீண்ட சதுர வடிவம் அமைத்து அதன் நடுவே பொருத்த வேண்டும். சுக்கிர கிரகத்திற்குரிய வைரத்தை கிழக்கு பகுதியில் ஐங்கோண வடிவம் அமைத்து அதன் நடுவே பொருத்த வேண்டும்.
சனி கிரகத்துக்குரிய நீலத்தை மேற்குப் பக்கத்தில் வில் வடிவம் அமைத்து அதன் நடுவே பொருத்த வேண்டும். ராகு கிரகத்துக்குரிய கோமேதகத்தை கொடி வடிவம் போல் அமைத்து தென்மேற்கு பகுதியில் பொருத்த வேண்டும். கேது கிரகத்திற்குரிய வைடூரியத்தை குடில் போன்ற வடிவம் வைத்து வடமேற்கு பகுதியில் பொருத்த வேண்டும்.
ஒன்பது ரத்தினங்களின் அடிப்பகுதியில் மோதிரத்தில் சிறு துவாரம் இருக்க வேண்டும். இந்த ஒன்பது ரத்தினங்களை மோதிரத்தை பஞ்சலோகத்தில் செய்வது சிறந்தது. பஞ்சலோகம் என்பது பொன், செம்பு, பித்தளை, வெள்ளி, ஈயம் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்து தயாரிக்கப்படுவது. இப்படி அமைத்துக் கொள்வதால் ஒன்பது கிரகங்களின் ஆற்றலும் மோதிரத்தை அணிந்து கொள்பவர்களுக்குக் கிடைக்கும்.
பத்து வயதிற்குக் குறைந்தவர்கள் நவரத்தினங்கள் பதித்த நகைகளை அணியக் கூடாது. இரவு நேரத்தில் நவரத்தின நகைகளை அணியக் கூடாது. திருமணமான ஆண்களாயினும் பெண்களாயினும் காலையில் நீராடிய பிறகு நவரத்தின நகைகளை அணிந்துகொள்ள வேண்டும். கடுமையான நோய்களுக்குள்ளான நோயாளிகள் நவரத்தின நகைகளை அணியக் கூடாது. கருவுற்ற பெண்களோ தீட்டாக இருக்கும் பெண்களோ நவரத்தின நகைகளை அணியக் கூடாது. நவரத்தின நகைகளைக் கழற்றி வைக்கும்போது தூய்மையான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நவரத்தினங்களை தாலியிலும் பதிக்கக் கூடாது. தாலி செயினிலும் இணைக்கக் கூடாது.
மனிதனுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றாலும், அவற்றிற்கு அடிப்படை வாதம், பித்தம் கபம் ஆகிய மூன்று தன்மைகளேயாகும். குரு, புதன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் பலவீனமுற்றிருந்தால் அவருக்கு வாத நோய் ஏற்படும். மூன்று கிரகங்களில் ஏதாவது ஒன்று பலவீனமுற்றிருந்தாலும் அவருக்கு வாத நோய் ஏற்படும். ஒருவர் ஜாதகத்தில் சூரியனோ, செவ்வாயோ, ராகுவோ, கேதுவோ வலிமையற்றிருந்தால் பித்து சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
சிலோத்துமம் என்றால் குளிர்ச்சி என்றும் கபரோகம் என்றும் பொருள். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனோ, சந்திரனோ வலிமை குன்றியிருந்தால் கப நோய்கள் ஏற்படும். எந்த கிரகத்தின் வலிமை குறைவால் என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தை நகையாக உடலில் அணிந்து கொண்டால் அந்த நோய் விரைவில் குணமடையும்.