மன அமைதியைத் தரும் அதிகாலை தியானம்!

Meditation
Meditation
Published on

னதை ஒருமுகப்படுத்தி சூரிய உதயத்திற்கு முன் காலையில் தியானம் செய்வது அபரிமிதமான சக்திகளையும், எண்ணற்ற பலன்களையும் தரும். முதல் படியாக அதிகாலை தியானம் மன அமைதியை பெற்றுத் தரும். ஆழ்ந்த உறக்கத்தில் கிடைக்கும் ஓய்வை விட தியானத்தில் கிடைக்கும் ஓய்வு ஆழமானது.

தியானம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. தினமும் 20 நிமிடங்களாவது தியானம் செய்ய நமக்குள் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். மனதை அடக்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கும் நம் மனம்தான் காரணம். அதேபோல் நமக்கு ஏற்படும் நோய்களுக்கும் நம்முடைய ஆரோக்கியமற்ற எண்ணங்கள்தான் காரணம்.

மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய நம்மால் பல சாதனைகளைப் புரிய முடியும். எண்ணம் போல் வாழ்வு. நம் எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் நம் வாழ்வும் நல்ல முறையில் இருக்கும். அதற்கு மனதை அடக்கிக் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழக வேண்டும். தியானம்தான் அதற்கு வெகுவாக கை கொடுக்கும். தியானப் பயிற்சி மூலம் நம்மால் ஆரோக்கியத்தையும் அற்புத ஆற்றல்களையும் பெற முடியும்.

மனதை அடக்க தியானம் ஒரு சிறந்த கருவி. எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். இதனால் நம் உடலும் மனமும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகாலைதான் தியானத்திற்கு உகந்த நேரம். காலையில் முடியாதவர்கள் மாலை நேரத்தில் செய்யலாம். அமைதியான சூழ்நிலையில் தியானம் செய்ய தியானம் விரைவில் கைகூடும். தியானம் செய்ய இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான ஆடைகளை அணிவதும், வயிறு காலியாக இருக்குமாறும் பார்த்துக்கொள்வது அவசியம்.

தியானத்தால் பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை அகலும். நினைவாற்றலை பெருக்குவதுடன் நேர்மறையான எண்ணங்களையும் உருவாக்கும். கவனச் சிதறலையும், எதிர்மறை எண்ணங்களையும் போக்கும். சுவாசத்தை சீர்படுத்தும்.

தியானத்தில் நான்கு நிலைகள் உள்ளன. மனதின் கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்துவது முதலாம் நிலை. ஒரே விஷயத்தில் மனதை செலுத்தி அதில் முழுமையாக ஈடுபடுவது இரண்டாம் நிலை. இதன் மூலம் உலக விஷயங்களில் வெற்றியை பெற முடியும். நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் முழுமையாக ஈடுபட்டு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட உணராமல் முழுமூச்சாக செயல்படுவது மூன்றாம் நிலை. நான்காவது நிலை எதிலும் ஆட்சி செய்யும் பேராற்றலை பெறுவது. தியானத்தில் உடனடியாக பலன்களை எதிர்பார்த்தல் கூடாது. படிப்படியாகத்தான் நம் மனம் அடங்கி நம் சொல் பேச்சு கேட்கும்.

இதையும் படியுங்கள்:
ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?
Meditation

சிலருக்கு ஆரம்பத்தில் தியானம் செய்யும்பொழுது இருக்கும் ஆர்வம் போகப்போக வெகுவாகக் குறைந்து விடும். தியானம் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். நோய்களைப் போக்கும் தியானம்,பிராணாயாமம், ஆசனம் போன்றவற்றை தொடர்ந்து செய்ய மனத் தெளிவும், நோய்கள் அகலவும், புலன்களை அடக்குவதும் எளிதாகும். தியானத்தை அதிகாலையில் செய்வது மிகவும் சிறப்பு. இது அபரிமிதமான ஆற்றலை பெற்றுத் தரும். தியானத்தைக் கண்ட நேரங்களிலும், கண்ட இடத்திலும் செய்வதும், தொடர்ந்து செய்யாமல் விட்டு விட்டு செய்வதும் தவறு. ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் செய்து பழகுவது அவசியம்.

மனம் அலைபாயாமல் இருக்க தியானம் மிகவும் அவசியம். அதற்கு ஆரோக்கியமும், மனக்கட்டுப்பாடும் தேவை. ஆரோக்கியத்திற்கு சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதுடன், உடற்பயிற்சிகளையும் செய்வது எளிதில் ஆத்ம பலம் கிடைக்க வழி வகுக்கும். மறதி, சலிப்பு, அலட்சியம், உலகப் பற்று, சோம்பல், அதீத தூக்கம் போன்றவை தியானத்திற்கான முக்கியத் தடைகளாகும். இவற்றை வெல்வதற்கு ஒரு சிறந்த குருவைத் தேடி அவர் மூலம் தியான பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும். அதிகாலை தியானம் செய்து சிறந்த மன அமைதியைப் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com