இன்றைய சூழலில் உணவில் கலப்படம் என்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. உணவு என்ற பெயரில் நம்மில் பெரும்பாலானோர் இன்று விஷத்தைத்தான் உட்கொண்டு வருகின்றோம். ஆம்! நாம் உண்ணக்கூடிய உணவில் சரிபாதியாக கலப்படம்தான் நிறைந்திருக்கின்றன. கலப்படம் நிறைந்த பொருட்கள்தான் இன்று பல்வேறு உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைக்கின்றன. அதோடு, உடல் ரீதியாகவும் மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
கடைக்குச் செல்லும் பொதுமக்கள் தரமான பொருட்களை ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரம் இல்லாத கலப்படப் பொருட்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. கலப்படம் இல்லாத உணவுப்பொருட்களின் பட்டியலை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சீனி, அரிசி காபித் தூள், காய்கறி மற்றும் பழங்கள் என தொடங்கி, ஏராளமான பொருட்களில் இன்று கலப்படம்தான் ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொருட்களை வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைத் தடுக்க முடியும்.
பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?
பிளாஸ்டிக் என்பது உண்ணத்தகாத பொருட்களின் அடிப்படையில் இருக்கும் ஒரு பொருளாகும். அரிசி என்பது நாம் அன்றாட உணவில் பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருளாகும். ஆனால், தற்போது இருக்கும் மிக முக்கிய சர்ச்சைகளுள் ஒன்று ‘பிளாஸ்டிக் அரிசி.’ பிளாஸ்டிக் அரிசி என்பது சுத்தமான, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியைப் போல் மாற்றப்பட்டு, உண்மையான அரிசியோடு கலக்கப்படுகிறது. பிளாஸ்டிக் என்பது மக்காத, செரிக்காத மற்றும் உண்ணத்தகாத ஒரு பொருளாகும். இப்படியிருக்க, அது நம்முடைய உடலுக்குள் தங்கிவிட்டால் என்ன ஆகும்? இதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட பல நோய்களால் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பிளாஸ்டிக் அரிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது?
* ஒரு டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் அரிசியை போட வேண்டும், அந்த அரிசி மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. அப்படியில்லாமல் அடியில் தங்கிவிட்டால் அதுதான் நல்ல அரிசி என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
* அதேபோல் தீக்குச்சி அல்லது லைட்டரைப் பயன்படுத்தியும் கூட பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட அளவு அரிசியை எடுத்துக்கொண்டு நெருப்பிலிட்டு எரிக்க வேண்டும். அந்த அரிசி எரிந்ததும் பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது போலியான அரிசி ஆகும். உண்மையான அரிசி எரிந்தால் பிளாஸ்டிக் வாசனை வராது. எனவே, இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசியை கண்டறியும் முறையைப் பயன்படுத்தி கலப்படம் நிறைந்த உணவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாமே!