
வீட்டில் இருக்கும் சமயம் குழந்தைகளிடம் தமிழில் மட்டுமே பேச வேண்டும். தொலைக்காட்சி மற்றும் இணைய வழி ஊடகங்களில் தமிழ் நிகழ்ச்சிகளைக் காண ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வெளியில் நண்பர்கள் வட்டத்தில், பள்ளியில் என அவர்கள் அந்நிய மொழியில் பேசினாலும் வீட்டில் இருக்கும் சமயம் தாய்மொழியான தமிழில்தான் பேசப் பழக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் அவர்களுக்கெதிரில் தமிழில் பேச வேண்டும். அப்பொழுதுதான் அவர்களும் அந்த மொழியில் ஆர்வம் காட்டி பேசுவார்கள்.
என் உறவினர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் வீட்டிலும் சரளமாக அந்நிய மொழியில் பேசுவதால் பிள்ளைகளுக்கு தமிழ் பேசவும் தெரியாது, நாம் பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது. இதனால் குழந்தைகளுடைய பாட்டி, தாத்தா அந்த ஊருக்குச் சென்றால் ஊமை பாஷையில்தான் குழந்தைகளிடம் பேசுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை அளிப்பதாக நிறைய முறை எங்களிடம் புலம்பி இருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்: கார்ட்டூன், மழலைப் பாடல்கள் போன்றவற்றை குழந்தைகளைப் பார்க்க வைப்பது நல்ல பலனைத் தரும். இதன் மூலம் குழந்தைகள் பல நல்ல தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு படிப்பதற்கு என்று பல நல்ல தமிழ் புத்தகங்கள் உள்ளன. அவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
தரமான தமிழ் செய்தித்தாள்களை அல்லது புத்தகங்களை வாங்கி வாசிக்கப் பழக்குங்கள். தமிழ் செய்திகளை தொலைக்காட்சி ஊடகங்களில் பார்க்க வைத்து, தமிழின் உச்சரிப்பினை கூர்ந்து கவனிக்கும்படி செய்ய, குழந்தைகள் விரைவில் தமிழை நன்கு கற்றுக் கொள்வார்கள். நல்ல தரமான சினிமாக்கள், பாடல்களைக் கேட்க வையுங்கள். நாகேஷ், விவேக், சந்தானம், மனோரமா, கோவை சரளா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகளை போட்டுக் காட்டலாம்.
தனி பயிற்சி தேவையில்லை: தமிழை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு தனியாக வகுப்பிற்கெல்லாம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. கண் பார்த்து கை செய்வது போல், பெரியவர்கள் பேசுவதைக் காதால் கேட்டு கற்றுக் கொள்வது மிகவும் சுலபம். சிறுவயதில் அது எளிதாக வரும். எனவே, வீட்டில் உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள் தமிழில் பேசினாலே போதும். லகர, ழகர வேறுபாட்டைக் கூட சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.
பெரியவர்கள் சரியான உச்சரிப்பில் பேசுவதைப் பார்த்து, கேட்டு குழந்தைகளும் தானாகவே பிழையின்றி பேசுவார்கள். பெரியவர்களைப் பார்த்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும். எனவே, பெரியவர்கள் தமிழ் நூல்களை படிப்பதில் ஆர்வம் காட்டினால் பிள்ளைகளுக்கும் தானாகவே அந்த ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.
ஆன்லைன் வகுப்பு யோசனைகள்: வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் American Tamil academy, International Tamil Academy போன்ற தமிழ்க் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளும் நடத்துகின்றன. இதுபோல மற்ற நாடுகளிலும் நேரடி பள்ளிகளும், இணைய வழி பள்ளிகளும் நடக்கின்றன.
வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிகள் மூலம் ஓரளவுக்கு எழுத, படிக்க கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், பேசுவதற்குத்தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். பேசுவதற்கு பயிற்சி கொடுப்பது நல்ல பலனைத் தரும். இதற்கு நல்ல தமிழ் தெரிந்த மக்கள், குறிப்பாக தமிழ் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் தமிழை பேச கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் வருங்கால சந்ததிகள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அவர்களை தமிழை மறக்காமல் வளர்க்க முடியும். அத்துடன் வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கு விருப்பமான கதைகள், பாட்டு, விடுகதைகள் போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதும் சிறப்பு.