சூழலுக்கு உகந்த சுடுமண் சிற்பங்கள்: குறைந்த செலவில் பிரமாண்டமான வீட்டு அலங்காரம்!

இயற்கை முறையில் வீட்டை ரசனைமிக்க கலைக்கூடமாக மாற்ற உதவும் சுடுமண் கலைப் பொருட்களின் தொகுப்பு!
சுடுமண் சிற்பங்கள்
சுடுமண் சிற்பங்கள்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வீட்டிற்கு ஒரு தனித்துவமான கலை அழகையும், பாரம்பரியப் பொலிவையும் தரும் சுடுமண் சிற்பங்கள் (Terracotta). நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டிற்கு நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றத்தை தருவதிலும் இந்த சுடுமண் சிற்பங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறைந்த செலவில் வீட்டை இயற்கை முறையில் அழகுபடுத்த இந்த சிற்பங்கள் உதவுகின்றன.

வீட்டுக்கான அலங்காரத் தோரணங்கள், சிறிய மேஜைகள், விளக்குகளுக்கான நிழற்கூடுகள் போன்றவை வீட்டை அழகாக்குகின்றன. விலை உயர்ந்த நவீன அலங்காரப் பொருட்களைக்கொண்டு வீட்டை அழகுபடுத்துவதைவிட இம்மாதிரியான சுடுமண் பொருட்களைக்கொண்டு அழகுப்படுத்த செலவு குறையும், வீட்டிற்கு அழகான தோற்றத்தையும் தரும்.

வரவேற்பறை அலங்காரம் (Living Room):

வரவேற்பறையை கம்பீரமாக மாற்ற யானை, குதிரை வடிவத்திலான பெரிய அல்லது சிறிய சுடுமண் சிற்பங்களை வைக்கலாம். இவற்றை வைப்பதற்கான சிறிய யானை முகம் கொண்ட ஸ்டூல் எனப் பலவகையான பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றை அழகாக இடத்திற்கு ஏற்ப வைத்து வரவேற்பறையை அழகுபடுத்தலாம்; அலங்கரிக்கலாம். இவற்றைத் தவிர புத்தர் மற்றும் காந்தி போன்ற மகான்களின் சிறிய சிலைகளும் வரவேற்பறைக்கு ஒரு அமைதியான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும்.

வரவேற்பறை டீப்பாய் அல்லது அலமாரிகளில் வைப்பதற்கென்று சிறிய அளவிலான அழகான சிலைகள், பொம்மைகள் கிடைக்கின்றன. இவற்றை அதற்கான இடத்தில் வைத்துவிட வரவேற்பறையே ஒரு புதிய அழகைப் பெறும்.

பால்கனி & தோட்ட அலங்காரத்தில்:

பால்கனியை அழகுபடுத்த அன்னப்பறவை, காளை போன்ற விலங்கு வடிவங்களிலான பூந்தொட்டிகள் சிறப்பாக இருக்கும். மேலும் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட தொங்கும் சுடுமண் மணிகள் (Terracotta Chimes/Bells) பால்கனிக்கு அழகிய தோற்றத்தையும், ஓசையையும், நேர்த்தியையும் தரும். ஓசை எழுப்பும் சிம் அலங்கார மாலைகள் முன்பு மூங்கில், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் கிடைத்தன.

இப்பொழுது இவை சுடுமண்களிலும் விதவிதமான வண்ணங்களில், பாரம்பரியமான பூஜை மணியின் வடிவத்தில் கிடைப்பதால் பால்கனி மற்றும் பூஜை அறையின் முகப்பில் தொங்கவிட அழகான தோற்றத்தைத் தரும். அத்துடன் காற்றில் அசையும் பொழுது இனிமையான ஓசையையும் எழுப்பும்.

சுடுமண் சிற்பங்கள்
சுடுமண் சிற்பங்கள்Gemini image

தோட்டத்தை அழகாக்க பலவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் பூந்தொட்டிகள், தண்ணீர் நிரப்பும் சிறு மண்பாண்டங்கள் ஆகியவையும் கிடைக்கின்றன. முக்கியமாக தோட்டத்தை அலங்கரிக்க துளசி மாடம் வெவ்வேறு அளவுகளில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இவை தோட்டத்தை ஒரு அற்புதமான இடமாக மாற்றுகிறது.

பூஜை அறை சிலைகள்:

விநாயகர், லட்சுமி போன்ற தெய்வங்களின் அழகிய சிலைகளையும் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அத்துடன் வீட்டின் நுழைவாயிலில் சுடுமண் உருளியில் தண்ணீர் நிரப்பி, பூக்களை மிதக்கவிடுவது மங்களகரமான தோற்றத்தைத் தரும்.

சுவர் அலங்காரம் (Wall Decor):

சுவர்களில் மாட்டி வைக்கக்கூடிய பாரம்பரிய கலைநயம் மிக்க சுடுமண் தட்டுகள் மற்றும் சிறிய ஓவியங்கள் வீட்டின் சுவர்களுக்கு புதிய பொலிவைக் கொடுக்கும். பழங்குடி மனிதர்களின் முக அமைப்பைக் கொண்ட சுவர் சிற்பங்களும், சூரிய கடவுளின் சிற்பங்களும், நடன கலைஞர்களின் உருவங்களும், இயற்கை காட்சிகளும் சுவர் அலங்காரத்தில் தனிச்சிறப்பைப் பெறுகின்றன.

விளக்கு மாடங்கள்:

மாலையில் பால்கனியில் ஏற்றுவதற்கு ஏற்ற துளைகள் கொண்ட சுடுமண் விளக்குக் கூண்டுகள் அழகான ஒளி அமைப்பைத் தருவதுடன், கலைநயம் மிக்க தோற்றத்தைத் தந்து வீட்டிற்கும் அழகு சேர்க்கும்.

இதையும் படியுங்கள்:
ஜீரோ பட்ஜெட் ஹோம் டெக்கோர்: மன அழுத்தத்தைப் போக்கி வீட்டைப் பசுமையாக்கும் எளிய ரகசியம்!
சுடுமண் சிற்பங்கள்

பறவைகளுக்குத் தண்ணீர் கிண்ணம்:

பால்கனியின் சுவர்களில் தொங்க விடக்கூடிய அல்லது தரையில் வைக்கக்கூடிய சுடுமண் தண்ணீர் பாத்திரங்களை வைக்கலாம்.

சுடுமண் சிற்பங்களின் சிறப்புகள்:

களிமண்ணால் செய்யப்பட்டு, சூளையில் சுடப்பட்டு உறுதியாக உருவாக்கப்படுவதால் இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் இயற்கையானது.

எளிதில் தேய்மானம் அடையாது; துருப்பிடிக்காது மற்றும் பல வண்ணங்களில் கிடைப்பதால் வீட்டின் உட்புற வடிவமைப்பிற்கு மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

சுடுமண் சிற்பங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இன்றும் சில கிராமங்களில் காவல் தெய்வங்களாக கோவில்களில் சுடுமண் சிற்பங்களே இருப்பதும், மூலவர் மட்டுமின்றி குதிரை, நாய் போன்ற சுடுமண் சிற்பங்களுக்கும் பூஜை செய்து வழிபடும் வழக்கம் நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்:
1 மணி நேர மேஜிக்: சோர்வில்லாமல் வீட்டை பளபளப்பாக மாற்ற எளிய வழிகள்!
சுடுமண் சிற்பங்கள்

பராமரிப்பு முறைகள்:

சுடுமண் பொருட்களை சுத்தம் செய்ய ரசாயனங்கள் கலந்த சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்.

மென்மையான உலர்ந்த துணி அல்லது சிறிய பிரஷ் கொண்டு தூசுகளைத் தட்டி பராமரிக்கலாம்.

வண்ணம் தீட்டப்பட்ட சிலைகள் எனில் அதன் மேல் நேரடியாகத் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இயற்கையோடு இணைந்த கலைநயமிக்க வாழ்வியலை உங்கள் வீட்டிற்குள் கொண்டுவந்து, பார்வையாளர்களை வியக்க வைக்கும் ஒரு தனித்துவமான சூழ்நிலையை உருவாக்குவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com